Tuesday, June 30, 2015

கவிதையும் காத தூரமும்...

  நானே கூட அவ்வப்போது பல வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எதையாவது கொஞ்சமாக சந்தம் சேர்த்து எழுதி கவிதை என்று கூறிக்கொள்வதுண்டு என்றாலும் இப்போதும் எனக்கு கவிதை என்றால் காத்தூரம் தான்(சங்கப்பாடல்கள், திருக்குறள், சமய இலக்கியங்கள்  (கவிதையில் சேர்ப்பார்களா?), பாரதி தவிர்த்து).  பெரும்பாலும் யாரிடமும் நான் கவிதை எழுதியிருக்கிறேன் படியுங்கள்/பாருங்கள் என்று சொல்வதில்லை குறிப்பாக நண்பர்களிடம், சொன்னால் விளைவு எப்படி இருக்கும் என்று ஓரளவிற்க்கு ஊகித்திருப்பதினால்.  ஆனாலும், நானே எழுதிய  (பெரும்பாலும் காதல் அவ்வப்போது சமூகக்கோபத்தில்) இந்த  கவிதை என்று நானே சொல்லிக்கொள்ளக்கூடிய விடயங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்து கட்டக்கடைசியாக நம்முடைய வலைப்பூ சும்மாதானே இருக்கிறது என்று அதில் பதிவேற்றிவிடுவேன் (அப்பாடா ஒரு பாரம் இறங்கியது). 

  இந்த இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் சென்றால் படிமம், பின்/முன்/நடு/centre/side நவீனத்துவம், கூறுகள், வெளிப்பாடுகள், திறப்புகள் என்று எதையாவது பேசி நம்மை பயமேற்றிவிடுவார்கள் இல்லையா.  அப்படி நம்மை கொஞ்சம் உசுப்பேற்றி, பயமேற்றி "டேய், கார்த்திகேயா அப்புடி என்னா தாண்டா எழுதியிருப்பானுங்க? படிச்சிதான் பாத்துடேன்" என்று ஒரு கட்டத்தில் முறுக்கேறி கவிதை படிக்கலாம் என்று திருவான்மியூர் நூலகத்தில் தேடியபோது கலாப்ரியா கவிதைகள் கிடைத்தது.  வண்ணதாசன்(கவிதை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் வண்ணதாசனில்(கல்யாண்ஜி) இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை படித்ததாக ஞாபகம், இதுவரை அவரைப் படிக்கவில்லை :( ), ஜெயமோகன் உள்ளிட்ட பல பெரும் ஆளுமைகள் முன்னுரை, பின்னுரை, மதிப்புரை எல்லாம் எழுதியிருந்ததால் எடுத்துவிட்டேன்.   சுமாராக 2 renewal-ம்  சில நாட்களும் ஆயின படித்து முடிக்க (நாவல்களே கூட வருடக்கணக்கில் படித்திருக்கிறேன்/படித்துக்கொண்டிருக்கிறேன் :p).  படித்து முடித்தப்பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை, கவிதைகளைக் கூட கடந்து வந்துவிட்டேன்.  கடைசியாக ஜெயமோகன் அவர்கள் ஒரு 70+ பக்கத்திற்கு எழுதியிருந்த விஷயங்களைத்தான் கடைசிவரை முழுமையாக படிக்க/புரிந்து கொள்ள முடியவில்லை(ஜெயமோகன் ஐயாவுக்குத் தெரிந்தால் ஒரு முழுக் கட்டுரை எழுதி என்னை (அ) என்னைப்போன்றோரை திட்டவும் கூடும். என்ன செய்ய? நம் குருவி மூளைக்கு அவ்வளவுதான் போல... ).  ஜெயமோகன் எனக்குப் பிடித்த, என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்; அவரின் காடு, ஏழாம் உலகம், உலோகம் போன்றவற்றை எல்லாம் ஒரு தவம் போல படித்திருக்கிறேன் (இன்னும் விஷ்ணுபுரம் படிக்கவில்லை).  ஏழாம் உலகம் எல்லாம் படித்து அழுதிருக்கிறேன்.  ஆனாலும் கலாப்ரியா கவிதைகள் புத்தகத்தில் அவர் எழுதியிருந்ததை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை. 

