Monday, December 30, 2013

யாளி என்றொரு இந்திய இதிகாச விலங்கு...

நாம் பலரும் கோயில்களுக்கு சென்றிருப்போம் (வேறு வேறு காரணங்களுக்காக, அது முக்கியமில்லை), அதுபோலவே கோயில் தூண்களையும் பார்த்திருப்போம்.  தமிழகக் கோயில்களில் (தென்னிந்திய கோயில்கள் எனக் கொள்க; கர்னாடகா, ஆந்திராவின் சில பல பகுதிகளும், முழுக்கேரளாவும் தமிழர்களாகவே இருந்தார்கள்) மூலவர் எந்த அளவிற்கு அருளுக்கு முக்கியமோ அந்த அளவிற்கு சிற்பக் கலைத்திறனுக்கும், அழகுக்கும் முக்கியமானவை கோபுரங்களும், மேற்கூரை ஓவியங்களும் (இன்றைய பெயிண்ட் ஓவியங்கள் அல்ல, பழங்கால ஓவியங்கள்) தூண்களும்.  ஆனால் நாம் பலரும் கொஞ்சம் கூட கவனிக்காமல் விட்டுவிடுகின்ற ஆனால், மிகவும் கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள் இவை எல்லாம் தான்.  அதில் நம் கோயில் தூண்களுக்கு ஒரு தனிச் சிறப்பான இடம் உண்டு.  சரி தூண்களை ஏன் கவனிக்க வேண்டும் என்பதற்கு முன்

நாம் எது எதற்காகவெல்லாம் தூண்களை பயன்படுத்துவதுகிறோம் என்று பார்ப்போம்
1. கையில் மீதமிருக்கும் கோயில் பிரசாதங்களான விபூதி, குங்குமம் ஆகியவற்றை கொட்டிவிட்டு, அதற்கு மேலும் கையில் ஒட்டியுள்ளதை தேய்க்க
2. சாய்ந்து உட்கார்ந்து பேச
3. நெய் விளக்கோ, எண்ணெய் விளக்கோ ஏற்றிவிட்டு பிறகு கையின் எண்ணெய்ப் பசையை தேய்த்து நீக்க
இன்னும் பல காரணங்கள் இருக்கின்றன இங்கே இதை நிறுத்திக்கொள்வோம்.  இப்போது நமது தலைப்பிற்கு வருவோம்.

நம்மில் எத்தனைப் பேருக்கு யாளி என்றால் என்னவென்று தெரியும்?  சரி விடுங்கள் டிராகன் என்றால்..?

ஆகா, டிராகன் தெரியாதா எங்களுக்கு..?
வாயிலிருந்து நெருப்பைக் கக்கிகொண்டே பறக்கும் ஒரு Gigantic சீனாக்கார இதிகாச விலங்கு தானே அது. 

சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
சிவகங்கை கோயிலில் யாளி சிற்பம்
By Manjeshpv [CC-BY-SA-3.0]
ஆம், அதேதான், அப்படியே அதற்கு இணையான ஒரு இந்திய இதிகாச விலங்கை தான் யாளி என்பார்கள்.   பெரும்பாலும் கோயிலின் தூண்களிலும், சில இடங்களில் கோயில் கோபுரங்களிலும் இதன் வடிவத்தை நீங்கள் பார்த்திருக்கலாம்.  தூண்களில் இருகாலில் நின்று, இருகால் தூக்கி கூரான பற்கள் தெரிய தும்பிக்கைப்போன்ற ஒன்று தொங்கிக்கொண்டிருக்க, தும்பிக்கையின் அடியில் ஒரு யானை இருக்கும் அமைப்பில் இருக்கும் அந்த இதிகாச விலங்குதான் யாளி.  சில இடங்களில் யாளியின் மீது ஒரு வீரன் அமர்ந்திருப்பது போலவும் சிலைகள் இருப்பதுண்டு (காலத்தால் பிந்திய கோயில்களாக இருக்கக் கூடும்)




யாளி:

முகம் யானை வடிவில் இருந்தால் - யானை யாளி
முகம் சிங்கம் வடிவில் இருந்தால் - சிங்க யாளி
முகம் குதிரை போன்று இருந்தால் - குதிரை யாளி

இந்த மூன்றையும் நான் பல கோயில்களில்/ஓரே கோயிலில் வேறு வேறு இடங்களில் பார்த்திருக்கிறேன், இந்த மூன்றும் தான் மிக அதிக அளவில் காணக்கிடைக்கக் கூடியதும் ஆகும்.  இது தவிர வேறு வடிவங்களிலும் உண்டென்று அங்கொன்றும், இங்கொன்றுமாக படித்துள்ளேன். 



