Tuesday, April 1, 2014

கடந்த 50 ஆண்டுகளில் கணிணி, தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி.

  இந்தியாவின் முதல் கணிப்பொறியின் பெயர் உரல்(Ural), ஆம் பெயரைப்போன்றே பெரிதான ஒன்று.  ஒரு நாட்டின் வளர்ச்சி என்பதே தற்போது முழுமையாக தகவல் தொழில்நுட்பத்தை மட்டுமே சார்ந்துள்ளது.  உலகத்தில் மாற்ற முடியாத ஒன்றான மாற்றத்தை ஏற்றுக்கொண்டு புதுவழியில் பயணிப்பவர்களே மிகச்சிறந்த சாதனைகளைப் படைக்க முடியும்.  இது தனி மனிதற்கு மட்டுமல்ல ஒரு முழு தேசத்திற்கும் பொருந்தும். 

உலக வரலாற்றில் மிகச்சிறந்த நூற்றாண்டாக ஒன்றிருக்குமானால் அது கணிணி கண்டறிப்பட்டட நூற்றாண்டுதான்.  வேறெந்த நுட்பமும் ஏதேனும் ஒருசில துறையில் மட்டுமே வளர்ச்சிக்கு வித்திடும்.  உதாரணமாக நீராவி எஞ்சின், அணுக்கரு வினைகள், ராக்கேட் இன்னும் பல.  ஆனால், தகவல் தொழில்நுட்பம் மட்டுமே எல்லா துறைகளிலும் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு வித்திட்டு ஒரு தேசத்தையே உயர்த்தும். 

19-ம் நூற்றாண்டுவரை மாட்டுவண்டியில் நகர்ந்து கொண்டிருந்த மனிதகுல வளர்ச்சி 20-ம் நூற்றாண்டில் இராக்கெட் பிடித்து ஒளிக்கு நிகரான வேகத்தில் முன்னேற ஆரம்பித்துவிட்டது.  தத்தித்தடுமாறி தவழ்ந்த மனிதகுலம் எஸ்கலேட்டரில் ஏறி ஓட ஆரம்பித்துவிட்டது. 

இன்று ஜப்பானும், கொரியாவும் விண்ணை முட்டி உயர்ந்து வருகின்றனவென்றால் காரணம் தொழில்நுட்பம் தானே.  அமெரிக்காவே அஞ்சுகிறான் என்றால் காரணம் அதுதானே.  50 வருடத்திற்கு முன்பு வளைகாப்பிற்கு சேதி அனுப்பினால் சேதி கிடைத்து வருவதற்குள் பிறந்த குழந்தைக்கு பல் முளைத்துவிடும்.  இன்றைய நிலைமை எப்படியிருக்கிறது?  அமெரிக்காவிலிருப்பவனுக்கு கூட அடுத்தநொடியே செய்தி அனுப்பிவிடலாம் காரணம்  e-mail.  "இங்க சேதி தட்டுனா அங்க தெரியும்...."

பக்கத்து மாநிலத்துக்கு பேசவேண்டுமென்றால் கூட Trunk call-ல் காத்திருக்க வேண்டும்.  இன்று பக்கத்து நாட்டிற்கு ஏன் பக்கத்து கண்டத்ததிற்கே பட்டென பேசிவிடலாம்.  அன்று ஊருக்கு ஒரு டெலிபோன், இன்று ஊரெல்லாம் செல்போன்; அன்று கல்யாணம், திருவிழா, சடங்குக்கு ஒரு அவசர தந்தி இன்று மாடியிலிருந்துகொண்டு கீழேயிருப்பவனுக்கு கீழேயிறங்கி வருவதற்குள் அனாவசிமாக ஒரு நூறு sms கள்.

