Wednesday, November 19, 2014

ராஜா ராணி - திரைப்படம் ஒரு அரைகுறை விமர்சனம்.

ஒரே வாக்கியத்தில் சொல்ல வேண்டுமானால், "படம் அழகான கவிதை போல இருக்கிறது."
There is LIFE after love failure
There is LOVE after love failure
இதுதான் படத்தின் tagline.  அதை அப்படியே பிரிதிபலிக்கும்படி படமும் வந்துள்ளது.

நம் எல்லோருக்கும் தெரிந்த, பார்த்துப் பழகிய, அரதப் பழசான அதே காதல் கதைதான் (கொஞ்சமே காலே அரைக்கால் வித்யாசமான) என்றாலும்,, வழங்கிய விதத்திலும் (திரைக்கதை) கதாப்பாத்திரத் தேர்வினாலும் படம் சிகரமாய் எழுந்து நிற்கிறது.

 படத்தை தோளில் தாங்குவதில் ஆர்யா, நயன்தாரா, ஜெய், சத்யராஜ் போன்றோரின் நடிப்பும், படத்தையொட்டி, கதையையொட்டியே அமைந்த சத்யன், சந்தானத்தின் காமெடியும் முக்கியப் பங்காற்றுகிறது.  கவிதை போன்ற படத்தில் G. V. பிரகாஷின் இசை மயிலிறகு போல மென்மையாய் வருடுகிறது (பின்னணி இசை டாப்).  பாடல்கள் எனக்கு பெரிதாய் மனதில் பதியவில்லை, 2,3 முறை கேட்டால் பிடித்துப்போய்விடும் ரகம்.

  ஏ.ஆர் முருகதாஸுக்கு கதையே இப்படி அமைகிறதா இல்லை அமைத்துக் கொள்கிறாரா எனத் தெரியவில்லை.  "எங்கேயும் எப்போதும்" போல இங்கேயும் 2 காதல், சில ப்ளாஷ்பேக், காதல் ஜோடியில் ஒருவர் விபத்தில் இறக்கிறார்.  முதல் பாதி ஒரு காதலுக்கும், மறுபாதி பிறிதொரு காதலுக்கும் என பிரித்துக்கொண்டு  அறிமுக இயக்குனர் அட்லி (எங்கேயும் எப்போதும் இயக்குனர் சரவணனைப் போலவே) இயக்கியுள்ளார். 

கதை:
முதல் காதல் முழுமையடையாத ஜான்(ஆர்யா), ரெஜினா(நயன்தாரா), இருவரும் பெற்றோரின் விருப்பத்திற்காக திருமணம் செய்துகொள்ளும் இருவரின் விருப்பமும் இல்லாத திருமணத்தில், ஒருவரை பற்றி ஒருவர் புரிந்து கொள்ளாத, கொள்ள விரும்பாத, தினம் வாழ்க்கை ஒடுகிறது.  திடீர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்படும் ரெஜினா தனது முதல் காதல் ப்ளாஷ்பேக்கை ஜானுடன் பகிர்ந்துகொள்கிறார்.

கஸ்டமர்கேர் காலில் மோதலில் ஆரம்பித்து, காதலில் முடிகிறது ரெஜினா, சூர்யா(ஜெய்) ப்ளாஷ்பேக்.  கலகலவென ஓடும் படத்தின் கலகலப்புக்கு சத்யன், ஜெய் ஜோடி க்யாரண்டி.   சத்யராஜ் நடிப்பில் அட்டகாசம் என்றாலும் அவரும், நயன்தாராவும் வரும் பல காட்சிகள் எனக்கு ஏற்புடையதாய் இல்லை(ஒரு வேளை மேல்தட்டு மக்களின் வாழ்வை நான் அறியாததாலோ என்னவோ?).  இந்த கதாபாத்திரத்தையா பத்திரிக்கைகள் ஒரு Ideal அப்பா என்றெல்லாம் கொண்டாடின?.  வேண்டாத திருமணத்திற்குப் பின்னான ப்ளாஷ்பேக் முடிந்த பின்னால் ஆர்யா புதுவாழ்விற்கு தயாரானாலும், நயன்தாரா தயாரில்லை என்பதால், வாழ்க்கைப் பிரச்சனை ஓடிக்கொண்டிருக்கிறது.

இடைவேளைக்குப் பிறகு சந்தானத்தின் மூலம் ஆர்யாவின் முதல்காதல் ப்ளாஷ்பேக்.  நயன், ஜெய் காதல் ஒரு கவிதை என்றால், ஆர்யா நஹ்ரியா நசீம் காதல் ஒரு ஹைக்கூ.

