Thursday, May 31, 2012

வெற்றித்திருமகன் விஸ்வநாதன் ஆனந்த்(Viswanathan Anand)..


டென்னிஸ் சாம்ராஜ்யத்திற்கு ஒரு ரோஜர் ஃபெடரர் போல்,  கோல்ஃப் சாம்ராஜ்யத்திற்கு ஒரு டைகர் உட்ஸ் போல்,  சதுரங்க சாம்ராஜ்யத்தின் சக்ரவர்த்தி விஸ்வநாதன் ஆனந்த்.

Tuesday, May 8, 2012

நொ மேன்'ஸ் லேண்ட்(No Man's Land-2001 Bosnian movie) - போஸ்னிய மொழித் திரைப்படம் ஒரு பார்வை


கன்னிவெடியில் மாட்டிக்கொண்ட ஒருவனின் கதி என்னவாகிறது என்கிற ஒரு வரி விஷயம்தான் கதை.

 கதை சொல்லப்பட்டவிதமும், திரைக்கதையும்(இயக்குனரின் பெயர் டேனிஸ் டனோவிக்)  உங்களைப்  படத்திலிருந்து ஒரு நொடி கூட இப்படி அப்படி நகரவிடாது.  படத்தில் 3-லிருந்து 5 பேர் மட்டுமே மிக முக்கிய கதாபாத்திரங்கள், மற்ற அனைத்தும் ஒருசில காட்சிகளில் மட்டுமே வந்துபோகக்கூடிய சிறிய பாத்திரங்கள் மட்டுமே.  படத்திற்கு imdb-ல் 8.0 மதிப்பெண்கள் தரப்பட்டுள்ளது(பலரின் ஓட்டுகளின் சராசரி).  இரு நாடுகளின் எல்லையில் கதை துவங்குகிறது, ஒரு வழிகாட்டியின் வழிகாட்டுதல்படி ஒரு நாட்டின் வீரர்கள்அணியாக வருகிறார்கள் அதிகப்படியான பனிமூட்டததின் காரணமாக வழிதப்பி இரவில் ஒரு இடத்தில் தங்குகிறார்கள்.  மறுநாள் பொழுது விடிந்ததும் எதிரிநாட்டின் படைக்கருகில் தாங்கள் இருப்பதை அறிகிறார்கள் அதை அறிந்து சுதாரிக்கும்முன்பே தாக்குதலுக்கு ஆளாகி ஒருவனைத்தவிர(அவனும் இரண்டு புல்லட்டுகளை உடம்பில் சுமந்துகொண்டிருக்கிறான்) எல்லோரும் இறந்துவிடுகிறார்கள்.  எதிரிநாட்டு படை 2 பேரை அனுப்பி யாராவது உயிரோடு இருக்கிறார்களா.. பிரச்சனைகள் ஏதும் உண்டா என அறிந்துவர அனுப்புகிறது.  அவர்கள் இறந்துபோன ஒருவனை இழுத்துவந்து ஒரு சிறு குழி உண்டாக்கி அதில் ஒரு கன்னிவெடியை வைத்து அதன் மேல் அவன் பிணத்தை கிடத்தி கன்னிவெடியை செயலாக்குகிறார்கள்.  இறந்த உடலை தூக்கினால் கன்னிவெடி வெடித்துவிடும், அதனால் பிணத்தை தூக்க வரும் அவனைச்சேர்ந்த மற்ற ஆட்களும் அப்பொழுது இறந்துவிடுவார்கள் என்று 2 பேரில் ஒருவன் விளக்கமளிக்கிறான்.  அப்பொழுது பதுங்கியிருந்த அடிபட்ட எதிரி வீரன் 2 பேரில் ஒருவனை சுட்டுக்கொன்றுவிடுகிறான்.  இதன் பிறகு கொஞ்சநேரத்தில் கன்னிவெடியின் மேல் கிடத்தப்பட்டவன் மயக்கத்தில் இருந்து எழுகிறான் அவன் உண்மையில் சாகவில்லை.  அதன் பிறகு அந்த மூவருக்கும் இடையில் என்ன விதமான சம்பாஷனைகள் நடக்கிறது, அவனைக்காப்பாற்ற மற்ற இருவரும் என்ன யோசனை செய்கிறார்கள் அது செயலாக்கப்பட்டதா அவன் காப்பாற்றப்பட்டானா.. என்பதுதான் மீதிப்படம்.

