Thursday, September 25, 2014

மினி கதைகள்-1 - அன்பு-மதி

"நெடு நாட்களாகத் தேடப்பட்டு வந்த தொடர் கொலைகாரன் மதியழகனை போலீசார் பிடித்து சிறையில் அடைத்தனர்"

"இந்த உலகம் அதிபுத்திசாலிங்களுக்கு மட்டும்தான் சொந்தமாமே, அறிவாளிங்க மட்டுதான் வாழனும் அதனால மத்தவங்களலாம் இவரு கொன்னுடுவாராமே... இவனை கொண்டுபோய் அந்தப் பய கூடவே போடுங்க... எக்கேடும் கெட்டு ஒழியட்டும்"  அடித்தொண்டையில் கத்தினார் இன்ஸ்பெக்டர் கரிகாலன்.

"க்றீச்" என்ற சத்தத்தோடு கதவு மூடி பூட்டப்பட்டது.

ஹூம்... அறிவையும் மதிநுட்பத்தையும் பத்தி இவங்களுக்கு எங்க புரியப்போகுது..?  அடிப்படை அறிவு கூட இல்லாதவங்கலாம் எதுக்கு உயிரோட இருக்கனும் பூமிக்கு பாரமா? அவங்கலாள யாருக்கு என்ன லாபம்?  இந்த மாதிரி அறிவில்லாம அன்பு, பாசம், கருணைனு பேசறவங்களால தான் நம்ம நாடு இன்னமும் பின் தங்கி இருக்கு... அதான் கொன்னேன் இது தப்பா? எதிரிலிருந்தவனிடம் பேசினான் மதியழகன்.

எதிரிலிருந்தவன் சினேகமாய் சிரித்தான்.

இந்த இடத்துல இருந்து தப்பிக்க எனக்கு எவ்வளோ காலம் ஆயிடப்போகுது?  அன்பாம் பாசமாம் கருணையாம்... ஆஆ.... ஹ்க்.. ஹ்க்...

மதியழகன் தொண்டைக்குழிக்கு மேலே சிறு பிளவுடன் இரத்தம் தெறித்துக்கொண்டிருந்தான்...

'உன்னமாதிரி அன்பே இல்லாதவனுக்கு இந்த உலகத்துல இடம் கிடையாதுடா...' கத்தியை துடைத்துக்கொண்டிருந்தான் எதிரிலிருந்த தொடர் கொலைகாரன் அன்பழகன்.

Wednesday, September 3, 2014

எழுத்தாளுமைகள், நீயா நானா, கல்விக்கூடங்கள் சில சிந்தனைகள்.


மோகன்
நீயா நானா நான் விரும்பிப் பார்க்கும் தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் ஒன்று(சில கருத்து முரண்களும், எண்ண வேறுபாடுகளும், தேவையற்ற வணிகநோக்கு தலைப்புகளோடு வேறுபாடுகள் இருந்தாலும் கூட).  நல்ல தகவல்களோடும் கருத்துச்செறிவோடும் இதுபோன்ற ஒரு நிகழ்ச்சி வேறந்த பிராந்திய மொழிகளிலும் (இந்தி, English-ஐ விட்டுவிடுங்கள் அங்கே அர்ணாபும், ரெபக்காவும் 'கத்தி' சண்டை போடுவார்கள், கையில் ஒரு xerox பேப்பரோடு) நடந்துவருவதாக எனக்குத்தெரியவில்லை.  நீயா நானாவின் தகவல்கள் எந்த அளவு மக்களைப் போய் சேர்ந்ததோ எனக்குத் தெரியாது ஆனால், நீயா நானாவின் மிகப்பெரிய சமூக நோக்குச் செயல்பாடு என்று நான் கருதுவது அதன் மூலம் தமிழ்கூறும் நல்லுலகுக்கு பரவலாகச் சென்று சேர்க்கப்பட்ட ஆளுமைகள் தான்.  தொலைக்காட்சி மற்றும் பத்திரிக்கைகள் போன்று மிகப்பெரிய மக்கள் திரளை சென்றுசேரும் பெரு ஊடகங்கள் (mass media) தங்களின் அந்த சாதகத்தைப் பயன்படுத்தி நல்ல விஷயங்களை எல்லோரிடமும் கொண்டு சேர்த்தல் என்பது மிகவும் பாராட்டப்படவேண்டிய விஷயமாகும்.  அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மற்றும் நீயாநானா குழுவினரின் பணி பாராட்டுகுரியது.

