Wednesday, June 21, 2017

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்பின் மதிப்பும் அதன் மீதான மோகமும் குறைந்தது ஏன்?

கடந்த இரண்டு மூன்று வருடங்களாகவே பொறியியல் படிப்பை புறந்தள்ளும் வாடிக்கை அதிகரித்துக்கொண்டே வருகிறது.  ஆண்டுதோறும் குறைந்து வரும் அல்லது கூடாமலே இருக்கும் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் சேர்க்கைக்கான கலந்தாய்வு விண்ணப்ப விற்பனையைப் பாரத்தாலே தெரியும்.  இந்தியாவில் மிக அதிகமாக பொறியாளர்களை உற்பத்தி செய்யும் மாநிலங்களில் தமிழகம் முக்கிய இடம் வகித்து வருகிறது.  இதிலிருந்தே தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கையை (500+) அறிந்துகொள்ளலாம்,  தமிழகம் முழுவதும் பரவியுள்ளா இந்த பொறியியல் கல்லூரிகளை ஒரே பல்கலைக்கழகத்தின் கீழே நிர்வாகம் செய்ய சிரமமாயிருக்கிறது என்று சென்னை அண்ணா பல்கலைக்கழகமானது கோவை, நெல்லை, திருச்சி அண்ணா பல்கலைக்கழகங்களாக பலவாறு பிரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்திற்குக் கீழேயே கொண்டு வரப்பட்டது தனிக்கதை.

சரி நாம் பேச வந்த விஷயத்திற்கு வருவோம்.  வணிகத்தில் அடிப்படை விஷயமாக ஒன்று சொல்வார்கள் எந்த ஒரு பொருளின் மதிப்பும் "தேவை மற்றும் கிடைத்தல்"க்கு  (Demand & Supply) இடையேயான இடைவெளியைப் பொறுத்தே பின்வறுமாறு அமையும்,

1. தேவை அதிகம் & கிடைத்தலும் அதிகம்  = சமநிலை நிலவும்
2. தேவை அதிகம் & கிடைத்தல் குறைவு   =  சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு கூடும்)
3. தேவை குறைவு & கிடைத்தல் அதிகம் = சமநிலை குலையும் (அதாவது பொருளின் மதிப்பு குறையும்)
4. தேவை குறைவு & கிடைத்தல் குறைவு = சமநிலை நிலவும்

இதுதான் பொறியியல் படிப்பிலும் நிகழ்ந்தது.  முதலில் தேவைக்கும் கிடைத்தலுக்குமான இடைவெளி மேலே சொல்லப்பட்டவாறு எண் 2-ல் ஆரம்பித்து கொஞ்சம் கொஞ்சமாக 1-க்கு நகர்ந்து இப்போது 3-ல் இருக்கிறது.  நம் எல்லோருக்கும் தெரிந்த மென்பொருள் துறையைச் சேர்ந்த யாராவது ஒருவர் பெங்களூருவிலோ, ஐதராபாத்திலோ இருப்பார். சென்னையில் எவ்வளவோ பன்னாட்டு, நம்நாட்டு நிறுவனங்கள் இருக்க அவர்கள் காடு கரையை விட்டு, சுற்றம் நட்பை விட்டு பெங்களூருக்கும், ஐதராபாத்திற்கும் ஏன் போக வேண்டும்? இதற்க்கு பல காரணங்கள் இருந்தாலும் தேவை & கிடைத்தலும் ஒரு காரணம்.  சென்னையின் மென்பொறியாளர் தேவை ஓரளவிற்க்கு நிவர்த்தியானதும் அவரின் மதிப்பு குறையும் அது அவரது சம்பளம் முதற்கொண்டு பல விஷயங்களைப் பாதிக்கும்.  அதன் காரணமாக தேவை (அதிகம்) இருக்கும் உள்ள இடத்தை நோக்கி அவர் தள்ளப்படுவார் அல்லது தகுதிக்குக் குறைவான வேலை அல்லது சம்பளத்திற்கு அவர் தள்ளப்படுவார்.  (ஒரு உதாரணத்திற்க்காக மென்பொறியாளர் என்பதை எடுத்துக்கொண்டேன் இது எல்லா துறைக்கும் பொருந்தும்.  மென்பொறியாளர்கள் மன்னிக்க..)

2ல் ஆரம்பித்த விஷயம் மெல்ல எல்லோர் மனதிலும் நிறைந்து பொறியியல் படித்தால் போதும் கைநிறைய சம்பாதிக்கலாம் காலத்திற்கும் சுகமாயிருக்கலாம் என்று நினைக்க வைத்தது.  அடுத்த பத்து வருடங்களுக்கு கூட்டங்கூட்டமாக திருப்பதி கோயில் மொட்டை போல எல்லோரும் அ(ப)டித்தோம். 