யாளியை எங்கே பார்க்கலாம் என்று கேட்காதீர்கள், ஓரலவிற்கு பழமையான, தூண்கள் உள்ள எல்லா கோயில்களிலும் யாளியின் உருவத்தைப் பார்க்கலாம்.  சிற்பங்களுக்கென்றே மிகப் பெரிதாகப் பேசப்படும் கோயில்களில் நிச்சயமாகப் பார்க்கலாம், உங்களுக்காக சில முக்கிய கோயில்கள்
1. மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில்
2. இராமேஸ்வரம் கோயில்
3. சிதம்பரம் நடராசல் கோயில்
4. காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில், ஏகநாதர் கோயில்
5. ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில்
6. தென்காசி விஸ்வநாதர் கோயில்
இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம்... நீங்கள் உங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் கோயிலில் தேடுங்கள், கண்டடைவீர்கள்.  இன்னும் ஒரு விஷயம் யாளியின் உருவம் சிவன், விஷ்ணு, முருகன் கோயில்கள் என்ற பாகுபாடின்றி எல்லா கோயில்களிலும் காணக் கிடைக்கக் கூடியது, ஆகவே யாளியை சமய சார்பில்லா ஒரு இதிகாச விலங்கென்றும் சொல்லலாம். [கருடன், நந்தி போன்றோரெல்லாம் என்னை மன்னிப்பாராக..]

முன்பு எப்போதோ ஒரு இணையப்பக்கதில் யாளியானது யானையை உணவாக உட்கொள்ளும் என்று படித்திருந்தேன்.  அந்த பக்கத்திற்கான உரலியை தவறவிட்டுவிட்டேன், கண்டறியும்போது உங்களுக்கு update செய்கிறேன். நிற்க

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயிலில் யாளி
by  P.K.Niyogi
டிராகனுக்கு சீனாவிலோ, ஹாங்காங்கிலோ வேறு எங்குமோ சிலைகள் உண்டா என்று நானறியேன் ஆனாலும் அதைத் தெரிந்த நமக்கு, நாம் தினந்தோறும்...!? சரி அடிக்கடி...!? சரி விடுங்கள் திருவிழா சமயங்களில் போகும் எல்லா கோயில்களிலும் கிட்டத்தட்ட காணக்கிடைக்கும், அதுவும் தூணுக்குத் தூண் காணக் கிடைக்கும் யாளியை தெரியவில்லை என்பது உறுத்தலாகத்தான் இருக்கிறது.  இதை இன்னொரு விதமாகப் பார்க்க வேண்டுமென்றால், அதாவது பொது மக்களிடத்தில் இளைஞர்களிடத்தில் யாளியை கொண்டு சேர்க்கவேண்டுமென்றால் அவர்கள் புழங்கக்கூடிய இடத்தில் யாளியை உலவ விடவேண்டும் (அட, கிராபிக்ஸ், புத்தக, கதை வடிவில்தான் சொல்கிறேன், ஃபேஸ்புக், டிவிட்டரில்தான் சொல்கிறேன் ).  சீனர்கள் அதை செய்தனர், சினிமாவின் உதவியோடு, அதை ஹாலிவுட்டும் பற்றிக்கொண்டது, டிராகன் மக்கள் மனதில் வாழ ஆரம்பித்துவிட்டது.  முடிந்தவரை நாமும் தற்போது மக்கள் புழங்கும் இடங்களான facebook, twitter, g+ போன்ற இடங்களில், திரைப்பட அரங்குகளில் இதை செய்தால் யாளி மறு பிறப்பெடுக்கும் !?