  விருத்தாசலத்தில் வசித்து வந்தாலும் விருத்தாசலத்தைச் அதன் சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த எழுத்தாளர்கள் இமையத்தையோ, கண்மணி குணசேகரனையோ, கடற்கரயோ, ரத்தின புகழேந்தியையோ(இவர் இன்னும் நீயாநானாவில் வந்ததாக எனக்கு தெரியவில்லை) 98% சதவித விருத்தாசல மக்களுக்கே தெரியாது.  இவர்களைப் போன்ற ஆளுமைகளை குறிப்பாக எழுத்தாளுமைகளை அந்தந்த பகுதிகளில் இருக்கும் கல்விக்கூடங்கள்தான் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கவேண்டும்.  பெரும்பாலான பள்ளிகளும், கல்லூரிகளும் ஆண்டுவிழாக்கள் மட்டும் நடத்தி அதுவும் திரையிசைப் பாடல்களுக்கு ஆட்டம் மட்டும் போட்டு தங்கள் வருடாந்திர கல்விச்சேவையை முடித்துக்கொள்கின்றன.  இதைத்தாண்டி பேச்சரங்கங்கள், விவாத வாய்ப்புகள் போன்றவற்றை கல்விக்கூடங்கள் குறைந்த பட்சம் கல்லூரிகள் மட்டுமாவது இவர்கள் தலைமையில் நடத்தவேண்டும்.   இவர்கள் போன்ற சிந்தனாவாதிகளுடன் சேர்ந்து பழகிப் பேசும் வாய்ப்புகள் மாணவர்களுக்குப் பற்பல திறப்புகளையும், சிந்தனைகளையும் ஏற்படுத்தும் கூடவே அவர்களுக்கு புதிய வாய்ப்புகளையும் அறிமுகங்களையும் உண்டாக்கும்.  அதனால் உண்டாகப்போகும் சமூக விளைவுகள் இன்று தெரியாது ஆனால் அவை எல்லாமே நம் சமுகத்தை, குறைந்தபட்சம் அந்தந்த வட்டார சமூகத்தையாவது சில பல அடிகள் முன்னேற்றும் என்பது உண்மை.

நீயா நானா மக்களிடம் கொண்டு சேர்த்த மிக முக்கியமான ஆளுமைகளாக நான் கருதும் சிலர்.
மோகன்
கடற்கரய்
அபிலாஷ்  (மத்திய அரசின் யுவபுரஸ்கார் விருது வாங்கியவர்)
இமையம்
கண்மணி குணசேகரன் (மனுசன் ஜெயமோகன், நாஞ்சில் நாடன் கூடலாம் நல்ல தொடர்புள இருக்காரு, இவரோட nativity speech ரொம்ப பிரசித்தம் youtube பாருங்க)
இளங்கோ கல்லானை
அராத்து
முத்துகிருஷ்ணன்
ஆறுமுகத் தமிழன்
செந்தில்நாதன்
ஷாலினி
போன்றோர்.   இதிலும் பெரிய பூச்சுகள் மற்றும் மெனக்கெடல்கள் இல்லாமல் பேசும் மோகன் மற்றும் அபிலாஷ் ஆகியோரின் பேச்சானது  நிறைய தகவல்களை தந்தவிட்டு நம் எண்ணத்தையே கூட சில சமயங்கள் மாற்றிவிடும்.

வணிக நோக்கு சார்ந்த அல்லது பளு குறைந்த(light weighted) மற்றும் தரவுகள் அதிகம் தேவைப்படாத தலைப்புகளில் இரண்டு பக்கத்திலும் சாமானியர்களை வைத்துக்கொண்டு, இரண்டு அல்லது மூன்று சிறப்பு விருந்தினர்களையும் பேச வைத்து நிகழ்ச்சியை நடத்துகிறார்கள்.  ஆனால் சிற்சில நீயாநானா நிகழ்ச்சிகளில் அதன் தலைப்பின் தன்மை காரணமாக(பொருளாதாரம், பண்பாடு, கலாச்சாரம் போன்ற ஆழ்ந்த புரிதல் மற்றும் தரவுகளை கோறும் தலைப்புகள்) இரண்டு தரப்புகளிலும் ஒரு கீழ் வரிசையை மட்டும் Intellectuals-ஐ வைத்துக்கொண்டே ஒரு முழு நிகழ்ச்சியையும் ஓட்டி விடுகிறார்கள்.  மீதமுள்ள 3 அ 4 வரிசைகளுக்கு ஆள் மட்டும் நிரப்பி அவ்வப்போது(மொத்த நிகழ்ச்சிக்கும் சேர்த்து ஒரு 10 நிமிடம்) மைக்-ஐ அவர்களிடம் கொடுத்து அல்லது விவாதத்தின் போது அவ்வப்போது ஒரு அழகான பெண் அல்லது ஆணை காட்டுவதற்காகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.  நல்லது நடந்தால் சரி.

Monday, September 1, 2014

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்...

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்*
greader பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து சில பல தமிழ் எழுத்தாளர்களை விடாமல் தேடிப்பிடித்து படித்து வருகிறேன்.  அப்படித்தான் எப்படியோ சமஸ் அவர்களின் எழுத்து எனக்கு அறிமுகமானது.  அறையில் அமர்ந்து கொண்டு கற்பனையில் கதை, கவிதை படைக்கும் எழுத்தாளர்கள் உண்டு, தன் சொந்த அனுபவங்களை சுவைபட எழுதும் எழுத்தாளர்கள் உண்டு, திரைவிமர்சனங்களும் அரசியல் பகடிகளும் சமூக பகடிகளும் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு, வேறு பணிகளில் இருந்துகொண்டு பொழுது போக்கிற்காகவும் hobby-யாகவும் எழுதுபவர்களும் உண்டு.  சமஸ் தனது எழுத்துகளுக்காக அந்தந்த களங்களுக்கே செல்லக்கூடியவர்(தன் ஊடகப் பணி சார்ந்து பணி நிறுவனத்தின் மூலம் என்றே நினைக்கிறேன், இவர் தற்போது தமிழ் இந்துவில் பணியாற்றிவருகிறார்).