1-ஐ நோக்கி நகர்ந்தபோதும் பெரிய வித்தியாசம் இல்லை காடு கரை விற்று, கறவை மாட்டை விற்று, நில புலன்களை விற்று, வங்கிக் கடன் பெற்று என மீண்டும் தொடர்ந்தோம்.  மெல்ல NASSCOM போன்ற அமைப்புகள் தமிழகத்திலிருந்து வெளிவரும் மென்பொறியாளர்களில் கிட்டத்தட்ட 25% பேர் கூட மென்பொறியாளராக தேவையான தகுதிகளோடு இல்லை (குறிப்பாக மென் திறன்கள் - soft skills) என ஆரம்பித்தன.  அதில் பெரும் உண்மையும் இருக்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

3-ல் இருக்கும்போது திடீரென பார்த்தால் திருப்பதி மொட்டை போல தெருவெல்லாம் பொறியாளர்கள் சொல்லப்போனால் வீட்டிற்கு 2 பொறியாளர்கள்.  தகுதிக்கேற்ற வேலை கிடைக்கவில்லை  அல்லது வேலைக்கேற்ற தகுதியில்லை என்கிற நிலை.  எத்தைத் தின்றால் பித்தம் தீரும் என்று யோசித்து VAO ஆரம்பித்து வங்கி clerk தொடங்கி கலை அறிவியல், பள்ளி படிப்பு மட்டும் முடித்தோரே பெரும்பாலும் விண்ணப்பிக்கும் எல்லா பணிக்கும் வரும் விண்ணப்பங்களில் பேர் பாதி பொறியாளர்கள் என்கிற நிலை வந்துவிட்டது. 

கடந்த மூன்று வருடங்களில் ஒரு பாடப்பிரிவில் 10 பேர் கூட நிரம்பாத பல பொறியியல் கல்லூரிகள் இருந்தன.  மூடவா, விற்கவா பள்ளியாக திருமணமண்டமாக மாற்றவா என கல்வித் தந்தைகள் யோசிக்கும் நிலையும் வந்துவிட்டது.  

4-ஐ எட்டும் வரை அடுத்த சில வருடங்கள் இப்படியேத்தான் போகும் பிறகு 4ல் சொன்னது போல் சமநிலை நிலவும்.  மீண்டும் இந்த சுழற்சி தொடங்கும். 

தற்போது மேற்சொன்ன 4 வித முறைகள் தாண்டி 'கிடைத்தல் அதிகமாகி பொருளின் தரமும் குறைந்தால்' என்கிற புதியதோர் சூழலில்தான் சிக்குண்டுள்ளோம்.   இச்சூழல் 4-ஐ எட்டி 2-ற்குப் போகும் வரை பொறியியலின் மீதான மதிப்பும், மோகமும் குறைந்தேதான் அல்லது இப்படியேதான் இருக்கும்.


இதெல்லாம் பொது விதிகள்...  ஆனால் எப்போதுமே தகுதியானவற்றிற்றுக் தரமானவற்றிக்கு அதற்கான மதிப்பு இருந்துகொண்டேதான் இருக்கும்.  வணிக வெற்றிக்கு ஒன்று சொல்வார்கள் 'ஒன்றை முதலில்  செய்ய வேண்டும் அல்லது சிறப்பாகச்/தரமாகச் செய்ய வேண்டும்'.  ஒன்றை முதலிலோ அல்லது சிறப்பாகவோச் செய்ய வேண்டும் என்றால் அது மனதிற்குப் பிடித்ததாக இருக்கவேண்டும் அதாவது மனதிற்குப் பிடித்ததைச் செய்ய வேண்டும்.  என்ன சொல்ல வருகிறேன் என்றால் பொறியியல் தான் உங்கள் மிகு விருப்பம்(passion) என்றால் இப்போதும் கூட அதையே தேர்ந்தெடுங்கள் யார் பேச்சையும் கேட்க வேண்டாம்.  இது போன்றதொர் பொன்னான வாய்ப்பு கிடைப்பது அரிது ஆமாம் உண்மையாகத்தான் சொல்கிறேன்.  பலரும் வேண்டாம் என்று ஓதுக்கும்போது உங்கள் மதிப்பெண் குறைவாய் இருந்தாலும்  நீங்கள் விரும்பிய பாடப்பிரிவு நீங்கள் விரும்பிய கல்லூரியில் கிடைப்பதற்கான வாய்ப்பு மிக அதிகம்.  அதை விடாமல் பற்றிக்கொண்டு மேலேறுவது உங்கள் திறம்.  இவ்வளவு கல்லூரிகள் (சில/பல தரமற்ற) தோன்றியதும் அதனால் ஊரெல்லாம் பொறியாளர்களாய் மாறியதும் அவர் சொன்னார், இவர் சொன்னார் என்றும், பிள்ளைகளின் விருப்பத்தை அறியாமல் பெற்றோர் பொறியியலில் சேர்த்து விட்டதும் தான் காரணம்.  பிள்ளைகளின் விருப்பம் அறியுங்கள் அவர்களுக்குத் தேவையான தகவல்களை பெற்றுக்கொடுங்கள் ஆனால் மேற்படிப்பிற்கான முடிவை அவர்களை எடுக்க விடுங்கள் அவர்கள் முடிவெடுக்கத் தடுமாறினால் உதவுங்கள் ஆனால் திணிக்காதீர்கள், நல்லதோர் தலைமுறை நாளை அல்ல நாள்தோறும் உருவாகும்.

