Showing posts with label நீல்ஸ் போர். Show all posts
Showing posts with label நீல்ஸ் போர். Show all posts

Wednesday, April 9, 2014

மாற்றுக் கருத்து

குறிப்பு: இந்தக் கட்டுரை 2005-ம் ஆண்டு நான் கல்லூரியில் இளநிலை படித்துக்கொண்டிருந்தபோது எழுதியது.  எழுதிய தகவல்கள் அன்றைய தேதியில் சரியானவைதான்(!?) இன்று பழைய தகவல்கள் ஆகிவிட்டன(:p).  தகவல்களுக்கு வலு சேர்க்கும் வகையில் ஒரு சில இணைய இணைப்புகள் மற்றும் படங்களை தற்போது சேர்த்துள்ளேன்.  படித்துவிட்டு உங்கள் வாழ்த்துகள், வசவுகள், மாற்றுக் கருத்துகளை பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்.   சரி வாங்க கட்டுரைக்கு போலாம்....


  மனிதன் ஆப்பிளை உண்ட காலத்திலிருந்தே நன்மை தீமை அனுபவித்து யோசிக்க, சிந்திக்க கற்றுக்கொண்டான்.  மொழி உண்டானபின் பேசிப் பழகவும், பிரச்சனைகளுக்கு தீர்வுகாணவும் அறிந்தான்.  விஷயஞானம் அதிகரித்து முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள ஆரம்பித்தான். மனிதனின் நிலை உயர உயர அவனிடம் கருத்தை கேட்க ஆரம்பித்தனர் மற்றவர்கள்;  சான்றோரும் நற்கருத்துகளையே தந்தனர்.  காலத்தின் சக்கரம் சுழலும் வேகம் அதிகரித்தது.  ஒரு சிலர் மட்டுமே நல்லறிவைப் பெறமுடியும் என்ற நிலைமாறி விரும்பும் அத்தனைபேரும் நற்கருத்துகளையும், நல்லறிவையும் பெற முடிந்தது.  எல்லோரும் அறிவைப் பெற்றாலும் ஒவ்வோருவனும் தனிமனிதன் தானே,, அவனவனுக்கு எது ஒன்றைப் பற்றியும் ஒரு பார்வையும் கருத்தும் இருக்கும்தானே.  ஆற்று மீன்கள் அத்தனைக்கும் நீந்தத் தெரியும், ஆனாலும் ஒவ்வொன்றும் அதன் பாதையில் தனி வழியில் தானே நீந்துகிறது.

  அரசாட்சி நடந்த காலத்தில் மன்னரே உயரிய தலைவன் அவன் கருத்துக்கு மாற்றில்லை.  அவன் கொடுமையே புரிந்தாலும் அது தான் சிறப்பு என்றிருந்தனர்.  பலரும் கல்வி சானம் பெற்றதாலும் நன்மை தீமை புரிய ஆரம்பித்ததானாலும் அரசன் சொல்வதையெல்லாம் கண்மூடித்தனமாக ஏற்க மறுத்து ஒவ்வாததை எதிர்த்து அதற்கு எதிரான கருத்துகள் சொல்லப்பட்டது.  உலகின் அத்தனைப் புரட்சிக்கும் கருத்து வேறுபாடு மட்டுமே வித்திட்டத்து.  குடிமக்கள் உணவின்றி தவித்திருக்கையில் வரியை உயர்த்தி செலுத்ததவேண்டும் என்று மன்னன் கூறுவானேயானால் கருத்து மாறுபட்டு புரட்சி வெடிக்கும்.  மன்னராட்சியில் இஷ்டத்துக்கு கருத்துகூற முடியாது.  அப்புறம் பேச, பார்க்க, நுகர கழுத்துக்கு மேல் ஒன்றும் இருக்காது.

  மன்னராட்சி அழிந்து மக்களாட்சி மலர்ந்ததும் சுதந்திர உரிமையில் பேச்சுரிமை முதன்மை பெற்றது(கருத்து கூறவா!). நமக்கு சிறிதளவு புகழ் சமூகத்தில் இருக்குமென்றால் கருத்துகூற அந்த தகுதிபோதும்(!).  நமக்கு தெரியாத துறையில் ஏதேனும்  நிகழ்ந்தால் கூட நமக்கு அதைப்பற்றி தெரியாவிட்டாலும் கூட, நாமே கருத்துகூற விரும்பாவிட்டாலும் கூட நீங்கள் அதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள், இதைப்பற்றி என்ன நினைக்கிறீர்கள் என ஆரம்பித்து உசுப்பேற்றி அவனுக்கு தலைக்கனம் உண்டாக்கி பேசவைத்து அவன் முதுகை ரணகளமாக்கி இரவுத் தூக்கத்தை பாழ்படுத்திவிடுவர்.  சிலை வடிக்கும் சிற்பியிடம் பக்கத்து நாடு அணுகுண்டு வெடித்ததைப்பற்றியும், எழுத்தாளனிடம் வயல்வெளியில் பயிர்களில் திடீர் மருந்துகள் அடிப்பதைப்பற்றியும் கருத்துகேட்டால் என்னாகும்! பட்டு தெரிந்துகொள்ளுங்கள்.

