Tuesday, February 11, 2014

படித்த புத்தகம் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 'சத்திய சோதனை'


புத்தகத்தின் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார்கள் 'சமகால அரசியல் நிகழ்வுகளைப் புதிய கோணத்தில் அணுகும் அரசியல் அங்கத நாவல்' என்று.

ஒரு அரசியல்வாதி அவருடைய சுயசரிதையை எழுதும் கோஸ்ட் எழுத்தாளர் (Ghostwriter) ஒருவர், அரசியல்வாதியின் நண்பர், ஒரு கொலை, அரசியல், போலிஸ், துரோகம் இவ்வளவையும் வைத்து சமகால(என்றால் 1980-களில்) அரசியலை விறுவிறு திரில்லராக 136 பக்கங்களில் சித்தரித்து உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் இபா. 

அரசியல்வாதி பிரும்மநாயகம் (சிவஞானம்)
(கோஸ்ட்) எழுத்தாளர் வாசு
அரசியல்வாதியின் நண்பர் தணிகை
போலிஸ் ஆலிவர்
போன்று வெகு சில பாத்திரங்களே கதையில் வந்தாலும் தேவையில்லாத நீட்டல் முழக்கள்கள் இல்லாமல் அதேசமயம் ஒடைபோல தெளிவாக கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

புத்தகத்தின் சிறப்பு அதன் விறுவிறுப்பும், எளிய நடையுடன் கூடிய யதார்த்தமும்தான் அதனால் புத்தகத்தை கீழே வைக்கவே மனம் வரவில்லை, புத்தகத்தை 2-3 நாட்கள் எல்லாம் வைத்து படிக்க வேண்டியதில்லை.. சேர்ந்தார்போல் ஒரு 1-11/2 மணிநேரம் இருந்தால் போதும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம்.  எழுத்தாளனாய் வாழ்வது, அதுவும் சமூக அங்கீகாரம் இல்லாத எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு வேதனையானது என்று ஆங்காங்கே வாசுவின் கதாப்பாத்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.  10-20 வருடங்களுக்கு முன் வந்த கதையிலேயே கௌரவ டாக்டர் பட்டம் என்ன பாடு படுகிறது என்பது தெரிகிறது.  இன்றைய நிலைமையை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணம் டிரஸ்ட் வழியாகப் போவது, அதிகாரமும் பதவி மோகமும் எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதும், சாதரணமாக மிகச்சாதரணமாக வாழ்கையை ஆரம்பக்கும் அரசியல்வாதிகள் பெரிய நிலையை எட்டுவதும் பின்னர் தங்கள் பழைய அடையாளங்களை மறைத்து அல்லது திருத்திக்கொள்வது, கட்சி அரசியல் ஜாதிக்கார வேட்பாளர், இடைத்தேர்தல், கிட்டத்தட்ட இன்றைய பேய்டு நியூஸ் (paid news) களை நினைவுப்படுத்தும் பத்திரிக்கை நிகழ்வுகள், கோப்புகளை திருத்துவது என எல்லாமே இருக்கிறது கதையில் இதில் பலவும் இன்றுவரை மாறவில்லை என்பதும் நிதர்சனமே.

கதையில் தென்னாற்காடு மாவட்ட (இன்றைய கடலூர் மாவட்டம்) இடைத்தேர்தலும் அதற்கு படையாச்சி(வன்னியர்) வேட்பாளர் நிறுத்துவது குறித்தும் செய்தி வருகிறது. இன்றும் கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் இப்படி ஜாதி அரசியல் நடப்பதும், வேற்று கட்சியினரும் குறிப்பிட்ட சாதி வேட்பாளரையே தங்கள் சார்பில் நிற்க வைப்பதும்  எல்லோரும் அறிந்ததே.

நறுக்கு தெரிக்கும் வசனங்கள்
1.  பிரும்மநாயகம், வாசுவிடம் 'அரசியல்லே நல்லது கெட்டதுன்னு எதுவும் கிடையு   எதைப்பத்தியும் உனக்குச் சொந்த அபிப்பிராயம் இருக்கக் கூடாது.  நீ என்னோட நிழல். நிழல் ஊமை பேசாது. புரிஞ்சுதா?'

2. பிரும்மநாயகம் வாசுவிடம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத பணிக்கும்போது,
'மக்கள் இத நம்புவாங்களா?
நம்பும்படியா எழுதவேண்டியது உன்வேலை.  அங்கேயிருக்கிற பாறைக்கு இத்தனை வயசு, பள்ளத்துக்கு அத்தனை வயசுனு ஒருத்தருக்கும் புரியாம நாலைஞ்சு இங்கிலீஷ் வார்த்தகளையெல்லாம் போட்டுக் குழப்பி, மேலெழுத்தும் அடியழித்துமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை உன்னாலே எழுதவா முடியாது? இது உன் கற்பனைக்கு ஒரு சவால் மாதிரின்னு வச்சுக்க.  பின்னாலே என் சுயசரிதை எழுத ஒரு பயிற்சி.  அவ்வளவுதானே?
உங்க சுயசரிதையும் என் கற்பனைக்கு ஒரு சவாலுங்களா?'

3.  ஆலிவர் வாசுவிடம்
'உங்க சத்தியத்துக்கு இதுதான் சோதனை..
இந்திரா பார்த்தசாரதி - படம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து
சத்தியத்திலே என் சத்தியம் உன் சத்தியம் வெவ்வேறே இருக்குதா?
இருக்கு. இதுதான் அரசியல்லே முதல் அரிச்சுவடி பாடம். '

இன்னும் நிறைய நறுக்குத் தெரிக்கும் வசனங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்.



எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 136