அரைகுறையின் ஃப்ளாஷ்பேக்:
நான் எப்போதும் தேவைக்கு அதிகமாகப் பொய் சொல்லமாட்டேன், இந்த இடுகையின் தலைப்பிலேயே சொல்லியிருந்தேன் இது ஒரு அரைகுறை விமர்சனம் என்று.  அதனால் விமர்சனத்தை அரைகுறையாகவே முடித்துவிட்டேன்.  படம் பாத்துட்டு வந்த அன்னிக்கு உக்காந்து விமர்சனம் எழுத ஆரம்பிச்சேன், பாதியில விட்டுட்டேன் (தூங்கிருப்பனோ? சே சே இருக்காது. வேற ஏதோ காரணமாயிருக்கும்) அப்புறம் அப்டியே விட்டாச்சு, தீடீர்னு இன்னிக்கு கையில திரும்ப கெடச்சது, சரி கழுத எழுதிபுட்டோம் நம்ம ஃப்ளாக்-ல போட்டு வுட்டுடுவோம்னு தான்.

Tuesday, November 18, 2014

கல்லூரி(காதல்) கணக்கு


By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
By Durdana shoshe (Own work) via Wikimedia Commons
கல்லூரி கணக்கு
நோட்டில் காதல்

கவிதை கிறுக்கியிருக்கிறிர்களா?
'ஆம்' 
.
.

அப்படியா.. வாழ்த்துகள்
கையை கொடுங்கள் இப்படி...
ஏனென்றால்,
கணக்கு தெரியாத
வாழ்கையை விட
காதல் தெரியாத

வாழ்கை வெறுமையானது...





Monday, November 17, 2014

கல்லூரித் தோழி ...

கல்லூரி காலத்தில்
கள்ளமில்லா நம் நட்பை
காதலென்று நண்பர்கள்
கிசுகிசுக்கும் போதெல்லாம்
சிரித்துவிட்டு போய்விடுவேன்
என் சிரிப்பே அவர்கள்
கிசுகிசுவுக்கு தீனியாயிருக்கும்

6 வருடங் கழிந்த
பிறிதொரு நாளில்
மாலை நேர இரயில் ஒன்றில்
நீதானா அது என்று
ஐயத்தோடு காண்கிறேன்
கண்டும் காணாததுபோல்
என் பார்வை தவிர்த்தாய்
உன் அருகிருந்தது உன்
கொடுங்கோல் கணவனாய்
இருந்திருக்கக் கூடும் என்றிருந்தேன்

என்னுடன் வந்த நம் நண்பன்
நீதானென்றான்;
உனக்கு இன்னும் திருமணம்
ஆகவில்லை என்றும் சொன்னான்
ஏனோ,
அவனும் கிசுகிசுக்கவில்லை
எனக்கும் சிரிக்க திராணியில்லை

என் பார்வை தவிர்த்த
உன் பார்வையில் ஏதோ ஒன்று
புரிந்தது...
நண்பனோடு இரயில் பெட்டியில்
வேறொரு இடம் மாறினேன்.


Wednesday, November 5, 2014

நேரம் மாறுவதில்லை..

முதலில் கானாத்தூரில் இருந்து
பேருந்தில் வருவேன்
அதன் பிறகு திருவல்லிக்கேணியில் இருந்து
மின்சார இரயில் வந்தேன்
இப்பொழுது திருவான்மியூரில் இருந்து
நடந்தோ, பேருந்திலோ வந்துகொண்டிருக்கிறேன்
ஆனால், இப்போதும்
நான் அலுவலகம் வந்து சேரும் நேரம்
கூடவோ, குறையவோ இல்லை...
நேரம் மாறுவதில்லை.

தண்டனைச் சிறை


Old man in Tiruvannamalai - India
Photo by Adam Jones
என்றோ செய்த தவறுக்கு
  இன்று தண்டனையாம் எங்களுக்கு
எங்கள் சிறைச்சாலை சற்றே மாறுபட்டது
  வேண்டியது கிடைக்கும்
நாள் விடிந்ததும் நாளேடு உண்டு
  வேளைக்கு சோறும் உண்டு
படுத்துறங்க மெத்தையுண்டு
  கண்டுமகிழ தொலைக்காட்சியும் உண்டு
ஆனாலும் அது தண்டனைச் சிறைதான்

ஆங்...
செய்த தவறுதான்
  என்ன என்கிறீர்களா?
30, 35 வருடங்களுக்கு முன்
  ஆண் இரண்டும், பெண் ஒன்றுமாக
3 பிள்ளைகள் பெற்றேன் ஐயா.