Showing posts with label புத்தகம். Show all posts
Showing posts with label புத்தகம். Show all posts

Sunday, August 31, 2014

இணையத்தில் வாசித்தல் மற்றும் வாசிக்க சில எழுத்தாளுமைகளின் சுட்டிகள்

   வாசிப்பு என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் அது ஒருவர் படிக்கும் புத்தகங்களின் வகையில் (Genre) ஆரம்பித்து, அவர் படிப்பதற்கு பயன்படுத்தும் ஊடகம் (medium), படிக்கும் வேகம், மொழி, இடம், காலம் என பலவகையிலும் வேறுபடும்.  தற்காலத்தில் ஒருவர் படிக்க பயன்படுத்தும் ஊடகத்தை 1. காகித அடிப்படிடையில் (hard copy) 2. மென்பொருள் அடிப்படையில் (soft copy) என்று இரண்டு பெரும் பிரிவாகப் வகைப்படுத்தலாம்(3.  இணைய இணைப்பின் உதவியுடன் உலாவியில் படிப்பதும் உள்ளது அது கிட்டத்தட்ட 2வது வகைதான்).  இதிலும் மென்பொருள் அடிப்படையிலான புத்தகம் என்பது கணினியில் படிப்பது தொடங்கி அலைபேசி, பலகைக்கணினி போன்றவற்றையும் தாண்டி புத்தகத்திற்கெனவே பயன்படுத்தும் வகையில் கிண்டில் வரை வேறுபடுகிறது.  இதிலும் புத்தகத்தின் மென்பொருள் கோப்பு வடிவத்தின்(format) அடிப்படையில் epub, pdf, html என்று பலவாறு இருக்கிறது.  இன்றுவரையில் காகிதப் புத்தகங்களையே கொண்டாடும் பலரும் (நானும்) கொஞ்சம் கொஞ்சமாக மென்புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  கல்லில் வடித்து, செப்புப் பட்டயங்களில் ஏற்றி, ஓலைச்சுவடிகளில் எழுதி அதைப் படியெடுத்து, காகிதத்தில் அச்சடித்து அதை நகலெடுத்து எப்படி எப்படியோ உருமாறிய எழுத்தும், புத்தகங்களும், வாசிப்பும் இந்த 21-ம் நூற்றாண்டில் மிகச் சில வருடங்களுக்கு முன் எடுத்துள்ள அவதாரம் தான் மென் புத்தகம்.  சரி இப்பொது இணைய வாசிப்பைப் பற்றியும், என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம் என்று பார்க்கலாம்.

இணையத்தில் படித்தல்:
சில வருடங்களுக்கு முன்புவரை கூட இணைய இணைப்பும் அதன் பயன்பாடும் ஒரு சிலரால் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருந்துவந்தது.  அதற்கான காரணங்கள் இணைய பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய விலை, பயன்பாட்டிற்கு வேண்டிய உபகரணங்களின் விலை மற்றும் அதன் கிடைத்தல், பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு இன்னும் சில.  இணையம் அலைபேசியின் மூலம் பயன்படுத்தக்கூடிய நிலை வந்ததும், அலைபேசிகளின் சந்தை மற்றும் அலைபேசி இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் போட்டி ஆகியவற்றால் இவற்றின் விலை மட மடவென சரிந்து எல்லோரும் பயன்படுத்தும் நிலை வந்தது.  இது பல சாதக பாதங்களை உள்ளடக்கியிருந்தாலும் வாசிப்பை ஒரு பழக்கமாகக் கொண்டவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை திறந்துவிட்டது அதுதான் இணையத்தில் வாசித்தல்.  இணைய வாசித்தல் பெருக ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களும், எழுத்துதொடர்பான நிறுவனங்களும் தங்களுக்கென இணையதளத்தை உருவாக்க ஆரம்பித்தன (Survival of the fittest & Adopt the technology as soon as possible).  வாசிப்பவர்களும் பல விதமான மென்பொருட்களைப் பயன்படுத்தி அவர்கள் இணையதளத்தை அனுக ஆரம்பித்தனர்.  இதனால் எல்லா வாசகர்களையும் சென்றுசேரவும், திருப்திபடுத்தவும் இந்த இணையதளங்கள் பல வித வடிவங்களை எடுக்க ஆரம்பித்தன உதாரணத்திற்கு ஒரே இணையதளம் மேசைக்கணினி, அலைபேசி, பலகைக்கணினி என்று பல வித கருவிகளுக்கே ஏற்ப தன்னுடைய இணைய இடைமுகங்களை (Interface) உருவாக்கின.  அதன்பிறகு படிப்பானைப் ([feed] reader) பயன்படுத்தும் பயனர்களுக்காக RSS, Atom வகையறாக்களிலும் தங்கள் இணைய பக்கங்களை தர ஆரம்பித்தன.  அதற்கு அடுத்து தங்கள் வாசகர்களுடன் எப்போது தொடர்பிலிருக்க வேண்டியும், தம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியும் (வணிக நோக்கும் உண்டு), வாசகர்கள் எந்நேரமும் வாசம் செய்யும் சமூக இணையதளங்களான facebook, twitter போன்ற இடங்களிலும் தங்கள் கணக்குகளை ஆரம்பித்தன.  இன்று ஒருவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவிட்டால் அது rss மற்றும் atom feed-ஆக மாறுகிறது, முகநூல் நிலைதகவலாக (status message) மாறுகிறது, twitter-ல் கீச்சாக மாறுகிறது இப்படி பல வடிவத்தில் வாசகனை சென்றடைகிறது.

