Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.

No comments:

Post a Comment