இதற்க்கிடையில் ஊடகங்கள் தங்கள் சேனலை முன்னிலைப்படுத்த என்னவெல்லாம் தில்லாலங்கடி வேலைகளை செய்கின்றன,  அரசியல், இராணுவம், ஐநா(UN) பாதுகாப்புப்படை போன்றவற்றிற்க்கு போரின்போது என்னென்ன பிரச்சனைகள், நிர்பந்தங்கள் வருகின்றன... அவை எப்படி கையாளப்படுகின்றன என்பது அருமையாக காட்டப்படுள்ளது.

கன்னிவெடியில் மாட்டிக்கொண்டவனை காப்பாற்ற வரும் வல்லுனர், கன்னிவெடியினை பார்த்ததும் இவனை காப்பாற்ற முடியாது, அவன் முன்னரே இறந்துவிட்டான் என வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  கடைசியில் சூழலின் நிர்பந்தத்தாலும், கட்டாயத்தினாலும் அந்த கன்னிவெடியில் சிக்கிய மனிதன் காப்பாற்றப்படாமலே ஊடகத்திற்கும், வெளி உலகத்திற்கும் காப்பற்றப்பட்டதாக காட்டப்பட்டு படம் முடிகிறது.  படம் முடியும்போது எதுவெல்லாம் நாம் உண்மை என நம்புகிறோமோ அதில் பல உண்மைகள் உருவாக்கப்படுகின்றன என்பதை உணருவதும் அதனால்  உங்கள் மனம் கணத்திருப்பதும் உண்மை.

1 1/2 மணிநேரம் மட்டுமே ஓடும் சிறிய படம் ஆனால் கண்டிப்பாக எல்லோரும்(குறிப்பாக வித்தியாசத்தை விரும்பும் உலக சினிமா விரும்பிகள்) பார்க்கவேண்டிய திரைப்படம்.

விருதுகள்:
இந்த திரைப்படம் 2002-ம் ஆண்டிற்கான சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதையும், 2001 ஆண்டு சிறந்த அயல்மொழித் திரைப்படத்திற்க்கான கோல்டன் குளோப் விருதையும், 2001-ம் ஆண்டிற்கான கேன்ஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் பெற்றுள்ளது.

குறிப்பு:
No man's land - என்கிற ஆங்கில வாக்கியத்திற்கு யாரும் இதுவரை ஆக்ரமிக்காத, குறிப்பாக இரு நாடுகளுக்கிடையே யாருக்கு சொந்தம் என்ற பிரச்சனைக்குறிய நிலப்பகுதி என்று பொருள்.

மற்றுமொரு குறிப்பு:
இந்தப்படம் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதை வென்ற அதே 2001-ம் ஆண்டில்தான் இந்தியாவிலிருந்து இந்தி திரைப்படமான அமீர்கானின் 'லகான்' படமும் அயல்மொழித்திரைப்படத்திற்க்கான ஆஸ்கர் விருதிற்கான போட்டியிலிருந்தது.


Tuesday, April 24, 2012

நீங்களும் எழுத ஆரம்பியுங்கள்... உலகுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

  கி. ராஜநாராயணன் அவர்களின் சாகித்திய அகாடமி விருது பெற்ற 'கோபல்லபுரத்து மக்கள்' நாவலை படித்தேன்.  அதன் பிறகு அவரின் கோபல்ல கிராமம், அந்தமான் நாயக்கர் (இந்த 3ம் தொடர் நாவல்கள்), அவருடைய எல்லா சிறுகதைகளையும் ஒரே தொகுப்பாக கொண்டுவந்த 'கி. ராஜநாராயணன் கதைகள்' ஆகியவற்றையும் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  இந்த பதிவு இந்த நூல்களை படித்துக்கொண்டிருக்கும் போது எனக்கு ஏற்பட்ட சிந்தனைகளின் தொகுப்பு.

கி.ரா-வின் அற்புதமான எளிய வட்டார வழக்கு மொழியில் அமைந்த எழுத்து நடை, நாவல் முழுவதும் பல குட்டி, குறுங்கதைகளை சுவாரஸ்யமாக சொல்லும் பாங்கு எல்லாமே அற்புதம்.  கிராமத்து வாழ்க்கை வாழ்ந்த பலருக்கும் அவர்களின் பழைய நினைவுகளை கண்முன் கொண்டுவரும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.  நிறைய கதைகள் என்னை என்னுடைய பால்யத்துக்கு, எங்கள் கிராமத்திற்கு அப்படியே அலேக்காக தூக்கிப்போய்விட்டன.  பல கதைகளும், கதை மாந்தரும், நிகழ்வுகளும் நான் சந்தித்த நபரகளையும், நானோ, எனை நண்பர்களோ சந்தித்த நிகழ்வுகளையும், நினைவுபடுத்தும்.  சில சாதாரண நிகழ்வுகள் கூட கி.ரா-வின் கைவண்ணத்தில் அற்புதமான கதையாகிவிடுகிறது.  நம் சமகாலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கும் மிகச்சிறப்பான கதைசொல்லிகளில் கி.ரா மிக மிக
 முக்கியமானவர்.