என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம்:

விருது வென்ற, நன்கு பரிச்சயமான எழுத்தாளர்கள் தொடங்கி, விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கும், விருது பற்றி கவலைப்படாத, மனதிருப்திக்காக, வணிக நோக்கில் என பல காரணங்களுக்க எழுதும் பலரும் தங்களுக்கென ஒரு இணையதள பக்கமோ, ஒரு வலைபூவோ குறைந்த பட்சம் ஒரு முகநூல் பயனர்கணக்கிலோ தொடர்ந்து எழுதி இணையத்தில் இட்டு வருகிறார்கள்.  அப்படி எழுதும் ஒரு சிலரின் இணையபக்கம், வலைப்பூ, முகநூல் பக்கங்களை உங்களுக்காக கீழே பட்டியலிடுகிறேன். 

குறிப்பு: இது ஒரு சிறு பட்டியல் மட்டுமே முழுமையான பட்டியல் அல்ல(தர வரிசைப் பட்டியலும் அல்ல) எனவே, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடாமல் விட்டிருந்தால் கோபப்படவேண்டாம்.  பின்னூட்டதில் அவர்களை பற்றி நீங்களே அறிமுகப்படுத்திவிடுங்கள்.  நான் புதிதாக அறியும் எழுத்தாளர் விவரங்களை நானும் அவ்வப்போது இதே பதிவில் சேர்த்து விடுகிறேன்.


1எழுத்தாளர்website
2ஜெயமோகன் www.jeyamohan.in
3சாரு நிவேதிதாwww.charuonline.com/
4எஸ். ராமகிருஷ்ணன்www.sramakrishnan.com/
5பத்ரி சேஷாத்ரிwww.badriseshadri.in/
6வா. மணிகண்டன்www.nisaptham.com
7சமஸ்www.writersamas.blogspot.in/
8அருண் நரசிம்மன்www.ommachi.net/
9வெ. ராமசாமிothisaivu.wordpress.com/
10விமலாதித்த மாமல்லன்www.maamallan.com/
11
12சுகா (சுரேஷ் கண்ணன்)http://venuvanam.com/
13
14கடற்கரய்http://thesanthri.blogspot.com/
15சி. சரவணகார்த்திகேயன்www.writercsk.com/
16என். சொக்கன்http://nchokkan.wordpress.com/
17பா. ராகவன்www.writerpara.com/
18மரபின் மைந்தன் முத்தையாhttp://marabinmaindanmuthiah.blogspot.in/
19பெருமாள் முருகன்http://www.perumalmurugan.com/
20அ. முத்துலிங்கம்amuttu.net/
21ருத்ரன்rudhrantamil.blogspot.com/
22தேவதேவன்http://poetdevadevan.blogspot.in/
23நெல்லைக் கண்ணன்thamizhkadal.blogspot.com/
24அறிவுமதிhttp://arivumathi.wordpress.com/
25வண்ணநிலவன்http://wannanilavan.wordpress.com/
26வண்ணதாசன்http://vannathasan.wordpress.com/
27அழகிய சிங்கர்http://www.navinavirutcham.in & http://azhagiyasingar.blogspot.in/
28பாலகுமாரன்http://balakumaranpesukirar.blogspot.in/
29என். இராமதுரைhttp://www.ariviyal.in/
30நாஞ்சில் நாடன்http://nanjilnadan.com/
31மாலன்http://maalan.co.in/
32கண்மனி குணசேகரன்http://kanmanigunasekaran.blogspot.in/

