Showing posts with label பாஜக. Show all posts
Showing posts with label பாஜக. Show all posts

Saturday, July 12, 2014

பட்ஜெட் - 2014


   மோடி தலைமையிலான பாஜக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்று இனிதே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் இரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் திரு. சதானந்த கவுடாவால்  தாக்கல் செய்யப்பட்டது, மிகப்பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட (எங்கே எதிர்ப்பது? ஆளும் கட்சிக்கு மட்டுமே பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த ஒரு நாட்டில், முதல் முறையாக எதிர்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான், தங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை தர வேண்டும் என்று முறையிடும் அளவிற்கு ஆகிவிட்டதே.. பாவம்!) இது மிக சிறிய அளவிலான சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது(கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே தூரலோ, சிறு மழையோ...).  முந்தைய ஆட்சியில் பல புதிய இரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்தபோதும் சிறு சிறு சஞ்சலப்பு இருந்த தமிழகத்தில், இந்தமுறை மொத்தமாக வெறும் 4 இரயில்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும்(அதிலும் ஓன்றைத்தவிர மற்ற இரயில்கள் அனைத்தும் சென்னையிலிருந்து அப்படியே... அப்படியே வடக்கு நோக்கி சென்றுவிடுகிறது.. Actual-ஆ இந்த டிரெயின்லாம் வடநாட்டுக்காரன் மெட்ராசுக்கு சுலுவா வந்து போகதான்.  மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றே சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே மக்கள், மற்றோரெல்லாம் மாக்கள்)திமுக, அதிமுக இரண்டுமே நல்ல கருத்துகளையே உதிர்த்துள்ளது.  போதும் பாஸு, பொது பட்ஜெட்னு சொல்லிட்டு இரயில்கதைய சொல்லிட்டு இருக்கீங்க.... ம்.. வண்டிய நகத்துங்க...

   திரு அருண்ஜேட்லி அவர்கள் தயாரித்த இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் என்று எதும் இல்லை என்றாலும் மிகப் பாதகமான அம்சங்களும் எதுவும் இல்லை என்பதால், மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் மிகப்பெரிய எதிர்ப்பும் இல்லை (அம்மாடி, எவ்ளோ மிகப்பெரிய).  பட்ஜெட்டுக்குப் பின்னால் அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் எப்படி அமையுமோ? நாட்டின் முன்னேற்றத்திற்காக கசப்பு மருந்தைக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி சில மாதங்களாக வானம் தொட்டு வளர்ந்துகொண்டிருந்த பங்குச்சந்தைக்கூட ஒரே நாளில் 500த்தி சொச்சம் புள்ளிகள் இறங்கி தரையைத் தடவிக் கொண்டிருந்த்து.  ஊடகங்கள், ஒரே நாளில் இந்திய முதலீட்டார்களின் சொத்து சில ஆயிரம்/லட்சம் கோடிகள் காணாமல் போய்விட்டது என்று பிளிரிக்கொண்டிருந்தன.  ஆனால், நிதிநிலை அறிக்கை நாளான நேற்று(10-7-14) பங்குச்சந்தை அருண்ஜேட்லி அவர்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு மெல்ல மேலெழுந்து வந்தது, திறந்த வீட்டிற்குள் வர எட்டிப்பார்க்கும் குட்டிப்பூனை போல.

   Salaried community எனப்படும் சம்பளக்காரர்களுக்கு ரசகுலா இல்லாவிட்டாலும் ரஸ்தாலி வாழைப்பழம் கொடுத்துள்ளார்.  ஆமாம், ஒட்டு மொத்தமாக இதுவரை இருக்கும் வரிச்சலுகைக்கு மேல் இன்னும் ஒரு லட்ச ரூபாய் வரிச்சலுகைக்குள் வந்திருக்கிறது.  வருமான வரிக்கான பிரிவுகளில்(Slab)-ல் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும் 5 லட்சம் வருமானம் இருப்பவர் 10,000 ருபாயும், 5-க்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர் 20,000 ருபாயும், அதற்குமேல் உள்ளவர்கள் 30,000 ரூபாயும் வரி செலுத்துதலில் இருந்து மிச்சம் பிடிக்கலாம்.