  வரும் தலைமுறையினருக்கு பல விஷயங்கள், அனுபவங்கள், பொருட்கள்(உதாரணமாக முன்பெல்லாம் எல்லோர் வீட்டிலும் ஆட்டுக்கல், அம்மிக்கல், உரல், முறம் எல்லாம் இருக்கும் இப்பொழுது கிராமங்களில் கூட இல்லை :(... மிக்ஸி, கிரைண்டர் தான் இருக்கிறது), அவற்றின் பெயர்கள், சொற்கள், வழக்குமொழிகள், (கிராமத்து) நடைமுறைகள், வயதில் மூத்தவர்களினை அறிவு, அனுபவ ஞானம் கிடைக்க வழியே இல்லை என்ற நிலையில் நாம்
 இருக்கிறொம்.  அதையும் மீறி நமக்கு அடுத்த தலைமுறையிரும் நம் அனுபவங்களை அவர்களாகவே பெறமுடியவிட்டாலும், குறைந்தபடசம் படித்து அறியவாவது ஒரு வாய்ப்பை கொடுக்கவேண்டும்.  அதற்கு எழுதும் ஆசையம், வாயப்பும் உள்ளவர்கள் தங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.  சூட்சுமம் என்னவென்றால் அனுபவங்களை படிப்பவருக்கு பிடிக்கும் வண்ணம் கொடுக்கவேண்டும்.  அதற்கு அனுபவத்தை அப்படியே
 கொடுக்ககூடாது, கற்பனையுடன் குழைத்து கொடுக்க வேண்டும். அதற்கு நாவலும், கதையும்தான் சிறந்த வழி அதாவது மருந்தை தேனில் குழைத்து கொடுப்பதுபோல, அதில் கி.ரா கில்லாடி.  நாவல், கதை எதுவானாலும் அதில் அவரின் அனுபவங்கள் ஆங்காங்கே தேனில் குழைத்ததுபோல சுவையாய் இருக்கும்.


 கி.ரா-வை படித்ததில் இருந்து எனக்கும் கூட நான் அனுபவித்த, சந்தித்த எனக்கு எற்பட்ட அனுபவங்களை ஒரு கதையாகவோ, கட்டுரையாகவோ, படைப்பாக்க வேண்டும் என்கிற  ஆசையாய் இருக்கிறது, நானும் எழுத ஆரம்பிப்பேன், எழுதுவேன் என நம்புகிறேன்.  நான் விருத்தாசலத்தில் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரியில் இளநிலை இறுதியாண்டு படித்துக்கொண்டிருந்தபோது கல்லூரியின் ஆண்டுமலருக்கு ஒரு கதை எழுதி அனுப்பினேன்.  அது ஆண்டிமலரில் பிரசுரமாகியிருந்ததாக நண்பன் மூலமே அறிந்தேன்.  அதுதான் எனது
 பிரசுரமான முதல் படைப்பு, ஆனால் அப்போது நான் முதுநிலை படிப்பிற்காக காரைக்குடிக்கு சென்றுவிட்டதால் அந்த ஆண்டுமலர் எனக்கு கிடைக்கவில்லை :(.  கதையின் தலைப்பு ஞாபகமில்லை, ஆனால் கதை, கல்லூரியில் படித்துவிட்டு வேலைதேடி அலையும் ஒரு இளைஞன் கடைசியில் மனம்மாறி தன் தந்தையுடன் விவசாயத்திற்க
 திரும்புவதுதாக முடியும்.  எழுதும் ஆசையுள்ள அனைவரும் எவ்வித தயக்கமும்மின்றி உடனே ஆரம்பியுங்கள், வலைப்பூவில் போட முடியாவிட்டால் கூட குறைந்த பட்சம் ஒரு காகிதத்திலாவது எழுதி வைத்துக்கொள்ளுங்கள்.  ஒரு விஷயம் தெரியுமா..? கி.ரா பள்ளிப்படிப்பை கூட முடிக்கவில்லை[கி.ரா தன்னைப்பற்றி குறிப்பிடும்போது 'நான்
 மழைக்குதான் பள்ளிக்கூடம் ஒதுங்கினினேன்; ஒதுங்கியவன் பள்ளிக்கூடத்தைப் பார்க்காமல் மழையையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டேன்' என்பார் ], தன்னுடைய 40 வயதிற்குமேல் தான் எழுத ஆரம்பித்தார்.  ஆகவே எழுத ஆரம்பிக்க ஒருவருக்கு படிப்போ, பதவியோ, வயதோ ஒரு தடையில்லை ஆர்வமும் கற்பனையும்தான் தேவை.  எழுதுங்கள் உங்கள் அனுபவங்களை, அதை பகிர்ந்துகொள்ளுங்கள் உலகுடன் வாழ்த்துக்கள்.