Tuesday, February 11, 2014

படித்த புத்தகம் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 'சத்திய சோதனை'


புத்தகத்தின் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார்கள் 'சமகால அரசியல் நிகழ்வுகளைப் புதிய கோணத்தில் அணுகும் அரசியல் அங்கத நாவல்' என்று.

ஒரு அரசியல்வாதி அவருடைய சுயசரிதையை எழுதும் கோஸ்ட் எழுத்தாளர் (Ghostwriter) ஒருவர், அரசியல்வாதியின் நண்பர், ஒரு கொலை, அரசியல், போலிஸ், துரோகம் இவ்வளவையும் வைத்து சமகால(என்றால் 1980-களில்) அரசியலை விறுவிறு திரில்லராக 136 பக்கங்களில் சித்தரித்து உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் இபா. 

அரசியல்வாதி பிரும்மநாயகம் (சிவஞானம்)
(கோஸ்ட்) எழுத்தாளர் வாசு
அரசியல்வாதியின் நண்பர் தணிகை
போலிஸ் ஆலிவர்
போன்று வெகு சில பாத்திரங்களே கதையில் வந்தாலும் தேவையில்லாத நீட்டல் முழக்கள்கள் இல்லாமல் அதேசமயம் ஒடைபோல தெளிவாக கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

புத்தகத்தின் சிறப்பு அதன் விறுவிறுப்பும், எளிய நடையுடன் கூடிய யதார்த்தமும்தான் அதனால் புத்தகத்தை கீழே வைக்கவே மனம் வரவில்லை, புத்தகத்தை 2-3 நாட்கள் எல்லாம் வைத்து படிக்க வேண்டியதில்லை.. சேர்ந்தார்போல் ஒரு 1-11/2 மணிநேரம் இருந்தால் போதும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம்.  எழுத்தாளனாய் வாழ்வது, அதுவும் சமூக அங்கீகாரம் இல்லாத எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு வேதனையானது என்று ஆங்காங்கே வாசுவின் கதாப்பாத்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.  10-20 வருடங்களுக்கு முன் வந்த கதையிலேயே கௌரவ டாக்டர் பட்டம் என்ன பாடு படுகிறது என்பது தெரிகிறது.  இன்றைய நிலைமையை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணம் டிரஸ்ட் வழியாகப் போவது, அதிகாரமும் பதவி மோகமும் எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதும், சாதரணமாக மிகச்சாதரணமாக வாழ்கையை ஆரம்பக்கும் அரசியல்வாதிகள் பெரிய நிலையை எட்டுவதும் பின்னர் தங்கள் பழைய அடையாளங்களை மறைத்து அல்லது திருத்திக்கொள்வது, கட்சி அரசியல் ஜாதிக்கார வேட்பாளர், இடைத்தேர்தல், கிட்டத்தட்ட இன்றைய பேய்டு நியூஸ் (paid news) களை நினைவுப்படுத்தும் பத்திரிக்கை நிகழ்வுகள், கோப்புகளை திருத்துவது என எல்லாமே இருக்கிறது கதையில் இதில் பலவும் இன்றுவரை மாறவில்லை என்பதும் நிதர்சனமே.

கதையில் தென்னாற்காடு மாவட்ட (இன்றைய கடலூர் மாவட்டம்) இடைத்தேர்தலும் அதற்கு படையாச்சி(வன்னியர்) வேட்பாளர் நிறுத்துவது குறித்தும் செய்தி வருகிறது. இன்றும் கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் இப்படி ஜாதி அரசியல் நடப்பதும், வேற்று கட்சியினரும் குறிப்பிட்ட சாதி வேட்பாளரையே தங்கள் சார்பில் நிற்க வைப்பதும்  எல்லோரும் அறிந்ததே.

