Wednesday, March 27, 2013

கவிதைகள்...


ரகசிய ரகசியங்கள்..

என் பெற்றோரிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் சகோதரியிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் சகோதரியிடமும்
 சொல்லாத ரகசியங்களை
என் நண்பர்களிடம்
 சொல்லியிருக்கிறேன்
என் நண்பர்களிடமும்
 சொல்லாத ரகசியங்களும்
என்னிடம் இன்னுமும்
 ரகசியமாயிருக்கிறது.
மிச்சமிருக்கும் இந்த
 ரகசிய ரகசியங்களை
நினைக்கும்போது சில
சிரிப்பையும், சில அழகையையும்
தருகின்றது..


 பிடித்த கவிதை எது?

கவிஞன் ஒவ்வொருவனும்
 கர்பிணிப் பெண்தான்
மனதில் கருவான கவிதை
 பிரசவம் ஆகும் வரை
அதிலும், தலைபிரசவம்
 அப்பப்பா சொல்லிமாளது
தான் கொண்டது பொய்
 கர்பமா என்று சந்தேகம்
கவிஞனுக்கே இருக்கும்
 தலைக்கவிதை பிரசவமாகும் வரை...
பெற்றெடுத்த தாய் போல்தான்
 கவிஞனும் அவன்
பெற்றக் கவிதைப்
 பிள்ளைகளில் பேதம் பார்ப்பதில்லை
தயவுசெய்து எந்த கவினிடமும்
 கேட்காதீர்கள் உங்கள்
கவிதையில் பிடித்தது எது என்று.

Saturday, March 23, 2013

சமூகமும் கவிதையும்..


போராட்டம்...
அந்தக்கால அரசியல்வாதிகள், தியாகிகள்
போராடியதெல்லாம் எம்மாத்திரம்
இன்று நாங்கள் போராடுகிறோம்,
காவிரி தண்ணீருக்காக,
கற்பழிக்கப்பட்ட பெண்ணிற்காக
பசித்திருக்கம் ஜீவன்களுக்காக,
ஈழத்திற்க்காக,
பெண்ணுரிமைக்காக,
அணு உலைக்காக,
என்ன? எப்படியென்று விளக்க வேண்டுமா?
ஐயோ! எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை..
இதோ தொடர்ந்து போராட
இன்னொரு புதுப்பிரச்சனை கூட கிடைத்துவிட்டது.
வாருங்கள் போராடுவோம்..
லைக்கும்(like), கமெண்டுமாக(comment)
முகநூல்(facebook) பக்கத்தில்...


என் பெயர்...
எனக்கு ஞாபகமிருக்கிறது
பச்சை வண்ண ஆடைதான்
எனக்கு எப்போதும் விருப்பமானது
அதை அணிந்து சல சலவென
சத்தம்போட்டு ஓடிக்கொண்டிருப்பேன்
அப்பொழுதுதான் அது நடந்தது
ஒருவன் அல்ல, பல பேர்
ஒரு நாள் அல்ல, பல வருடங்கள்
ஒரு நேரமல்ல, எந்நேரமும்
என்னை மாறி மாறி சீரழித்தார்கள்
சிலர் என் அழகை அள்ளிப்போனர்கள்
சிலர் அழுக்கை இட்டு நிரப்பினார்கள்
என்னை விட்டுவிட சொல்லி கதறினேன்
காப்பாற்றச் சொல்லி மன்றாடினேன்
கேட்பாரில்லை..
மேலும், மேலும் சீரழிக்கப்பட்டேன்
கடைசியாக புள்ளிவிபரம் கொடுத்தார்கள்
என் அளவுக்கு சீரழிக்கப்படவர்கள்
யா(ஆ)றும் இல்லையாம்..
என் வனப்பை இழந்து
நாதியற்று கிடக்கிறேன்
என் பெயர் "பாலாறு"

மனதை மிகவும் பாதித்த பாலாறு பாழ்பட்டது குறித்தான ஆவணப்படம் யூடியூபில் https://www.youtube.com/watch?v=mxksl0VgBOY


எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்...
ஏற்கனவே அழித்தொழுத்துவிட்டீர்கள்
சின்ன சிட்டுக்குருவியில் ஆரம்பித்து
பெரிய காட்டுயானை வரை
இனி அழிந்துபோன இனங்களில்
எங்களையும் சேர்த்துக்கொள்ளு(ல்லு)ங்கள்..
இப்படிக்கு,
உங்களுக்காகவே வாழ்ந்த
ஆறு, மலை, ஓடை, ஏரி, குளம், வாய்க்கால்...

மதிப்பெண்...
கல்வி கார்ப்பரேட் தொழிலானது
வாத்தியார்கள் வியாபாரிகளானார்கள்
பள்ளிப்பிள்ளைகள் பிராய்லர் கோழிகளனார்கள்
மதிப்பெண், மதிப்பிழந்தது.


Friday, March 22, 2013

தோழ(ழி)மைக் கவிதைகள்..


முன்னாள் தோழி
இனி உன்னோடு என்னால்
 உரிமையாக பேச முடியாது
என் சுகத்தையோ, சோகத்தையோ
 பகிர முடியாது
என் சந்தேகத்தை கேட்க
உன் சந்தேகத்தை தீர்க்க முடியாது
ஏனென்றால்
நான் முன்பிருந்த நானில்லை
நீ முன்பிருந்த நீயில்லை
விட்டுச் சென்றுவிட்டன
ஜிவன்கள்
ஏனென்றால்.. நீ
இன்னொருவனுடைய இந்நாள் மனைவியான
என்னுடைய முன்னாள் தோழி..


அழகான அந்த நாள்
உன் திருமணத்திற்குப் பின்
நாம் தொடர்பற்றுப் போனபின்
11 மாதங்கழித்து
ஒரு வழக்கமான என்னுடைய
அவசர காலையில்
என் அறையின்
முகத்தளவு கண்ணாடியில்
தலைவாரிக்கொண்டிருந்த போது
புதிய எண்ணிலிருந்து அழைப்பு
"ஹலோ.." மறுமுனையில்
"களுக்" என்கிற உன் சிரிப்பு..
எனக்கே ஆச்சரியம்தான்
எப்போதுமே தொலைபேசியில் குரலை
அடையாளம் காணமுடியாத நான்
உன் குரலை, சிரிப்பை மட்டும்
எப்படி கண்டுகொண்டேனென்று
உனக்குத் தெரியாது
உன் அழைப்பிற்குப்
பிறகான என்னுடைய அந்தநாள்
எவ்வளவு அழகாயிருந்தென்று... ;)


ஞாபகமிருக்கிறதா...?
உனக்கு என் ஞாபகம்
எப்போதாவது வந்ததுண்டா?
இப்படி நீ கேட்டபோதெல்லாம்
"இல்லை" என்று மட்டும்தான்
நான் சொல்லியிருக்கிறேன்..
இப்பொழுது அடிக்கடி
உன் ஞாபகம் வருகிறது..
சொல்ல முடியவில்லை..
ஏனென்றால்,
நான் உரிமையோடு பேசும் என் தோழி
இன்று இன்னொருவனின் உரிமை மனைவி.