  பிரச்சனைகளை அதன் இடங்களுக்கே சென்று அறிந்து, அங்குள்ள மக்களை பார்த்து அவர்கள் அனுபவங்களைப் பெற்று எழுதி வருகிறார்.    (இதில் எதிலும் சேராத ஒரு வகையான என்னைப்போன்ற எழுத்தாளர்களும் உண்டு.  எப்புடி...? ;) just for fun.  ஒன்னுமே எழுதாம நான்லாம் எப்புடிங்க எழுத்தாளன் ஆகமுடியும்.  அதான் அப்பப்ப இப்புடி நானா ஜீப்புல ஏறி ரவுடி ஆயிக்கிறது - நன்றி வடிவேல்).

முதலில் (தேர்தலின் போது) இந்தியாவின் வண்ணங்கள் என்று இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கை, பிரச்சினை, அரசியல் நிலைப்பாடு என்பது குறித்து எழுதிவந்தார்.  தற்போது தமிழ்நாட்டு கடற்கரைகளைப் பற்றியும் மீனவ (கடலோடி என்பதுதான் சரியாம்) சமுதாயத்தைப் பற்றியும் அங்குள்ளப் பிரச்சினைகளைப் பற்றியும், அம்மக்களின் வாழ்வையும் பாடுகளையும் எழுதி வருகிறார் (நீர் நிலம் வனம்).  அவரின் எழுத்து ரத்தமும் சதையுமாக இருக்கிறது, சிற்சில கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியையும், சமூக கோபத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.  சில கட்டுரைகள் நமக்கு புதிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றுதருகிறது.  சில கண்ணீரை வரவழைக்கிறது, நம் அறியாமையை, இயலாமையை இடித்துரைக்கிறது.  எல்லா கட்டுரைகளிலும் மீனவர்களின் தாங்கள் மீனவர் என்பதிலும் தங்கள் வாழ்க்கை குறித்தும், தாம் வாழும் அந்த கடற்கரை குறித்தும் பெருமையும் கர்வமும் இழையோடுகிறது இதுவரை விவசாயிகளைப் பற்றி இருந்த அதே போன்ற ஒரு பெருமித எண்ணம் நமக்கு மீனவர்கள் மீதும் ஏற்படுகிறது.  கனிம மணல் பிரச்சனையிலிருந்து, கடலில் கழிவுகள் கொட்டுவது வரை பல பிரச்சனைகளையும் தன் கட்டுரைகளில் காட்டிச் செல்கிறார்.  தென் மாவட்டங்களில் புற்றுநோய் ஏதோ சாதாரண விஷயம் போல் ஆகிவிட்டிருக்கிறது எலும்பு புற்று, நுரையில் புற்று, இரத்தப்புற்று என்று வகை வகையாக தாக்கப்படுகிறார்கள் என்கிறார்.  படிக்கும்போதே கண்ணீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.  நாம் எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இருக்கிறோம்... நம் மக்களின் பிரச்சனை தெரியாமலே நாம் ஈரான், இஸ்ரேல்-பாலஸ்தீனம், ISIS என்று முகநூலிலும் டிவிட்டரிலும் பொங்கி வெடிக்கிறோம் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்).  நம் ஊர் செய்தி ஊடங்களே இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காதபோது வடநாட்டு இந்தி ஆங்கில ஊடங்கள் எங்கிருந்து இதையெல்லாம் பேசப்போகிறது?  இந்தக் கட்டுரையில் படிக்கும் அவலங்கள் ஏதேனும் டில்லியிலோ, மும்பையிலோ நடந்திருந்தால் இந்நேரம் எல்லா செய்தி ஊடங்களும் இதைப் பேசியிருக்கும் (டிஆர்பி ஏற்றதான்), நாமும் ஹேஷ் டேக்களுடன் சமூக வலைதளங்களில் சீறியிருப்போம், முகநூல் cover photo-வை கருப்புக்கு மாற்றியிருப்போம், மெழுகு வர்த்திகளை ஏற்றிய போட்டோக்களைப் பகிர்ந்திருப்போம், அரிதிலும் அரிதாக சென்னையில் மெரினாவில் ஒரு மாலை கூடியிருப்போம் பின்னர் '''மறந்திருப்போம்'''.  விடுங்கள் எதற்கோ இந்தப் பதிவை ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன். 

முடிந்தால் சமஸின் கட்டுரைகளை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.  அவரின் வலைப்பூ சுட்டி http://writersamas.blogspot.in/


*-> புகைப்படம் அவருடைய வலைப்பூவிலிருந்து இணைக்கப்பட்டது.