Tuesday, April 25, 2017

கடவுச்சொல்லில் கவனம் தேவை, 7 சிறந்த கடவுச்சொல் நடைமுறைகள்

1.  உங்கள் கடவுச்சொல் குறைந்தது 8 எழுத்துகளை உடையதாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

2.  அகராதியில் இருக்கும் வார்த்தையாக இல்லாமல் இருக்கட்டும்

3.  'root', 'password', '12345', 'admin', 'user' போன்றவற்றை கண்டிப்பாகப் பயன்படுத்தாதீர்கள்.   இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களை முன் பின் தெரியாதவர் திருடாமல் இருப்பதற்காக.

4. 'உங்கள் பெயர்', 'பட்டப் பெயர்', 'பிறந்தநாள்', 'மனைவி அல்லது குழந்தைகள் பெயர்', 'ஊர் பெயர்', 'தொலைபேசி அல்லது செல்பேசி எண்', 'உங்களுக்கு பிடித்த பூ, பழம், விளையாட்டு, நடிகர், நடிகை, காதலன், காதலி, நண்பன் பெயர்' போன்றவற்றையும் கண்டிப்பாக தவிர்த்துவிடுங்கள்.  இது உங்களை, உங்கள் அடையாளத்தை உங்களைப் பற்றி நன்கு அறிந்த, தெரிந்த நண்பர்கள்/எதிரிகள் திருடாமல் இருக்க.

5. கடவுச்சொல் எப்போதும் பெரிய எழுத்து, சிறிய எழுத்து, எண்ணுருக்கள்(Numbers), சிறப்பு எழுத்துருக்கள்(Special characters) ஆகியன கலந்து இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

6. கடவுச்சோல் பொருளற்றதாக இருப்பது மிகவும் நல்லது. உதாரணத்திற்கு SY)p#2Ss4!, !Al*8$5whFt என்பன போன்று.

7. எழுத்துக்களை மாற்றிப் பயன்படுத்துங்கள் எடுத்துக்காட்டாக (S, $, 5 ), (0, o, O), (g, 9), (a, @) போன்றவை ஒன்று போல இருப்பதால் 's' என்கிற எழத்திற்குப் பதிலாக 5 என்கிற எண்ணைப் பயன்படுத்துவது.  (இதனால் நீங்களும் மறக்காமல் இருப்பீர்கள்)

உனக்கான என் முத்தங்கள

உனக்கான என் முத்தங்களும்
  எனக்கான உன் முத்தங்களும்
உனக்கு பிடிக்காமல் போன
  அந்த நொடி
நமக்கான நம் காதல்
  செய்வதறியா சிறுபிள்ளையாய்
ஒர் ஓரமாய் நின்று
  தேம்பிக்ககொண்டிருந்தது.

பசித்துப் பசி

பசிக்கு என்ன சாப்பிடலாம்
 பிரட் ஜாம் தண்ணீர்.. ம்ஹூம்
11 ருபாய் செலவாகும்
 பன்னும் டீயும்.. மஹூம்...
8 ருபாய் செலவாகும்
 பார்லே-ஜி, டைகர் பிஸ்கட்.. ம்ஹூம்
6 ருபாய் செலவாகும்
  வறுத்த கடலை, தண்ணீர்.. ம்.. ம்..
5 ரூபாய் செலவாகும் பரவாயில்லை...
 இரவு தண்ணீர் மட்டும் குடித்து சமாளிப்போம்.
புசித்ததை விடப் பசித்ததே அதிகம்
 ஏழையின் வயிறு....
அது பசிக்கோ, பசித்தோ புசிப்பதில்லை
 செலவைப் பார்த்தே புசிக்கிறது.

Tuesday, June 30, 2015

கவிதையும் காத தூரமும்...

  நானே கூட அவ்வப்போது பல வரிகளை மடக்கி மடக்கிப் போட்டு எதையாவது கொஞ்சமாக சந்தம் சேர்த்து எழுதி கவிதை என்று கூறிக்கொள்வதுண்டு என்றாலும் இப்போதும் எனக்கு கவிதை என்றால் காத்தூரம் தான்(சங்கப்பாடல்கள், திருக்குறள், சமய இலக்கியங்கள்  (கவிதையில் சேர்ப்பார்களா?), பாரதி தவிர்த்து).  பெரும்பாலும் யாரிடமும் நான் கவிதை எழுதியிருக்கிறேன் படியுங்கள்/பாருங்கள் என்று சொல்வதில்லை குறிப்பாக நண்பர்களிடம், சொன்னால் விளைவு எப்படி இருக்கும் என்று ஓரளவிற்க்கு ஊகித்திருப்பதினால்.  ஆனாலும், நானே எழுதிய  (பெரும்பாலும் காதல் அவ்வப்போது சமூகக்கோபத்தில்) இந்த  கவிதை என்று நானே சொல்லிக்கொள்ளக்கூடிய விடயங்களை என்ன செய்வதென்று தெரியாமல் திணறிக்கொண்டிருந்து கட்டக்கடைசியாக நம்முடைய வலைப்பூ சும்மாதானே இருக்கிறது என்று அதில் பதிவேற்றிவிடுவேன் (அப்பாடா ஒரு பாரம் இறங்கியது). 