  ஒரே துறையில் இருப்பவர்களிடம் மாற்றுக்கருத்து இருக்கவேண்டும்.  இல்லாவிடில் அந்தத்துறை வளராது.  சான்றோர்கள் சான்றோராயிருக்கக் காரணம் தன் கருத்துக்கு பிறர் மறுப்புகூறினால், பதில் கருத்து கூறினாலும் அதில் உண்மையிருப்பின் அதை ஒப்புக்கொளவர்.  ஆனாலும், சமூகத்தில் உயர்ந்த நிலையிலிருப்பவர்கள் தவறான கருத்துகளை சொல்லக்கூடாது.  இல்லாவிட்டால் மௌனிப்பது நல்லது.


Justus Sustermans - Portrait of Galileo Galilei, 1636
கலீலியோ கலீலி
  இந்த உலகத்தில் எந்தவொரு மனிதனுடைய கருத்துக்கும் எதிரான கருத்துடையவன் மிக குறைந்த அளவாய் ஒருவனாயும், மிக அதிக அளவாய் அவனைத்தவிர்த்த எல்லோருமாகவும் கூட இருக்கலாம்.  "உலகம் உருண்டை" என்ற கலிலியோவின் கருத்துக்கு அவரைத்தவிர அத்தனைபேரும் எதிராய்தானே இருந்தனர்.  இன்றும் கூட "உலகம் தட்டை"* எனக்கூறுவோர் சங்கம் அமைத்து உறுப்பினர்களாய் உள்ளனர்.  ஒருக்கால் நம் கருத்துக்கு எதிர்கருத்து மாறானதாய் உண்மைக்கு ஏற்பில்லாததாய் இருப்பினும் அதை 'இது என் கருத்து, அது உ(ன்)ங்கள் கருத்து' அவ்வளவே என ஏற்கும் மனப்பக்குவம் எல்லோருக்கும் வரவேண்டும்.  இதை எட்டும் நாளில் ஒவ்வோருவரும் அறிவிற் சிறந்த சான்றோனாய், சகிப்புத்தன்மை உடையவனாய் மாறலாம்.




Lakshmimittal22082006
லட்சுமி மிட்டல்
By Ricardo Stuckert/PR (Agência Brasil [1])
[CC-BY-3.0-br], via Wikimedia Commons
  நம் கைவிரல்களையே எடுத்துக்கொள்வோம், ஒன்று கட்டையாய் குட்டையாய், ஒன்று சப்பையாய் குட்டையாய், ஒன்று நெட்டையாய் இருக்கிறது.  ஐந்துவிரலும் கட்டைவிரல் பொலவோ அல்லது நடுவிரல் போல நீண்டு இருப்பின் எப்படியிருக்கும் யோசித்துப் பார்க்கவே ஒரு மாதிரியாக இருக்கிறது இல்லையா?.  கருத்து மாறுபாடுகள் அனைத்தும் வளர்ச்சிக்கு அடியுரங்கள்.  உலகின் இரும்புமனிதர் லட்சுமி மிட்டல் ஒருமுறை ஒரு நாட்டில் மிக நஷ்டத்தில் மூலப்பொருட்கள் கூட கிடைப்பதற்கு சிரமாயுள்ள ஒரு இரும்பு ஆலையை வாங்க முடிவுசெய்தார்.   உலகின் அத்தனை தொழிலதிபர்களும், தொழில்நுட்பவாதிகளும் இரும்பிலே ஊறியவர்களும் (எப்படி?)   அந்த தொழிற்சாலையைப் பார்த்து விட்டு இதை வாங்குவதும் கல்லைக் கட்டிக்கொண்டு கடலில் குதிப்பதும் ஒன்று என்றனர்.  ஆனால், அதற்கு நேர்மாறான கருத்தோடிருந்த மிட்டல் அந்த தொழிற்சாலையை வாங்கி ஒராண்டு காலத்திற்குள்ளேயே இதை லாபமீட்டும் ஒருதொழிற்சாலையாக மாற்றினார்.  'கருத்து வேறுபடும்போது நம் கருத்தில் வெற்றிபெற வேண்டும் என்கிற உத்வேகம் தோன்றி ஒன்றுக்கு நான்காய் அதற்காக உழைப்போம், சிந்திப்போம், செயல்படுவோம்.  இவை அனைத்தும் வளர்ச்சிக்குண்டான குணங்களாயிற்றே...