டிராகன் Vs யாளி

இந்தியாவும் சீனாவும் கலை, கலாச்சாரம், வரலாறு, புராண இதிகாசம் தொன்மம் என்று பல விதங்களிலும் மிக மிக பழமையானவை.  ஆனால், டிராகன் இன்றும் மக்கள் மனதில் இருக்கிறது ஆனால் யாளி இல்லை ஏன் என்ற கேள்வி கேட்டால், பதில்

சீனாக்காரன் தனது மார்கெட்டிங் திறமையால்(கேரளத்து அரசாங்கம்/மக்களைப் போல, இதைப்பற்றி இன்னொருப் பதிவில் எழுதுகிறேன்) டிராகனை உலகம் பூராவும் உலவ விட்டுவிட்டான், அதுவும் இன்றுவரை கிராபிக்ஸ் துணையோடு உலவிக்கொண்டே இருக்கிறது.  நாமும் பெப்பரப்பேனு வாயப் பொளந்துகிட்டு பாத்துகிட்டுருக்கோம்.  இன்னிக்கிவரைக்கும் சீனாவப் பத்தி வர்ற(நாம பாக்குற) படத்துல 50% ஒன்னு டிராகன் படத்தோட கதைல இருக்கும், கதைல இல்லனா படத்தோட டைட்டில்ல இருக்கும் சாம்பிள் பாக்கறீங்களா?

குரோச்சிங் டைகர், ஹிட்டன் டிராகன்
என்டர் த டிராகன்
தி வே ஆஃப் த டிராகன்
ரிட்டன் ஆஃப் த டிராகன்
ரெய்ன் ஆஃப் ஃபயர்
டிராகன் ஹார்ட்
டிராகனுடன் தொடர்புடைய படங்களின்/தொலைக்காட்சித் தொடர்களின் பட்டியல் இந்த சுட்டிகளில் உள்ளது
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film
https://en.wikipedia.org/wiki/List_of_dragons_in_film_and_television
http://www.ranker.com/list/best-dragon-movies-list/all-genre-movies-lists

ஆனா, யாளியப் பத்தி நாம படமும் எடுத்ததில்ல, படத்துக்கு டைட்டிலும் வச்சதில்ல.. அட அதவிட ஒரு கத புத்தகங்கூட அதப்பத்தி வந்ததில்லை அப்பறம் எங்கேருந்து யாளினா என்னானு நமக்கு தெரியும்.  கோயிலுக்கப் போறப்ப ஒரு சின்ன கொழந்த இந்த செலையலாம் பாத்துட்டு அது என்னா, இது என்னானு கேட்டா பதில் சொல்ல அப்பா, அம்மாவுக்கும் தெரியல, பொத்தாம் பொதுவா அது ஒரு சாமி, அது ஒரு animal அப்டினு சொல்லி சமாளிக்கிறாங்க என்னத்த சொல்ல...?

கொறஞ்சபட்சம் இதப் படிக்கிறதுல ஒரு நாலு பேராவது(மொதல்ல 4 பேராவது இதப் படிப்பாங்களா?  உங்க மைண்ட் வாய்ஸ நான் கேட்ச் பண்ணிட்டேன் ;P) இனிமே கோயிலுக்குப் போகும்போது சாமியோட சேர்த்து கோயில் தூணையும், கோபுரத்தையும், யாளியையும் சும்மானாச்சுக்கும் அப்புடியே வேடிக்க பாத்துட்டு வந்தா சந்தோஷம்.

குறிப்பு 1:
இதை எழுதும்போது கொஞ்சம் கூகுள் செய்தபோது யாளியை மையமாக வைத்து ஒரு தமிழ் நாவல் வந்துள்ளதை அறிந்தேன். 
அதனு சுட்டிகள் விருபா இணையதளத்தில் & சாய்ராம் வலைபூவில்

குறிப்பு 2:
நேற்று நண்பன் கோகுலுடன் அவனுடைய ராயல் என்பீல்டில் திருக்கழுக்குன்றம் வேதபுரீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன்.  அப்பொழுது அவனுடைய யாளி பற்றிய சந்தேகத்திற்குப் பதில் சொல்லிக் கொண்டிருந்த போதுதான் யாளி பற்றி நிறைய பேருக்கு தெரியவில்லை என்கிற ஆதங்கம் வந்தது.  அந்த ஆதங்கத்தின் வெளிப்பாடே இப்பதிவு.

யாளி குறித்து விக்கிப்பீடியாவில் தமிழ்  மற்றும் ஆங்கிலம்

No comments:

Post a Comment