  கொஞ்சமாக கவிதையை புரிந்து/பிடித்து படித்ததென்றால் அது கவிக்கோ அப்துல் ரகுமானின் பால்வீதி, மு. மேத்தாவின் கவிதைகள், தபூ சங்கரின் கவிதைகள் (இலக்கிய பெரியவர்கள் தபூ சங்கரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்) மற்ற சில மட்டும்தான்.  அதைத் தவிர்த்து பயத்துடனேயே அணுகி பாதியில் விட்டவைதான் அதிகம்.  ஆனாலும், இப்பொழுது விட்டு விடுவதாக இல்லை "கலாப்ரியா கவிதைகள்" நூலகத்தில் திருப்பி கொடுத்தாகிவிட்டது இப்போது "ஜெயகாந்தன் கவிதைகள்" எடுத்துவந்துள்ளேன்.   பார்ப்போம் எவ்வளவு தூரம் போகிறேன் என்று... :)

Thursday, January 29, 2015

பேசா மொழி...


அவளும் மென்பொறியியல் தான்
  அலுவலகம் கூட என் அலுவலகத்தின் எதிரில்தான்
அவள் அழகுக்கும் குறைவில்லைதான்
  அனுதினமும் மின்தூக்கியில் அருகேதான்
ஆண்டுகளாய் இதே நிலைதான்
   ஆனாலும்,  " நீ அழகாய் இருக்கிறாய் " என்று
சொல்லவில்லை தான்(நான்)
         ...
அடுத்த மொழி
        ...
வார இறுதியில் எல்லாம் ஊருக்குச் செல்வேன்
  வாரம் தவறாமல் குருவாயூர் இரயிலில் திரும்புவேன்
வாராவாரம் அவளும் வருவாள்
  இருவருக்குமே ஒதுக்கீடில்லா பயணச்சீட்டுதான்
இடம் கிடைத்ததும் அமர்ந்துவிடுவாள்
  ஆங்கில நாவல் உண்டு அவளுக்கு
அழகுதமிழ் நூலகப் புத்தகம் உண்டு எனக்கு
  அமைதியோடு அழகு கொஞ்சும் முகம் அவளுக்கு
அவளோடு பேசிட துடிக்கும் அகம் எனக்கு
  நாட்கள் ஆண்டுகளாய் ஆயின நித்தம்
எனக்குள் பேசா மொழிகள் தான் மிச்சம்

என் பேசா மொழிகளை எல்லாம்
  சேர்த்துக்கொண்டே வருகிறேன்
கோடைகால எறும்பு போல
   வசந்தகால தேனீ போல
பேசித் தீர்க்கும் நாளுக்காகவும், ஆளுக்காகவும் ;)

( பேசித்தீர்க்க ஆள் கிடைச்சாச்சு...... :) :D   பேசிக்கொண்டிருக்கிறேன்,  என்றும் தீராமல் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற  பேராவலுடன்.... )

Wednesday, January 28, 2015

நீ பிடித்ததினால்...

நான் நிறைய கதைகள் படிப்பேன்
  எனக்கு கதைகள் பிடிக்கும்
இப்பொழுது கவிதை வாசிக்கிறேன்
  நீ பிடித்ததினால்...