அடுத்தப் பதிவு -> பொறியியல் தவிர்த்து என்ன படிக்கலாம்?

Tuesday, April 25, 2017

கடவுச்சொல்லில் கவனம் தேவை, 7 சிறந்த கடவுச்சொல் நடைமுறைகள்

1.  உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளை உடையதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

2.  அகராதியில் இருக்கும் வார்த்தையாக இல்லாமல் இருக்கட்டும்

3.  'root', 'password', '12345', 'admin', 'user' போன்றவற்றை கண்டிப்பாகப் பயன்படுத்தாதீர்கள்.   இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களை முன் பின் தெரியாதவர் திருடாமல் இருப்பதற்காக.

4. 'உங்கள் பெயர்', 'பட்டப் பெயர்', 'பிறந்தநாள்', 'மனைவி அல்லது குழந்தைகள் பெயர்', 'ஊர் பெயர்', 'தொலைபேசி அல்லது செல்பேசி எண்', 'உங்களுக்கு பிடித்த பூ, பழம், விளையாட்டு, நடிகர், நடிகை, காதலன், காதலி, நண்பன் பெயர்' போன்றவற்றையும் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.  இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களைப் பற்றி நன்கு அறிந்த, தெரிந்த நண்பர்கள்/எதிரிகள் திருடாமல் இருக்க.

5. கடவுச்சொல் எப்போதும் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்ணுருக்கள்(Numbers), சிறப்பு எழுத்துருக்கள்(Special characters) ஆகியன கலந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

6. கடவுச்சோல் பொருளற்றதாக இருப்பது மிகவும் நல்லது. உதாரணத்திற்கு SY)p#2Ss4!, !Al*8$5whFt என்பன போன்று.

7. எழுத்துக்களை மாற்றிப் பயன்படுத்துங்கள் எடுத்துக்காட்டாக (S, $, 5 ), (0, o, O), (g, 9), (a, @) போன்றவை ஒன்று போல இருப்பதால் 's' என்கிற எழத்திற்குப் பதிலாக 5 என்கிற எண்ணைப் பயன்படுத்துவது.  (இதனால் நீங்களும் மறக்காமல் இருப்பீர்கள்)

உனக்கான என் முத்தங்கள

உனக்கான என் முத்தங்களும்
  எனக்கான உன் முத்தங்களும்
உனக்கு பிடிக்காமல் போன
  அந்த நொடி
நமக்கான நம் காதல்
  செய்வதறியா சிறுபிள்ளையாய்
ஒர் ஓரமாய் நின்று
  தேம்பிக்ககொண்டிருந்தது.

பசித்துப் பசி

பசிக்கு என்ன சாப்பிடலாம்
 பிரட் ஜாம் தண்ணீர்.. ம்ஹூம்
11 ருபாய் செலவாகும்
 பன்னும் டீயும்.. மஹூம்...
8 ருபாய் செலவாகும்
 பார்லே-ஜி, டைகர் பிஸ்கட்.. ம்ஹூம்
6 ருபாய் செலவாகும்
  வறுத்த கடலை, தண்ணீர்.. ம்.. ம்..
5 ரூபாய் செலவாகும் பரவாயில்லை...
 இரவு தண்ணீர் மட்டும் குடித்து சமாளிப்போம்.
புசித்ததை விடப் பசித்ததே அதிகம்
 ஏழையின் வயிறு....
அது பசிக்கோ, பசித்தோ புசிப்பதில்லை
 செலவைப் பார்த்தே புசிக்கிறது.

Tuesday, June 30, 2015

கவிதையும் காத தூரமும்...