  நம் நாட்டின் மிக உயரிய பதவிகளில் ஒன்றான உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதீபதியாக இருந்து ஒய்வுபெற்ற ஆர். சி. லகோதி அவர்கள் தூக்கு தண்டனை இருக்கவேண்டாம் என்கிறார்.  புதிய தலைமை நீதிபதி ஒய். கே. சபர்வால் வேண்டும் என்கிறார்.  இருவரும் அடித்துக்கொள்ளவில்லையே.   அது உங்கள் கருத்து, இது என் கருத்து என ஏற்றுக் கொள்கின்றனரே.  அதனால் தான் அவர்கள் சான்றோர், அந்த மனப்பாங்கே அவர்கள் இந்த நிலைக்கு உயரக்காரணம்.

மாற்றுக்கருத்தைக் கொண்டிருப்பினும் அதில் பிடிமானமாக இருப்பவர்கள் தங்கள் கருத்தை நிலைநாட்டுகிறார்கள் அதாவது வெல்கிறார்கள்.  தனது ஆசிரியர் சொல்லியும் அதை நம்பாத நீல்ஸ்போர்(Niels Bohr)-ம் , பௌலி(Wolfgang Pauli)-ம் அணு இப்படி இருக்கும் என கூறி அவர்களுடைய ஆசிரியரின் கருத்தினின்று மாறுபட்டு (அதாவது இதுவரை எலக்ட்ரானையோ அணுவின் மற்ற பொருள்களையோ, எலக்ட்ரானின் சுழற்சியையோ யாரும் கண்டதில்லை (நான் அறிந்தவரையில்) ஆகவே அவை அனைத்தும் கருத்துகள்தான்)  அதை நிருபித்து அதற்காக நோபல் பரிசும் பெற்றார்களே..  இந்த வளர்ச்சி கருத்து மாறுபாட்டினால் தானே கிடைத்தது.  ஆகவே, ஒரு துறையில் இருப்பவர்களுக்கிடையில் கருத்து வேறுபாடு/மாறுபாடு வரவேற்கத்தக்கது.  (அது கைகலப்பாகாத வரையிலும்  வீம்புக்கு இல்லாதவரையிலும் :) )

"மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணம் உண்டு" அல்லவா.  நம் நீதிபதிகளின் கருத்தைப் பற்றிக் கூறும்போது இது நினைவிற்கு வந்தது.  இது எப்போதோ, எதிலோ படித்தது.  வெளிநாடு ஒன்றில் நீதிபதிகளின் தீர்ப்பை எதிர்த்து நாளேடுகளில் செய்தி வந்திருந்தது.  அந்த செய்தி,  "தீர்ப்பளித்த நீதிபதிகள் அனைவரும் வயோதிக, மறதிநிறைந்த முட்டாள்கள்" என இருந்தது.  இது குறித்து அவர்களிடம் கருத்து கேட்கையில்  அவர்கள்அளித்த பதில், "நாங்கள் வயோதிகர்கள் என்பது உண்மை, அதனால் எங்களுக்கு மறதியிருப்பதும் ஓரளவு உண்மை.  நாங்கள் முட்டாள்கள் என்பது அவர்களுடைய கருத்து".  இப்படி கூறும் அல்லது ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு உண்டா என்றால் இல்லை என்பது தான் முடிவான பதிலாக அமையும். 

உலகில் அத்தனையும் இரண்டு நன்மை-தீமை, பகல்-இரவு, ஒளி-இருள்... இப்படி பல.. எனில் கருத்துமட்டும் ஒன்றாக இருக்கவேண்டுமா என்ன?  ஒரு நாணயத்திற்கே 2 பக்கங்கள் உண்டு எனில் கருத்துக்கு கண்டிப்பாக பல பக்கங்கள் இருக்கத்தான் செய்யும், அதை ஏற்கும் மனோபாவத்தை வளர்த்துக்கொள்வோம்.  சகிப்புத்தன்மையோடு மாற்றுக் கருத்துகளுக்கும் இடமளித்து முன்னேற்றத்திற்கு வித்திடுவோம்.  என்ன என் கருத்தை ஒத்துக்கொள்கிறீர்களா...? ;)


*  உலகம் தட்டை என நம்பும் சங்கம் குறித்த மேலதிக தகவலுக்கு ஆங்கில விக்கி கட்டுரை
அவர்களின் அதிகாரப்பூர்வ இணையதளம் The flat earth society .