Monday, April 16, 2012

நண்பர்களின் வசை காதலுக்கு முன், காதலுக்கு பின்....

கா.மு:
 டேய் நாதாரி உனக்கெல்லாம் எதுக்குடா ஒரு மொபைலு....?   அத தூக்கி குப்பதொட்டில போடுடா பன்னி.  10
 மிஸ்டு கால், 4 மெஸேஜ் அனுப்பியும் ஒரு பதிலும் இல்ல.  மொபைல எங்கடா வச்சிருப்ப? எடுத்தே
 பாக்கமாட்டியா...?

கா.பி:
 டேய் மச்சான் ஏண்டா இப்புடி இருக்க...?  நானே வெறும் 50 காசுதாண்டா வச்சிருந்தேன், அதையும் மிஸ்டுகால்
 கொடுக்கதான்டா வச்சிருந்தேன்... இப்புடி அநியாயமா 1/2 ரிங்குலயே அட்டன்(டு) பண்ணிட்டியேடா.. மொபைல
 எந்நேரமும் கையிலயே வெச்சி நோண்டிட்டிருப்பியாடா...

காதல் கவிதைகள்.....

துணிக்கடையில் நீ
எடுத்து பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகள்
எல்லாம் நீ
உடுத்தி பார்த்துவிட்டு
வைத்துவிட்ட ஆடைகளை
பொறாமையோடுதான்
பார்க்கின்றன.


================================

"நான் அழகாக இருக்கிறேனா?" என்று
நீ உன் தெரு
தோழிகளில் ஒருத்தியிடம்
கேட்டுக்கொண்டிருக்கும் அதே
நேரத்தில்
அழகு உன் தெருவிலுள்ள
எல்லோருடமும் கேட்டுக்கொண்டுடிருந்தது
"நான் அவளைப்போல இருக்கிறேனா?" என்று

================================

உன்னொடு பெரிய
இம்சையாய் போய்விட்டது...
உறங்கிக் கொண்டிருக்கும்போது
உன்னைப் பற்றி
ஒரு கவிதை தோன்றி
விழிக்க வைத்துவிடுகிறது.

================================

என் நீண்டநாள்
சந்தேகம்
உன்னால் எப்போழுதும்
அழகாய் மட்டும்தான்
இருக்க முடியுமா?

================================

காதலித்தால்
வாழ்க்கை அழகாகும்
காதலிக்கப்பட்டால்
நாமே அழகாவோம்
நான் உன்னை காதலித்து
என் வாழ்வையும்
உன்னையும்
அழகாக்கிவிட்டேன்
ஒழுங்கு மரியாதையாக
நீயும் என்னை
காதலித்து
உன் வாழ்க்கையை
அழகாக்கிக்கொள்.

================================

என்னாயிற்று எனக்கு?
இப்பொழுதெல்லாம்
உன்னை நினைத்துக்கொண்டே
உறங்கி
உன் நினைவாய்
எழுந்திருக்கிறேன்
என்னை பற்றிய
நினைவாவது
இருக்கிறதா உனக்கு..?

================================

நீண்ட வரிசையில்
சாமி தரிசனத்திற்க்கு
நின்று
தீபாராதனையை காணும்
பகதன் போல்
மகிழ்ந்து உற்சாகமடைகிறேன்
உன்னிடமிருந்து வரும்
குறுந்தகவலுக்கு
காத்திருந்து அது
வரும்போது

================================

யாரிடமிருந்து
குறுந்தகவல்
வந்தாலும்
அது
உன்னிடமிருந்து
வந்ததாக இருக்க
வேண்டுமென்று
எண்ணிக்கொண்டே
அலைபேசியை
எடுக்கிறேன்.

================================

மணிமேகலையின்
அட்சய பாத்திரம்போல
நீ ஏதும்
அழகு பாத்திரம்
வைத்திருக்கிறாயா..?
இத்தனைபேர் கண்களும்
உன் அழகை
ரசித்தபின்னும்
அழகு குறையாமல்
அப்படியே இருக்கிறாயே..

மேலும் படிக்க....