Showing posts with label படித்த புத்தகம். Show all posts
Showing posts with label படித்த புத்தகம். Show all posts

Tuesday, February 11, 2014

படித்த புத்தகம் - எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதியின் 'சத்திய சோதனை'


புத்தகத்தின் அட்டையிலேயே குறிப்பிட்டுவிடுகிறார்கள் 'சமகால அரசியல் நிகழ்வுகளைப் புதிய கோணத்தில் அணுகும் அரசியல் அங்கத நாவல்' என்று.

ஒரு அரசியல்வாதி அவருடைய சுயசரிதையை எழுதும் கோஸ்ட் எழுத்தாளர் (Ghostwriter) ஒருவர், அரசியல்வாதியின் நண்பர், ஒரு கொலை, அரசியல், போலிஸ், துரோகம் இவ்வளவையும் வைத்து சமகால(என்றால் 1980-களில்) அரசியலை விறுவிறு திரில்லராக 136 பக்கங்களில் சித்தரித்து உருவாக்கியுள்ளார் எழுத்தாளர் இபா. 

அரசியல்வாதி பிரும்மநாயகம் (சிவஞானம்)
(கோஸ்ட்) எழுத்தாளர் வாசு
அரசியல்வாதியின் நண்பர் தணிகை
போலிஸ் ஆலிவர்
போன்று வெகு சில பாத்திரங்களே கதையில் வந்தாலும் தேவையில்லாத நீட்டல் முழக்கள்கள் இல்லாமல் அதேசமயம் ஒடைபோல தெளிவாக கதை நகர்ந்து கொண்டேயிருக்கிறது.

புத்தகத்தின் சிறப்பு அதன் விறுவிறுப்பும், எளிய நடையுடன் கூடிய யதார்த்தமும்தான் அதனால் புத்தகத்தை கீழே வைக்கவே மனம் வரவில்லை, புத்தகத்தை 2-3 நாட்கள் எல்லாம் வைத்து படிக்க வேண்டியதில்லை.. சேர்ந்தார்போல் ஒரு 1-11/2 மணிநேரம் இருந்தால் போதும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிடலாம்.  எழுத்தாளனாய் வாழ்வது, அதுவும் சமூக அங்கீகாரம் இல்லாத எழுத்தாளனாக வாழ்வது எவ்வளவு வேதனையானது என்று ஆங்காங்கே வாசுவின் கதாப்பாத்திரம் குறிப்பால் உணர்த்துகிறது.  10-20 வருடங்களுக்கு முன் வந்த கதையிலேயே கௌரவ டாக்டர் பட்டம் என்ன பாடு படுகிறது என்பது தெரிகிறது.  இன்றைய நிலைமையை நினைத்துப் பார்த்துக்கொள்ளுங்கள்.  அரசியல்வாதிகளுக்கு பணம் டிரஸ்ட் வழியாகப் போவது, அதிகாரமும் பதவி மோகமும் எப்படி ஒரு மனிதனை மாற்றும் என்பதும், சாதரணமாக மிகச்சாதரணமாக வாழ்கையை ஆரம்பக்கும் அரசியல்வாதிகள் பெரிய நிலையை எட்டுவதும் பின்னர் தங்கள் பழைய அடையாளங்களை மறைத்து அல்லது திருத்திக்கொள்வது, கட்சி அரசியல் ஜாதிக்கார வேட்பாளர், இடைத்தேர்தல், கிட்டத்தட்ட இன்றைய பேய்டு நியூஸ் (paid news) களை நினைவுப்படுத்தும் பத்திரிக்கை நிகழ்வுகள், கோப்புகளை திருத்துவது என எல்லாமே இருக்கிறது கதையில் இதில் பலவும் இன்றுவரை மாறவில்லை என்பதும் நிதர்சனமே.

கதையில் தென்னாற்காடு மாவட்ட (இன்றைய கடலூர் மாவட்டம்) இடைத்தேர்தலும் அதற்கு படையாச்சி(வன்னியர்) வேட்பாளர் நிறுத்துவது குறித்தும் செய்தி வருகிறது. இன்றும் கடலூர், விழுப்புரம் போன்ற வட தமிழக மாவட்டங்களில் இப்படி ஜாதி அரசியல் நடப்பதும், வேற்று கட்சியினரும் குறிப்பிட்ட சாதி வேட்பாளரையே தங்கள் சார்பில் நிற்க வைப்பதும்  எல்லோரும் அறிந்ததே.

நறுக்கு தெரிக்கும் வசனங்கள்
1.  பிரும்மநாயகம், வாசுவிடம் 'அரசியல்லே நல்லது கெட்டதுன்னு எதுவும் கிடையு   எதைப்பத்தியும் உனக்குச் சொந்த அபிப்பிராயம் இருக்கக் கூடாது.  நீ என்னோட நிழல். நிழல் ஊமை பேசாது. புரிஞ்சுதா?'

