Saturday, January 12, 2013

டிவிட்டரின் தரமுயர்த்தப்பட்ட புகைப்பட பகிரல்..



  கடந்த மாதம் டிவிட்டர் தனது கைப்பேசி செயலியில்(Mobile App) உள்ள புகைப்பட பகிரும் பாகத்தை தரமுயர்த்தியுள்ளது.  முன்பு ஒரு புகைப்படத்தை உள்ளது உள்ளபடி மட்டுமே பகிரமுடியும் என்றிருந்த(வேறு செயலிகளின் மூலம் புகைப்படத்தை மேம்படுத்தி பின்பு பகிர்வதல்ல) நிலை இப்போது மாறியுள்ளது.  ஆம், தற்போது நீங்கள் ஒரு புகைப்படத்தை பகிர்வதற்கு முன் அதில் இன்ஸ்டாகிராம் போன்று பல்வேறு விளைவுகளை(effects) அதில் செய்யலாம்.  மொத்தமாக 8(+1 எந்த விளைவுகளும் இல்லாமல் உள்ளது உள்ளபடி) வெவ்வேறு தாக்கங்கள்/விளைவுகள்(Effects) தரப்பட்டுள்ளன.  அவை முறையே
1. Vignette
2. Black & White
3. Warm
4. Cool
5. Vintage
6. Cinematic
7. Happy
8. Gritty

 இத்தோடு, படத்தின் பிரகாசத்தை(brightness) அதிகப்படுத்தல் மற்றும் தேவையானதை மட்டும் தனியாக வெட்டி எடுத்தல்(Crop) ஆகிய இரண்டு வசதிகளும் கூட சேர்க்கப்பட்டுள்ளது.  இதையெல்லாம் செயல்படுத்த உங்கள் Smart Phone-ல் உள்ள டிவிட்டர் செயலி அதன் இன்றைய மேம்பாட்டுடன் ஒத்து புதுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆகவே இனி டிவிட்டரில் புகைப்படம் பகிர்தல் முன் எப்போதும் போல சாதரணமாக இருக்கப்போவதில்லை... தரமுயர்த்தப்பட்டதாக இருக்கும்.

Monday, August 6, 2012

ஆன்ட்ராய்டு(Android) போன்ற ஸ்மார்ட்ஃபோன்களில் தமிழ்(அல்லது எந்த பிராந்திய மொழி) வலைத்தளங்களை, வலைபூக்களை(blogspots) காண்பது எப்படி?



1. Google market/play வில் இருந்து ஓபரா மினி(Opera mini) மொபைல் உலாவியை நிறுவுக.
2. இப்போது உங்கள் மொபைலில் உள்ள ஓபரா மினி உலாவியை தொடங்குக
3. ஓபரா மினி உலாவியின் முகவரி பட்டியில்(Address bar) "opera:config" [மேற்கோள் இல்லாமல்] என டைப் செய்து enter தட்டவும்
4. இப்போது வரும் பக்கத்தின் அடிவரை scroll செய்தால் "use bitmap font for complex scripts" என்று ஒரு தெரிவு(option) வரும். முடக்கப்படிருக்கும்(No) அந்த தெரிவை செயல்படுத்தவும்(Yes).

அவ்வளவுதான்​​... :) இனி நீங்கள் எந்த தமிழ் இணையதளத்தைப் படிக்க வேண்டுமோ அதை திறந்து பாருங்கள் எழுத்துருக்கள் தெளிவாக இருக்கும்.

குறிப்பு:
1. நினைவிருக்கட்டும் இந்த முறையில் நீங்கள் தமிழ்(அல்லது வேறு எந்த மொழி) வலைபக்கங்களை பார்க்க/படிக்க மட்டுமே முடியும், எழுத முடியாது. ஆனால் இதற்க்காக நீங்கள் எந்த எழுத்துருக்களையும் உங்கள் மொபைல்போனில் நிறுவ தேவை இல்லை.
2. உண்மையில் இந்த முறையில் உலாவி ஒரு முழு வலைப்பக்கத்தையும் ஒரு bitmap பிம்பமாகவே காட்டுகிறது. எனவே, இந்த முறையில் (தமிழ்)மொழி ஒரு பொருட்டள்ள அனைத்து மொழி வலைப்பக்கங்களுமே சரியாக வரும்.

Tuesday, July 24, 2012

உலாவியில் பயன்படும் சில பயனுள்ள குறுக்கு விசைகள்(shrot cuts)



  கணினியில் வேலை செய்பவர்களுக்கு விசைப்பலகைக்கும், சுட்டெலிக்கும் இடையே பரிவர்த்தனை செய்தே பல மணிநேரங்கள் வீணாகிறது.  அந்த வீணாகும் நேரத்தை குறைத்தால் உங்களின் productivity எனப்படும் உற்பத்திதிறன்(நான் browsing செய்வதில் என்னத்த உற்பத்திதிறன் இருக்குன்றீங்களா?) அதிகரிக்கும்.  அதற்குதான் கணிணியில் பயன்படுத்தப்படும் எல்லா செயலிகளுமே(Applications) குறுக்குவிசைகளுடன்(shortcuts) வருகிறது.  இந்த பதிகையில் நாம் உலாவியில் பயன்படுத்தப்படும் குறுக்குவிசைகளை பற்றி பார்ப்போம்.