  நானே கூட அவ்வப்போது பல வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எதையாவது கொஞ்சமாக சந்தம் சேர்த்து எழுதி கவிதை என்று கூறிக்கொள்வதுண்டு என்றாலும் இப்போதும் எனக்கு கவிதை என்றால் காத்தூரம் தான்(சங்கப்பாடல்கள், திருக்குறள், சமய இலக்கியங்கள்  (கவிதையில் சேர்ப்பார்களா?), பாரதி தவிர்த்து).  பெரும்பாலும் யாரிடமும் நான் கவிதை எழுதியிருக்கிறேன் படியுங்கள்/பாருங்கள் என்று சொல்வதில்லை குறிப்பாக நண்பர்களிடம், சொன்னால் விளைவு எப்படி இருக்கும் என்று ஓரளவிற்க்கு ஊகித்திருப்பதினால்.  ஆனாலும், நானே எழுதிய  (பெரும்பாலும் காதல் அவ்வப்போது சமூகக்கோபத்தில்) இந்த  கவிதை என்று நானே சொல்லிக்கொள்ளக்கூடிய விடயங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்து கட்டக்கடைசியாக நம்முடைய வலைப்பூ சும்மாதானே இருக்கிறது என்று அதில் பதிவேற்றிவிடுவேன் (அப்பாடா ஒரு பாரம் இறங்கியது). 

  இந்த இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் சென்றால் படிமம், பின்/முன்/நடு/centre/side நவீனத்துவம், கூறுகள், வெளிப்பாடுகள், திறப்புகள் என்று எதையாவது பேசி நம்மை பயமேற்றிவிடுவார்கள் இல்லையா.  அப்படி நம்மை கொஞ்சம் உசுப்பேற்றி, பயமேற்றி "டேய், கார்த்திகேயா அப்புடி என்னா தாண்டா எழுதியிருப்பானுங்க? படிச்சிதான் பாத்துடேன்" என்று ஒரு கட்டத்தில் முறுக்கேறி கவிதை படிக்கலாம் என்று திருவான்மியூர் நூலகத்தில் தேடியபோது கலாப்ரியா கவிதைகள் கிடைத்தது.  வண்ணதாசன்(கவிதை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் வண்ணதாசனில்(கல்யாண்ஜி) இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை படித்ததாக ஞாபகம், இதுவரை அவரைப் படிக்கவில்லை :( ), ஜெயமோகன் உள்ளிட்ட பல பெரும் ஆளுமைகள் முன்னுரை, பின்னுரை, மதிப்புரை எல்லாம் எழுதியிருந்ததால் எடுத்துவிட்டேன்.   சுமாராக 2 renewal-ம்  சில நாட்களும் ஆயின படித்து முடிக்க (நாவல்களே கூட வருடக்கணக்கில் படித்திருக்கிறேன்/படித்துக்கொண்டிருக்கிறேன் :p).  படித்து முடித்தப்பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை, கவிதைகளைக் கூட கடந்து வந்துவிட்டேன்.  கடைசியாக ஜெயமோகன் அவர்கள் ஒரு 70+ பக்கத்திற்கு எழுதியிருந்த விஷயங்களைத்தான் கடைசிவரை முழுமையாக படிக்க/புரிந்து கொள்ள முடியவில்லை(ஜெயமோகன் ஐயாவுக்குத் தெரிந்தால் ஒரு முழுக் கட்டுரை எழுதி என்னை (அ) என்னைப்போன்றோரை திட்டவும் கூடும். என்ன செய்ய? நம் குருவி மூளைக்கு அவ்வளவுதான் போல... ).  ஜெயமோகன் எனக்குப் பிடித்த, என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்; அவரின் காடு, ஏழாம் உலகம், உலோகம் போன்றவற்றை எல்லாம் ஒரு தவம் போல படித்திருக்கிறேன் (இன்னும் விஷ்ணுபுரம் படிக்கவில்லை).  ஏழாம் உலகம் எல்லாம் படித்து அழுதிருக்கிறேன்.  ஆனாலும் கலாப்ரியா கவிதைகள் புத்தகத்தில் அவர் எழுதியிருந்ததை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை. 

  கொஞ்சமாக கவிதையை புரிந்து/பிடித்து படித்ததென்றால் அது கவிக்கோ அப்துல் ரகுமானின் பால்வீதி, மு. மேத்தாவின் கவிதைகள், தபூ சங்கரின் கவிதைகள் (இலக்கிய பெரியவர்கள் தபூ சங்கரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்) மற்ற சில மட்டும்தான்.  அதைத் தவிர்த்து பயத்துடனேயே அணுகி பாதியில் விட்டவைதான் அதிகம்.  ஆனாலும், இப்பொழுது விட்டு விடுவதாக இல்லை "கலாப்ரியா கவிதைகள்" நூலகத்தில் திருப்பி கொடுத்தாகிவிட்டது இப்போது "ஜெயகாந்தன் கவிதைகள்" எடுத்துவந்துள்ளேன்.   பார்ப்போம் எவ்வளவு தூரம் போகிறேன் என்று... :)