2. பிரும்மநாயகம் வாசுவிடம் ஆராய்ச்சிக் கட்டுரை எழுத பணிக்கும்போது,
'மக்கள் இத நம்புவாங்களா?
நம்பும்படியா எழுதவேண்டியது உன்வேலை.  அங்கேயிருக்கிற பாறைக்கு இத்தனை வயசு, பள்ளத்துக்கு அத்தனை வயசுனு ஒருத்தருக்கும் புரியாம நாலைஞ்சு இங்கிலீஷ் வார்த்தகளையெல்லாம் போட்டுக் குழப்பி, மேலெழுத்தும் அடியழித்துமா ஒரு ஆராய்ச்சி கட்டுரை உன்னாலே எழுதவா முடியாது? இது உன் கற்பனைக்கு ஒரு சவால் மாதிரின்னு வச்சுக்க.  பின்னாலே என் சுயசரிதை எழுத ஒரு பயிற்சி.  அவ்வளவுதானே?
உங்க சுயசரிதையும் என் கற்பனைக்கு ஒரு சவாலுங்களா?'

3.  ஆலிவர் வாசுவிடம்
'உங்க சத்தியத்துக்கு இதுதான் சோதனை..
இந்திரா பார்த்தசாரதி - படம் தமிழ் விக்கிப்பீடியாவிலிருந்து
சத்தியத்திலே என் சத்தியம் உன் சத்தியம் வெவ்வேறே இருக்குதா?
இருக்கு. இதுதான் அரசியல்லே முதல் அரிச்சுவடி பாடம். '

இன்னும் நிறைய நறுக்குத் தெரிக்கும் வசனங்கள் இருக்கின்றன, படித்துப் பாருங்கள்.



எழுத்தாளர் : இந்திரா பார்த்தசாரதி
வெளியீடு : கிழக்கு பதிப்பகம்
மொத்த பக்கங்கள் : 136

Monday, July 23, 2012

படித்த புத்தகம் - ஜெயமோகனின் உலோகம் நாவல்


புத்தக தலைப்பு :  உலோகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
வகை : சாகச எழுத்து(த்ரில்லர்)


 ஈழத்து இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வருகிறான்.  அவன் இயக்கத்தின் சில பல உத்தரவுகளை நிறைவற்றிவட்டு (கொலைகள்தான்) டில்லிக்கு செல்கிறான்.  இயக்கத்தின் முக்கியப்புள்ளியான ஒருவர் இந்தியா வந்து, இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், இயக்கத்தின் துரோகியாக கருதப்படும் அவரை கொல்வதுதான் அவனுக்கு இடப்பட்ட பணி.  அதை அவன் எப்படி செய்கிறான், செய்வதற்க்குள்ளான காலத்தில் அவன் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது, என்ன சிக்கல்கள், பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை அவனுடைய பார்வையிலே சொல்லுவதுதான் இந்த நாவல்.   ஒரு கொலைகாரன் எப்படி செயல்படுவான், அவனுடைய எச்சரிக்கைத்தன்மை விழிப்புணர்வு, நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி ஊகிப்பது, பொறுமை, காத்திருப்பு போன்று பல விஷயங்களை கண்முன்னால் விரிக்கிறது இந்த நாவல்.

 கதை முழுவதுமே ஒரு flash back உத்தியில்  விவரிக்கப்பட்டுள்ளது.  கதையின் கரு கொலையும், துரோகமும் மட்டுமே, வரும் உத்தரவுக்கு அப்படியே அடிபணியம் ஒரு இயக்கப்போராளியின் சுயசரிதை எனக்கூட இந்நாவலை சொல்லலாம்.  கதையினூடே ஆங்காங்கே ஜெயமோகனின் முத்திரையான பல வாக்கியங்களைப் பார்க்கலாம்.  ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களில் வருவதுபோலொவே இதிலும் காமம் பற்றிய கருத்துகளும், நிகழ்வுகளும் உண்டு.  போர் பற்றி அறியாத, குண்டுவீச்சு பயம் பார்த்திராத, உயிர்பயம் கண்டறியாத சினிமா மட்டுமே வாழக்கை என வாழ்பவர்களை ஆங்காங்கே பகடி செய்திருக்கிறார்.

 நாம் பத்திரிக்கையில் படிக்கும் பல கொலைகளும் இப்படி நடந்து, வேறு சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கும என்பதற்க்கு கூட சாத்தியங்கள் அதிகமே.  இயக்கங்கள் செயல்படும் விதம், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா -raw- என பல விஷயங்கள் கதையின் போக்கில் வந்து போகிறது.  ஒரு நாவலை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கென ஒரு ஒப்பற்ற தனித்தன்மையை(uniqueness) தந்து, அந்தந்த பதாபாத்திரமாகவே யோசித்து எழுதும் ஜெயமோகனின் அந்த "டச்" இந்த நாவலிலும் காடு, ஏழாம் உலகம் நாவலில் இருப்பதுபோலவே உண்டு. நாவலின் பல கதாபாத்திரங்கள் இலங்கைத்தமிழர்கள் என்பதால் ஆங்காங்கே இலங்கைத்தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதை முதலிலேயே குறிப்பிட்டுளார்.

 நான் படித்த ஜெயமோகனின் பிற நாவல்களான காடு, ஏழாம் உலகம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டளவில் உலோகம் சற்று குறைவே(பக்க எண்ணிக்கை, தரம் 2-ம்).  ஆனால், உலோகம் எழுதப்பட்டுள்ள தளம் வேறு.