  இணையதளத்தில் இன்று Browser எனப்படும் பல உலாவிகள் பயன்படுத்தப்படுகின்றன, ஒவ்வொருவரும் தனக்குப்பிடித்தமான ஒரு உலாவியைப் பயன்படுத்துகிறார்.  பலவிதமான உலாவிகள் இருந்தாலும் சில உலாவிகள் மட்டுமே பரவலாக பயன்படுத்தப்படுகின்றன உதாரணமாக ஃபயர்பாக்ஸ், கூகிளின் குரோம், குரோமியம், இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஒபேரா, சபாரி ஆகிய உலாவிகளை சொல்லலாம்.  இது தவிர எபிக்(இது பெங்களூரில் உள்ள ஒரு இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்டுள்ளது) போன்ற பல சிறிய அதிகம் பிரபலமாகாத உலாவிகளும் உள்ளன.  பல விதமான உலாவிகள் இருந்தாலும் பெரும்பாலான குறுக்குவிசைகள் எல்லாவற்றிலும் பொதுவாகவே இருக்கிறது.  நல்ல வேளையாக ஆப்பிளோ, மைக்ரோ சாஃப்டோ, சாம்சங்கோ குறுக்குவிசைக்கு பேடண்ட்(patent) எனப்படும் உரிமத்தை வாங்கிவைக்கவில்லை ;-).  உங்களுக்கு ஆப்பிளுக்கும், மைக்ரோசாஃப்ட்டுக்கும் இடையே வழக்கான trash, recyclebin பிரச்சனை தெரியும்தானே?.  சரி அந்த கதைய முடிஞ்சா இன்னொரு இடுகைல பாத்துக்கலாம், இப்ப shortcut-க்கு வருவோம்.  கீழ்காணும் குறுக்குவிசைகளில் ஒன்றிரண்டைத்தவிர மற்ற எல்லாமும் எல்லா உலாவிகளிலும் இயங்கும்.

1.  Address bar எனப்படும் முகவரிப் பெட்டிக்குச் செல்ல Ctrl + l (அ) Alt + d

2.  புதிய பக்கத்தை(tab-ஐத்)  திறக்க Ctrl + t

3.  புதிய சாளரத்தை (window-ஐத்) திறக்க Ctrl + n

4.  தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தை tab-ஐ மூட/நீக்க Ctrl + w

5.  கடைசியாக மூடிய(மறதியிலோ [அ] தெரிந்தோ :)) tab-ஐத் மீண்டும் திறக்க Ctrl + shift + t

6.  தற்போது பார்த்துக்கொண்டிருக்கும்/பயன்படுத்திக்கொண்டிருக்கும் பக்கத்தில் ஒரு வார்த்தையோ (அ) வாக்கியத்தையோ தேட Ctrl + f. பிறகு தேடவேண்டியதை உள்ளிட்டு enter-ஐத் தட்டவும்.

7. history எனப்படும் முன்னதாக(நேற்றோ, போன வாரமோ, போன மாதமோ) பார்த்த பக்கங்களை அறிந்துகொள்ள Ctrl + h

8.  நீங்கள் browsing செய்தபோது சேகரிக்கப்பட்ட எல்லா தகவல்களையும் அழிக்க Ctrl + shift + delete

9.  உங்கள் உலாவியில் திறந்திருக்கும் tabகளில் முதலாவதிற்கு செல்ல Ctrl + 1, 2-வதிற்கு செல்ல Ctrl + 2, ... கடைசி tab-க்கு செல்ல Ctrl + 9.  (இது  குரோம், குரோமியம் தவிர்த்த ஒரு சில உலாவிகளில் வேலைசெய்யாது).

10.  பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு அடுத்த tab-க்கு செல்ல Ctrl + tab key அ Ctrl + page down button.

11.  பார்த்துக்கொண்டிருக்கும் tab-க்கு முந்தைய tab-க்கு செல்ல Ctrl + shift + tab key அ Ctrl + page up button.

12.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in செய்ய, பெரிதாக்க Ctrl + + (அ) Ctrl + mouse scroll up

13.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom out செய்ய, சிரிதாக்க Ctrl + - (அ) Ctrl + mouse scroll down

14.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை zoom in/out பெரதோ/சிறிதோ செய்தபின், மீண்டும் சரியான அளவுக்கு கொண்டுவர Ctrl + 0

15.  பார்த்துக்கொண்டிருக்கும் பக்கத்தை அச்சிட Ctrl + p

16.  உலாவியை மூட(close) Alt + f4 <--function key

முதலில் குறுக்குவிசைகளை பயன்படுத்துவது சிரமமாக இருக்கும்.  பிறகு சில நாளில் பழக்கத்தில் வந்துவிடும்.  மவுசு(அட கம்ப்யூட்டர்ல இருக்குற mouseங்க) இல்லாமல் இயக்கிட வாழ்த்துகள் ;)

குறிப்பு:
இந்த குறுக்குவிசைகளை தவிர்த்து உங்களுக்கு வேறு எதேனும் புதியதாக தெரியுமென்றால் அதை மறக்காமல் பின்னூட்டத்தில் தெரிவிக்கவும்(அம்மா சொல்லித்தந்த்தில்லையா ஷேரிங்...).  எனக்கும் இந்த பதிவை படிக்கும் மற்றவர்களுக்கும் உதவியாக இருக்கும்.