Wednesday, December 31, 2014

யாரோ ஒருவனின் புத்தாண்டு

சந்தோஷம், குதூகலம்
சரக்கு, சைட் டிஷ்
பீச், போன் பேச்சு
பைக் உறுமல்கள்
பார்ட்டி, பஃப்
கேக் வெட்டி கொண்டாட்டம்
...
கந்தலாடையில் மூடிய உடலும்
முகம் மறைத்த சடைமுடியும்
Beggar
By Chandrashekhar Leo Vuppuluri (Own work)
[CC BY-SA 3.0], via Wikimedia Commons
கையில் பழைய பாலித்தின்
கவரோடு,
தான் யாரென்றும் தெரியாத
தன்னை யாருக்கும் தெரியாத
'யாரோ ஒருவன்'

நெடிதுயர்ந்த பன்னாட்டு
ஐடி நிறுவனத்தின் சுவரோடு
வெறுமையாக இருந்த
சாலையை வெறித்தபடி
நிற்கிறான்..
.
.
கூட்டமா விரையும்
உறுமிய பைக்குகளில் இருந்து
ஒரு குரல்
'ஹேப்பி நியு இயர்'
.
.
முகம் மறைத்த
அந்த யாரோ ஒருவன்
தனக்குத்தானே சிரித்துக்கொள்கிறான்
..
மீண்டும் சாலை
வெறுமையானது.

Thursday, November 20, 2014

சிந்துவெளி எழுத்துமுறை திராவிட மொழிக்குடும்ப எழுத்துமுறையே - ஐராவதம் மகாதேவன் உரை.

"ஐராவதம் மகாதேவன்" தொல்லியல், அகழ்வாராய்ச்சி மற்றும் (தமிழ்) கல்வெட்டியல் துறையில் இந்தப்பெயருக்கே ஒரு தனி மரியாதை உண்டு.  ஆம், சமஸ்கிருதமே ஆதிமொழி என்று உரத்து ஒலிக்கும் பல குரல்களுக்கிடையே தமிழைத் தாங்கிப்பிடிக்கும் (உரிய ஆதாரங்களுடன்) ஒரு குரல் இவருடையது.  இதுவரை பல கல்வெட்டு ஆதாரங்களையும், ஆராய்ச்சி கட்டுரைகளையும் வெளியிட்டுள்ள இவர் சமீபத்தில் (14-11-2014 அன்று) சென்னையில் உள்ள ரோசா முத்தையா நூலகத்தில் உரை நிகழ்த்தினார். 

எவ்வளவோ முயன்றும் நிகழ்ச்சி முடிந்த பின்னரே என்னால் சென்று சேர முடிந்தது.  இருந்தாலும் இருந்த கூட்டத்தைப் பார்த்துமே மனதிற்குள் ஒரு சந்தோஷம் பூத்துவிட்டது (நம் தமிழை எப்படியும் வாழவைத்துவிடுவார்கள் என்றுதான் வேறென்ன...).   நிகழ்வில் பல முக்கிய தமிழ் முகங்களை காணமுடிந்தது.  எனக்குப் பரிச்சயமான (என்றால் எனக்கு இவங்கள தெரியும், ஆனா அவங்களுக்கு என்ன தெரியாதுனு அர்த்தம்)  கிழக்கு பதிப்பகம் பத்ரி சேஷாத்ரி, சூழியலாளர் மற்றும் திரைவிமர்சகர் தியடோர் பாஸ்கரன், இந்திய லினக்சு பயனர் குழுமம், சென்னை - இன் ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் பலர்.

ரிக் வேதத்தின் வழி, சிந்துவெளி எழுத்துவடிவத்திற்கான திராவிட சான்று - ஓர் ஆய்வு (A loose translation of "Dravidian Proof of the Indus Script via Rig Veda A Case Study" தமிழாக்கத்தில் தவறிருந்தால் பொறுத்துக்கொள்ளவும்) என்கிற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் நிகழ்படம் (Video) இங்கே இருக்கிறது



1. ஐராவதம் மகாதேவன் அவர்களைப் பற்றிய மேலதிக தகவல்களுக்கு தமிழ் விக்கிப்பீடியாவில் அவரைப் பற்றிய பக்கத்தை இங்கே படிக்கலாம்.

2. தமிழ் பிபிசியில் இந்த உரை குறித்த செய்தி