"பிறந்த 5 மாதங்களில் ஒரு குழந்தை இரு கால்களில் மாராத்தான் ஓட்டம் ஓட முடியுமா? சாத்தியமேயில்லை!"  ஆனால், கணிணி துறையில் எதுவும் சாத்தியம் இல்லையா? அதனால்தான் கணிணி துறை, தான் பிறந்த 50 வருடகாலத்தில் இவ்வளவு வேகமாக மாராத்தான் ஓட்டத்தில் முன்னேறி வருகிறது.  ஒரு அறையே ஒரு முழு கணிபொறியாய் இருந்த காலம் மாறி இன்று அறைமுழுவதும் கணிணியாய் மாறியதோடு நில்லாமல் செல்லுமிடமெல்லாம் எடுத்துச் செல்ல கனகச்சிதமாக Laptop வடிவம் பெற்றுவிட்டது.  vacuum tube-களில் அடைபட்டுக் கிடந்த கணிணி தன் தடைகளை தகர்த்து வெளிவரும் ஜல்லிக்கட்டு காளைபோல சீறிப்பாய்ந்து சிறிய சிலிக்கன் சிப்புகளில் உலகையே வலம்வந்து கொண்டிருக்கிறது.

ஒரு முழு அறையில் vacuum tube -களில் மூச்சுத்திணறிக்கொண்டும், பலவித வயர்களில் கை, கால் கட்டுண்டும் சிக்குண்டும் கிடந்த கணிணி இன்று Laptop ஆகி சுதந்திரகாற்றை உற்சாகமாய் சுவாசித்துக் கொண்டிருக்கிறது.  வந்த புதிதில் உடல் பெருத்த மூளை வளர்ச்சி மட்டும் குறைவாயிருந்த கணிணி (நினைவகத்தைக் குறிப்பிடுகிறேன்) மொத்த மெமரியே ஒரு சில MB களாய் இருந்தது மாறி இன்றோ 200, 300 GB கொண்ட கணிணிகள் கூட வந்துவிட்டன.  சவலைக் குழந்தையாயிருந்த கணிணி சரிவிகித உணவு உண்டு சவால் விடுகிறது.

மூட்டை மூட்டையாய் விதைநெல் மட்டும் இருந்தால் போதுமா? விதைத்து விளைவிக்க, செயல்படுத்த நிலம் வேண்டாமா?  RAM -ஐக் குறிப்பிடுகிறேன்.  16 MB  அளவிருந்த RAM-ன் அளவு வேகவேகமாய் வளர்ந்து பல GB அளவுக்கு வந்துவிட்டது.  அத்தனையும் கடந்த ஐம்பதே வருடங்களில்.  குருவை மிஞ்சிய சிஷ்யர்கள் என்பதை கதைகளில் கேட்டிருப்போமில்லையா நேரில் கணிணியாக பார்க்கலாம்.  தன்னை உருவாக்கிய மனிதனைவிட அனைத்திலும் முன்னேறிவிட்டது.  என்ன அருகிலிருக்கும் சக கணிணியைக் கண்டு கண்ணடிக்கவோ, கடலை போடவோ, sms அனுப்பவோ முடிவதில்லை.  காரணம் தானே சிந்திக்கவோ முடிவெடுக்கவோ தெரியாததுதான். அதையும் நிவர்த்தி செய்ய "Artificial Intelligence" அறிஞர்கள் முயன்றுவருகிறார்கள்.

பெரிய CRT-களில் சிக்குண்டு கிடந்த கணிப்பொளி diet மூலம் slim ஆகி அழகாகும் நடிகைபோல LCD-யாய், Plasma Display-வாய் பேப்பர் ரோஸ்ட் போல மாறிவருகிறத்து..  தொட்டுப்பேச Touch-panel ஐ போல வந்துவிட்டது. 

அறிவியல் கதை எழுதுபவர்களால் கூட கற்பனை செய்து வளர்ச்சியை கதையாய்  எழுதமுடியவில்லை.  எப்படி என்னவிதமாய் வளர்ச்சியில் விஸ்வரூபம் காணும் என கணிக்கமுடியவில்லை.  எப்பொழுதேனும் சிறு மாற்றத்தடையால் தடுக்கிவிழுந்தாலும் அதையே தன் வளர்ச்சிக்கு அடையாள மைல்கல்லாய் நாட்டி தன் பெருமையை நிலைநாட்டி முன்னேறி ஓடிக்கொண்டிருக்கிறது கணிணி.  கணிணி துறைக்கு வரும் தடைக்கற்குவியல்கள் அனைத்ததும் பூக்குவியலாய் மாறி அதன் பாதையிலேயே பூமாரி பொழிகிறத்து. 