                                                                       நடப்பிலிருப்பது        நடைமுறைக்கு வரவிருப்பது
வரி செலுத்துதலில் இருந்து விலக்கு :              2 லட்சம் வரை                    2.5 லட்சம் வரை
                                                                  (முதியோர் ; 2.5 லட்சம்)         (முதியோர் 3 லட்சம்)

80C பிரிவின் கீழான விலக்கு :                        1 லட்சம்                              1.5 லட்சம்
வீட்டுக்கடன் மீதான வரி விலக்கு ;                 1.5 லட்சம்                           2 லட்சம்

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, என் கவனத்தை ஈர்த்த(ஆமா, பெரிய இவரு...  உண்மைய சொல்லு மத்த விஷயலாம் ஒனக்கு தெரியாது தானே..) சில புதிய (அ) பழைய திட்டங்கள்/துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள்/ புதிய அறிவிப்புகளை கீழே தந்துள்ளேன்.

* வளர்ச்சி 5.4 -லிருந்து 5.9 ஆக இருக்கும், நிதிப் பற்றாக்குறை 4.1 ஆக இருக்கும் இரு ஆண்டுகளில் 3 ஆக குறைக்கப்படும்.
* புதியதாக 5 IIT களும், 5 IIM களும் மேலும் 4 AIIMS மருத்துவமனைகளும் திறக்கப்பட உள்ளது
* அந்தமான் & நிக்கோபார் பகுதியில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  பார்வைச் சவால் உடையோருக்கான புத்தகங்கள் அச்சிடும் பிரையல்(Brail) அச்சகங்கள் 15 புதியதாக மற்றும் இயங்கிவரும் 10 அச்சகங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
* 200 கோடி ருபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்தல். (குஜராத்காரர் அப்டின்றதனாலேயே காங்கிரஸ் இவருக்கு தர வேண்டிய மரியாதய கொடுக்கல, நான் ஆட்சிக்கு வந்தும் இவருக்கு பெரிய செல வப்பேனு மோடி எலக்சனப்ப சொன்னாருள்ள...)
* 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தனியாருடன் கூட்டு வைத்து(PPP - Private Public Partnership) விமான நிலையங்கள் அமைத்தல்.  (கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கஸ்டமர் கம்மினு பாண்டிச்சேரிக்கு சர்வீஸ் இருந்த கடைசி ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடைய சாத்துனது ஞாபகம் இருக்கா?  டிரெயின் விலை ஏறுனதுனால இனி கொஞ்சம்பேரு ஃபிளைட் யூஸ் பண்ணா நல்ல சக்ஸஸ் ஆக சான்ஸ் இருக்குற ஒரு திட்டம்)
* காப்பீட்டுதுறை மற்றும் பாதுகாப்புத்துறையில் 26% லிருந்து 49% வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பு.  (அப்பாடா, 51%ஆக்கபோறாங்க அவ்ளோதான் நாம, வெளிநாட்டுக்காரன் கையில நம்மள அடகு வச்சிடுவாங்கனு பயமூர்த்திகிட்டே இருந்தாங்க நல்ல வேள..)
* புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(New and Renewable Energy) துறையில் முதலீடு 500 கோடி.  (தமிழ்நாடு இந்த லிஸ்ட்ல முக்கியமா சேர்க்கப்பட்டிருக்கு... நாம மின் மிகை மாநிலமா ஆயிடுவோமா... இல்ல சில பல வருஷங்களுக்குப் பிறகு 'அதுவே, பழகிடுமா' பாப்போம்.)
* ஆதி திராவிட நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு 50548 கோடி ஒதுக்கீடு.
* நீர்வழிப் போக்கு வரத்து (Jal Mark Vikas) மேம்பாட்டுக்கு 4200 கோடி.  (சென்னையில கூவத்துலயும் கால்வாய்லயும் மதராசப்பட்டினம் மாதிரி போட் போகும்னுலாம் எதிர்பாக்காதீங்க... )
* விவசா(யம்)யிகளுக்கான தொலைக்காட்சி சேவை 100 கோடி.
* புதிய விவசாயப் பல்கலைக்கழகங்கள் அமைக்க 200 கோடி.
* 4 AIIMS மருத்துவமனைகள் உருவாக்க 500 கோடி.
* மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 100 கோடி.
* கிராமப்புறங்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடி.
* பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு-தகுதி-ஒரு-ஓய்வூதியம் (One rank - one pension) 1000 கோடி.  (இப்ப புரியுதுங்களா ஏன் கவர்மென்ட்டு பென்சன்லாம் இனிமே புச்சா வேலைக்கு(பாதுகாப்புத் துறை தவிர்த்து, இப்பொழுதும் இவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்திலிருந்து, மானியம் வரை எல்லா சலுகையும் உண்டு) சேர்ரவங்களுக்கு கெடையாதுனு ஏன் சொல்லிச்சுனு? 1000 கோடி ரூவா... )
* பொதுச் சேம நல நிதியில் முதலீடு செய்யும் தொகைக்கான உச்சவரம்பு 1 லிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.