Monday, July 23, 2012

படித்த புத்தகம் - ஜெயமோகனின் உலோகம் நாவல்


புத்தக தலைப்பு :  உலோகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
பதிப்பு : கிழக்கு பதிப்பகம்
வகை : சாகச எழுத்து(த்ரில்லர்)


 ஈழத்து இயக்கத்தைச் சேர்ந்த ஒருவன் இலங்கையிலிருந்து கள்ளத்தோணி மூலம் தமிழகம் வருகிறான்.  அவன் இயக்கத்தின் சில பல உத்தரவுகளை நிறைவற்றிவட்டு (கொலைகள்தான்) டில்லிக்கு செல்கிறான்.  இயக்கத்தின் முக்கியப்புள்ளியான ஒருவர் இந்தியா வந்து, இந்திய உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கிறார், இயக்கத்தின் துரோகியாக கருதப்படும் அவரை கொல்வதுதான் அவனுக்கு இடப்பட்ட பணி.  அதை அவன் எப்படி செய்கிறான், செய்வதற்க்குள்ளான காலத்தில் அவன் வாழ்க்கையில் என்னென்ன நடக்கிறது, என்ன சிக்கல்கள், பிரச்சனைகளை சந்திக்கிறான் என்பதை அவனுடைய பார்வையிலே சொல்லுவதுதான் இந்த நாவல்.   ஒரு கொலைகாரன் எப்படி செயல்படுவான், அவனுடைய எச்சரிக்கைத்தன்மை விழிப்புணர்வு, நிகழ்வுகளை சம்பந்தப்படுத்தி ஊகிப்பது, பொறுமை, காத்திருப்பு போன்று பல விஷயங்களை கண்முன்னால் விரிக்கிறது இந்த நாவல்.

 கதை முழுவதுமே ஒரு flash back உத்தியில்  விவரிக்கப்பட்டுள்ளது.  கதையின் கரு கொலையும், துரோகமும் மட்டுமே, வரும் உத்தரவுக்கு அப்படியே அடிபணியம் ஒரு இயக்கப்போராளியின் சுயசரிதை எனக்கூட இந்நாவலை சொல்லலாம்.  கதையினூடே ஆங்காங்கே ஜெயமோகனின் முத்திரையான பல வாக்கியங்களைப் பார்க்கலாம்.  ஜெயமோகனின் காடு, ஏழாம் உலகம் ஆகிய நாவல்களில் வருவதுபோலொவே இதிலும் காமம் பற்றிய கருத்துகளும், நிகழ்வுகளும் உண்டு.  போர் பற்றி அறியாத, குண்டுவீச்சு பயம் பார்த்திராத, உயிர்பயம் கண்டறியாத சினிமா மட்டுமே வாழக்கை என வாழ்பவர்களை ஆங்காங்கே பகடி செய்திருக்கிறார்.

 நாம் பத்திரிக்கையில் படிக்கும் பல கொலைகளும் இப்படி நடந்து, வேறு சப்பைக்கட்டு கட்டப்பட்டிருக்கும என்பதற்க்கு கூட சாத்தியங்கள் அதிகமே.  இயக்கங்கள் செயல்படும் விதம், இந்திய உளவுத்துறை அமைப்பான ரா -raw- என பல விஷயங்கள் கதையின் போக்கில் வந்து போகிறது.  ஒரு நாவலை எழுதும்போது அந்தந்த கதாபாத்திரங்களுக்கென ஒரு ஒப்பற்ற தனித்தன்மையை(uniqueness) தந்து, அந்தந்த பதாபாத்திரமாகவே யோசித்து எழுதும் ஜெயமோகனின் அந்த "டச்" இந்த நாவலிலும் காடு, ஏழாம் உலகம் நாவலில் இருப்பதுபோலவே உண்டு. நாவலின் பல கதாபாத்திரங்கள் இலங்கைத்தமிழர்கள் என்பதால் ஆங்காங்கே இலங்கைத்தமிழ் பயன்படுத்தப்பட்டுள்ளதை முதலிலேயே குறிப்பிட்டுளார்.

 நான் படித்த ஜெயமோகனின் பிற நாவல்களான காடு, ஏழாம் உலகம் ஆகியவற்றுடன் ஒப்பிட்டளவில் உலோகம் சற்று குறைவே(பக்க எண்ணிக்கை, தரம் 2-ம்).  ஆனால், உலோகம் எழுதப்பட்டுள்ள தளம் வேறு.