ஆறுகளனைத்தும் சங்கமிக்கும் கடல்போல கணிணி எல்லாதுறைகளும் சங்கமிக்கும் hub-ஆகி வருகிறது.  கணிக்கிடும் பொருட்டு ஒரு calculator ஆக பிரசவித்து இன்று பலசரக்கு கடையில் bill-போடுவதிலிருந்து இராக்கெட்டை ஏவும் தொழில்நுட்பம் முதல், அதை கண்காணிக்கும் வரை அனைத்ததையும் தன் கட்டுப்பாட்டில் வைத்து "மௌனக் கடவுளாய்" சிலைக்குப் பதில் சிலிக்கான் சில்லில் பூஜை புனஸ்கார நிவேத்தியத்திற்கு பதில், சங்கு, சக்கரம், கதை, வேல், வில்லிற்குப் பதில் CPU, RAM, ROM, Mouse கொண்டு உலகையே ஒரு குடையின் கீழ் ஆட்சிபுரிந்து வருகிறத்து.  அலேக்சாண்டர் இன்றிருந்தால் உலகை வெல்லுவதற்குப் பதில் கணிணிக்கு copy right-ம், patent-ம் வாங்கதான் போராடுவாரென்று எண்ணுகிறேன்.

இன்று கணிணி இல்லாவிடில் உலகமே ஸ்தம்பித்து நின்றுவிடும் எனும் அளவுக்கு எல்லா துறைகளிலும் புகுந்து ஊடுருவி வளர்ச்சியடைந்துள்ளது.   'அவனின்றி அணுவும் அசையாது' என்ற நிலைமாறி 'கணிணியின்றி எதுவும் அசையாது' என்ற நிலைவந்துவிட்டது. 

இன்றும் கணிணி Information Technology, Artificial Intelligence, Nano technology என்று பலவித முகங்களோடு மென்மேலும் வளர்ந்துவருகிறது.  மண்ணைத்தோண்டும் geology முதல் விண்ணைத் தீண்டும் Astronomy வரை தாவரத்தை பற்றிய botany முதல் மனிதனை ஆராயும் microbiology, Biotechnology  வரை எல்லாதுறைகளிலும் தன் கரத்தை நீட்டி வளர்ந்து வருகிறது. 

எந்தவொரு வளர்ச்சியிலும் நன்மை, தீமை இரண்டும் இருக்கும்.  தீமைகள் பலவும் இருக்கும் நாம் தீய முன்னுதாரணங்களைத் தவிர்த்து நல்ல முன்னுதாரணங்களை மட்டும் மனதில் கொண்டு நீர் கலந்த பாலில், பால்மட்டும் அருந்தும் அன்னமாய் இருப்போம்.  கணிணி அப்படி தீமைக்கு வித்திட்டடாலும் அதற்கு மனிதன்தான் காரமேயன்றி கணிணியோ தகவல் தொழில்நுட்பமோ காரணமில்லை.

உலகின் தலைசிறந்த ஒரு துறைக்கு நான் என்னளவில் எந்த பங்களிப்பும் தராவிட்டாலும் அந்தத்துறையைச சேர்ந்த ஒருவனாய் இருக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமையும் மகிழ்ச்சியும் தான்.  நம்மால் முடிந்தளவு கணிணித்துறையின் வளர்ச்சிக்கு பங்களித்து அவ்வளர்ச்சியை நேர்வழியில் நல்லமுறையில் பயன்படுத்தி நாட்டுக்கு வளம் சேர்த்து நமக்கும் பலம் சேர்த்தது நாம் பிறந்த இந்நாட்டுக்கு உலகளவில் நற்பெயர் பெற்றுத்தரவேண்டும் என வேண்டி

'நீயும் நானும் ஒண்ணு,
காந்தி பிறந்த மண்ணு'


என்கிற உலகை மாற்றிப்போட்ட கவிதை வரியோடு இக்கட்டுரையை முடிக்கிறேன்.

குறிப்பு:
   இந்தக் கட்டுரை குறைந்தது ஒரு 6 வருடங்களுக்கு முன்பு எழுதியது, அதில் நான் திருத்தமேதும் செய்யாமல் அப்படியே இந்த இடுகையில் தந்துள்ளேன்(சில காரணங்களுக்காக).  எனவே, மிகவும் பழைய தகவலோடு இருப்பதாகவோ அல்லது தகவல் பிழை இருப்பதாகவோ கருத வேண்டாம், கண்டிப்பாக இது பழசு தான்.

No comments:

Post a Comment