நறுக்கு தெரிக்கும் வசனங்கள்
1.  பிரும்மநாயகம், வாசுவிடம் 'அரசியல்லே நல்லது கெட்டதுன்னு எதுவும் கிடையு   எதைப்பத்தியும் உனக்குச் சொந்த அபிப்பிராயம் இருக்கக் கூடாது.  நீ என்னோட நிழல். நிழல் ஊமை பேசாது. புரிஞ்சுதா?'

2. பிரும்மநாயகம் வாசுவிடம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத பணிக்கும்போது,
'மக்கள் இத நம்புவாங்களா?
நம்பும்படியா எழுதவேண்டியது உன்வேலை.  அங்கேயிருக்கிற பாறைக்கு இத்தனை வயசு, பள்ளத்துக்கு அத்தனை வயசுனு ஒருத்தருக்கும் புரியாம நாலைஞ்சு இங்கிலீஷ் வார்த்தகளையெல்லாம் போட்டுக் குழப்பி, மேலெழுத்தும் அடியழித்துமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை உன்னாலே எழுதவா முடியாது? இது உன் கற்பனைக்கு ஒரு சவால் மாதிரின்னு வச்சுக்க.  பின்னாலே என் சுயசரிதை எழுத ஒரு பயிற்சி.  அவ்வளவுதானே?
உங்க சுயசரிதையும் என் கற்பனைக்கு ஒரு சவாலுங்களா?'

3.  ஆலிவர் வாசுவிடம்
'உங்க சத்தியத்துக்கு இதுதான் சோதனை..
இந்திரா பார்த்தசாரதி - படம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து
சத்தியத்திலே என் சத்தியம் உன் சத்தியம் வெவ்வேறே இருக்குதா?
இருக்கு. இதுதான் அரசியல்லே முதல் அரிச்சுவடி பாடம். '

இன்னும் நிறைய நறுக்குத் தெரிக்கும் வசனங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்.



எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 136

Friday, July 12, 2013

விழித்திருப்பவனின் இரவு -எஸ். இராமகிருஷ்ணன் (புத்தகப் பார்வை)


எஸ். ராமகிருஷ்ணன்
விக்கிப்பீடியாவில் எஸ். ராமகிருஷ்ணன்
(நன்றி; புகைப்படம் விக்கிப்பீடியாவிலிருந்து)
 
  எஸ். இராமகிருஷ்ணன் தமிழ் எழுத்தாளுமைகளில் மிக முக்கியமானவர்.  எழுத்தாளர் என்பதைத்தாண்டி அவர் ஒரு தேசாந்திரி (நாடோடி), விமர்சகர், நல்ல படிப்பாளர் இன்னும் எவ்வளவோ... அவர் தான் எழுதும் அளவிற்கு, அதைவிட அதிகமாகப் படிப்பவர் ஆங்கிலத்தில் Voracious Reader என்பார்களே, அப்படிப்பட்டவர்.  எழுத்து, பயணம், படிப்பு ஆகியனதான் அவர், அதுதான் எஸ். ராமகிருஷ்ணன்.  தமிழ் எழுத்தாளர்கள் பலரும் பயணிப்பதில்லை, ரசிப்பதில்லை, எழுத்தைத்தாண்டி வேறெந்த கலைத்துறைகளிலும்(சினிமாவில் தொடங்கி பல துறைகள்) ஈடுபடுவதில்லை என்கிற ஆதங்கம் எஸ். இராமகிருஷ்ணனுக்கு உண்டு.  பலமுறை தன் எழுத்திலும், பேச்சிலும் அவர் அதை வெளிப்படுத்தியுள்ளார், வெளிப்படுத்திவருகிறார்.


