Monday, September 1, 2014

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்...

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்*
greader பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து சில பல தமிழ் எழுத்தாளர்களை விடாமல் தேடிப்பிடித்து படித்து வருகிறேன்.  அப்படித்தான் எப்படியோ சமஸ் அவர்களின் எழுத்து எனக்கு அறிமுகமானது.  அறையில் அமர்ந்து கொண்டு கற்பனையில் கதை, கவிதை படைக்கும் எழுத்தாளர்கள் உண்டு, தன் சொந்த அனுபவங்களை சுவைபட எழுதும் எழுத்தாளர்கள் உண்டு, திரைவிமர்சனங்களும் அரசியல் பகடிகளும் சமூக பகடிகளும் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு, வேறு பணிகளில் இருந்துகொண்டு பொழுது போக்கிற்காகவும் hobby-யாகவும் எழுதுபவர்களும் உண்டு.  சமஸ் தனது எழுத்துகளுக்காக அந்தந்த களங்களுக்கே செல்லக்கூடியவர்(தன் ஊடகப் பணி சார்ந்து பணி நிறுவனத்தின் மூலம் என்றே நினைக்கிறேன், இவர் தற்போது தமிழ் இந்துவில் பணியாற்றிவருகிறார்).

  பிரச்சனைகளை அதன் இடங்களுக்கே சென்று அறிந்து, அங்குள்ள மக்களை பார்த்து அவர்கள் அனுபவங்களைப் பெற்று எழுதி வருகிறார்.    (இதில் எதிலும் சேராத ஒரு வகையான என்னைப்போன்ற எழுத்தாளர்களும் உண்டு.  எப்புடி...? ;) just for fun.  ஒன்னுமே எழுதாம நான்லாம் எப்புடிங்க எழுத்தாளன் ஆகமுடியும்.  அதான் அப்பப்ப இப்புடி நானா ஜீப்புல ஏறி ரவுடி ஆயிக்கிறது - நன்றி வடிவேல்).

முதலில் (தேர்தலின் போது) இந்தியாவின் வண்ணங்கள் என்று இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கை, பிரச்சினை, அரசியல் நிலைப்பாடு என்பது குறித்து எழுதிவந்தார்.  தற்போது தமிழ்நாட்டு கடற்கரைகளைப் பற்றியும் மீனவ (கடலோடி என்பதுதான் சரியாம்) சமுதாயத்தைப் பற்றியும் அங்குள்ளப் பிரச்சினைகளைப் பற்றியும், அம்மக்களின் வாழ்வையும் பாடுகளையும் எழுதி வருகிறார் (நீர் நிலம் வனம்).  அவரின் எழுத்து ரத்தமும் சதையுமாக இருக்கிறது, சிற்சில கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியையும், சமூக கோபத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.  சில கட்டுரைகள் நமக்கு புதிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றுதருகிறது.  சில கண்ணீரை வரவழைக்கிறது, நம் அறியாமையை, இயலாமையை இடித்துரைக்கிறது.  எல்லா கட்டுரைகளிலும் மீனவர்களின் தாங்கள் மீனவர் என்பதிலும் தங்கள் வாழ்க்கை குறித்தும், தாம் வாழும் அந்த கடற்கரை குறித்தும் பெருமையும் கர்வமும் இழையோடுகிறது இதுவரை விவசாயிகளைப் பற்றி இருந்த அதே போன்ற ஒரு பெருமித எண்ணம் நமக்கு மீனவர்கள் மீதும் ஏற்படுகிறது.  கனிம மணல் பிரச்சனையிலிருந்து, கடலில் கழிவுகள் கொட்டுவது வரை பல பிரச்சனைகளையும் தன் கட்டுரைகளில் காட்டிச் செல்கிறார்.  தென் மாவட்டங்களில் புற்றுநோய் ஏதோ சாதாரண விஷயம் போல் ஆகிவிட்டிருக்கிறது எலும்பு புற்று, நுரையில் புற்று, இரத்தப்புற்று என்று வகை வகையாக தாக்கப்படுகிறார்கள் என்கிறார்.  படிக்கும்போதே கண்ணீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.  நாம் எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இருக்கிறோம்... நம் மக்களின் பிரச்சனை தெரியாமலே நாம் ஈரான், இஸ்ரேல்-பாலஸ்தீனம், ISIS என்று முகநூலிலும் டிவிட்டரிலும் பொங்கி வெடிக்கிறோம் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்).  நம் ஊர் செய்தி ஊடங்களே இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காதபோது வடநாட்டு இந்தி ஆங்கில ஊடங்கள் எங்கிருந்து இதையெல்லாம் பேசப்போகிறது?  இந்தக் கட்டுரையில் படிக்கும் அவலங்கள் ஏதேனும் டில்லியிலோ, மும்பையிலோ நடந்திருந்தால் இந்நேரம் எல்லா செய்தி ஊடங்களும் இதைப் பேசியிருக்கும் (டிஆர்பி ஏற்றதான்), நாமும் ஹேஷ் டேக்களுடன் சமூக வலைதளங்களில் சீறியிருப்போம், முகநூல் cover photo-வை கருப்புக்கு மாற்றியிருப்போம், மெழுகு வர்த்திகளை ஏற்றிய போட்டோக்களைப் பகிர்ந்திருப்போம், அரிதிலும் அரிதாக சென்னையில் மெரினாவில் ஒரு மாலை கூடியிருப்போம் பின்னர் '''மறந்திருப்போம்'''.  விடுங்கள் எதற்கோ இந்தப் பதிவை ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன். 

முடிந்தால் சமஸின் கட்டுரைகளை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.  அவரின் வலைப்பூ சுட்டி http://writersamas.blogspot.in/


*-> புகைப்படம் அவருடைய வலைப்பூவிலிருந்து இணைக்கப்பட்டது.



No comments:

Post a Comment