 தான் படித்த உலகின் முக்கிய எழுத்தாளுமைகளையும், அவர்களின் எழுத்துகளையும் மற்றவர்களும் படித்தின்புற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர் எழுதி உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளுமைகளின் அறிமுகமே இப்புத்தகம்.  190 பக்கத்தில் 28 எழுத்தாளர்களையும், அவர்களின் ஆளுமையையும், சிறந்த எழுத்துப் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார்.  சுருக்கமான ஆனால் முழுமையான அறிமுகம், எழுத்தாளர்களின் வாழ்க்கையும், அவர்கள் எழுத்தில் புகுத்திய புதுமைகளையும், மாற்றங்கள், அவர்களின் தனித்தன்மை, புதிய நடை என பலவற்றையும் அறிமுகப்படுத்துகிறார்.  கூடவே அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளையும் அதன் அறிமுகத்தையும் சிறந்த மேற்கோள்களையும் காட்டுகிறார்.

 விளாதிமிர் நபகோவில் ஆரம்பித்து, ஓரான் பாமுக் வரை நோபல் பரிசிலிருந்து புக்கர் பரிசுவரை பல பரிசுகளை வென்ற சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம், நமக்கும் அவர்கள் எல்லோரையும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தருகிறது(ஆனால், எஸ். இராமகிருஷ்ணனின் அறிமுகமே நமக்குப் படித்த திருப்தியைத் தரக்கூடும்).

 புயண்டஸ், போர்ஹே, ரிச்சர்ட் பர்ட்டன் போன்றோர் எழுத்தைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டதையும், நாடு அவர்களுக்கு செய்த கௌரவத்தையும், மதிப்பையும் அறியும்போது, நம் நாட்டில் எழுத்தாளர்களின் நிலையும், நாடு அவர்களை நடத்தும் விதத்தையும் எஸ். ரா குமுறலோடு கூறுவது உரைக்கிறது.

 பாப்லோ நெருடாவின் எழுத்துக்கு நாட்டுத் தலைவர்களே அஞ்சியதை அறிகையிலே வாள்முனையைவிட பேனாமுனையின் கூர்மை விளங்குகிறது.  திரைத்துறையில் கோலோச்சிய எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்மகள் (இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்னும் முகப்பெரிய முன்னேற்றம் இல்லை, ஜெயமோகன், எஸ். ரா போன்று சிலர் வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் செய்கிறார்கள்.  இதைவிடக் கொடுமை எழுத்தாளர்களின் கதையைத் தழுவியோ அல்லது முழுமையாகவோ காப்பிசெய்து எடுக்கும் எந்த இயக்குனரும் அதற்கான நன்றியை குறிப்பிடுவதோ credit-ஐ தருவதோ கிடையாது.  அவலம், கேவலத்திலும் கேவலம் நான் அவர் கதையைப் பயன்படுத்தவே இல்லை என்று சாமி மேல் சத்தியம் செய்து மறுப்பது).

  மனச்சிக்கலுக்கு ஆளான எழுத்தாளர்களைப் பற்றியும் அது தற்கொலை வரை போனதையும் அறியும்போது கனக்கிறது மனது.  தங்களுக்கு மனச்சிக்கல் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட அவர்களின் நேர்மை மெச்சவேண்டியது.  சாமுராயாக வாழ்ந்த புகியோ மிஷிமா, காமத்தையும் இலக்கியத்தையும் கொண்டாடிய சர் ரிச்சர்ட் பர்ட்டன், பெண் எழுத்தாளர்களென நீள்கிறது பட்டியல்.

 குழந்தை இலக்கியங்களான ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventures in wonderland) எழுதிய லூயி கரோல், நார்னியா(Narnia) எழுதிய சி.எஸ். லூயிஸ், ஹாபிட்(Hobbit), தி லார்ட் ஆஃப்த ரிங்ஸ்(The Lord of the Rings) எழுதிய ஜே. ஆர். டோல்கின் என அறிமுகம் நீண்டு கொண்டே போகிறது.  இப்புத்தகங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியோர்களின் அறிவுத்தேடல், மெய்த்தேடலுக்கும் கூட இப்புத்தகங்களைப் படிக்கலாம் என்கிறார் எஸ். ரா.

  உலக எழுத்தாளர்களின், எழுத்தின் அறிமுகம் வேண்டுவோர், செவ்விலக்கியத்தில் எதைப்படிப்பது என தேடுவோர் படிக்கவேண்டிய புத்தகம்.