  இந்த இலக்கிய கூட்டங்களுக்கெல்லாம் சென்றால் படிமம், பின்/முன்/நடு/centre/side நவீனத்துவம், கூறுகள், வெளிப்பாடுகள், திறப்புகள் என்று எதையாவது பேசி நம்மை பயமேற்றிவிடுவார்கள் இல்லையா.  அப்படி நம்மை கொஞ்சம் உசுப்பேற்றி, பயமேற்றி "டேய், கார்த்திகேயா அப்புடி என்னா தாண்டா எழுதியிருப்பானுங்க? படிச்சிதான் பாத்துடேன்" என்று ஒரு கட்டத்தில் முறுக்கேறி கவிதை படிக்கலாம் என்று திருவான்மியூர் நூலகத்தில் தேடியபோது கலாப்ரியா கவிதைகள் கிடைத்தது.  வண்ணதாசன்(கவிதை வாசிக்க ஆரம்பிப்பவர்கள் வண்ணதாசனில்(கல்யாண்ஜி) இருந்து ஆரம்பிக்க வேண்டும் என்று எங்கோ யாரோ எழுதியிருந்ததை படித்ததாக ஞாபகம், இதுவரை அவரைப் படிக்கவில்லை :( ), ஜெயமோகன் உள்ளிட்ட பல பெரும் ஆளுமைகள் முன்னுரை, பின்னுரை, மதிப்புரை எல்லாம் எழுதியிருந்ததால் எடுத்துவிட்டேன்.   சுமாராக 2 renewal-ம்  சில நாட்களும் ஆயின படித்து முடிக்க (நாவல்களே கூட வருடக்கணக்கில் படித்திருக்கிறேன்/படித்துக்கொண்டிருக்கிறேன் :p).  படித்து முடித்தப்பின் யோசித்துப் பார்த்தால் எனக்கு ஒன்றும் நினைவில் இல்லை, கவிதைகளைக் கூட கடந்து வந்துவிட்டேன்.  கடைசியாக ஜெயமோகன் அவர்கள் ஒரு 70+ பக்கத்திற்கு எழுதியிருந்த விஷயங்களைத்தான் கடைசிவரை முழுமையாக படிக்க/புரிந்து கொள்ள முடியவில்லை(ஜெயமோகன் ஐயாவுக்குத் தெரிந்தால் ஒரு முழுக் கட்டுரை எழுதி என்னை (அ) என்னைப்போன்றோரை திட்டவும் கூடும். என்ன செய்ய? நம் குருவி மூளைக்கு அவ்வளவுதான் போல... ).  ஜெயமோகன் எனக்குப் பிடித்த, என்னை மிகவும் பாதித்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர்; அவரின் காடு, ஏழாம் உலகம், உலோகம் போன்றவற்றை எல்லாம் ஒரு தவம் போல படித்திருக்கிறேன் (இன்னும் விஷ்ணுபுரம் படிக்கவில்லை).  ஏழாம் உலகம் எல்லாம் படித்து அழுதிருக்கிறேன்.  ஆனாலும் கலாப்ரியா கவிதைகள் புத்தகத்தில் அவர் எழுதியிருந்ததை என்னால் முழுமையாக படிக்க முடியவில்லை. 

  கொஞ்சமாக கவிதையை புரிந்து/பிடித்து படித்ததென்றால் அது கவிக்கோ அப்துல் ரகுமானின் பால்வீதி, மு. மேத்தாவின் கவிதைகள், தபூ சங்கரின் கவிதைகள் (இலக்கிய பெரியவர்கள் தபூ சங்கரை ஏற்றுக்கொள்ள மறுப்பார்கள் என்றே நினைக்கிறேன்) மற்ற சில மட்டும்தான்.  அதைத் தவிர்த்து பயத்துடனேயே அணுகி பாதியில் விட்டவைதான் அதிகம்.  ஆனாலும், இப்பொழுது விட்டு விடுவதாக இல்லை "கலாப்ரியா கவிதைகள்" நூலகத்தில் திருப்பி கொடுத்தாகிவிட்டது இப்போது "ஜெயகாந்தன் கவிதைகள்" எடுத்துவந்துள்ளேன்.   பார்ப்போம் எவ்வளவு தூரம் போகிறேன் என்று... :)

Thursday, January 29, 2015

பேசா மொழி...


அவளும் மென்பொறியியல் தான்
  அலுவலகம் கூட என் அலுவலகத்தின் எதிரில்தான்
அவள் அழகுக்கும் குறைவில்லைதான்
  அனுதினமும் மின்தூக்கியில் அருகேதான்
ஆண்டுகளாய் இதே நிலைதான்
   ஆனாலும்,  " நீ அழகாய் இருக்கிறாய் " என்று
சொல்லவில்லை தான்(நான்)
         ...
அடுத்த மொழி
        ...
வார இறுதியில் எல்லாம் ஊருக்குச் செல்வேன்
  வாரம் தவறாமல் குருவாயூர் இரயிலில் திரும்புவேன்
வாராவாரம் அவளும் வருவாள்
  இருவருக்குமே ஒதுக்கீடில்லா பயணச்சீட்டுதான்
இடம் கிடைத்ததும் அமர்ந்துவிடுவாள்
  ஆங்கில நாவல் உண்டு அவளுக்கு
அழகுதமிழ் நூலகப் புத்தகம் உண்டு எனக்கு
  அமைதியோடு அழகு கொஞ்சும் முகம் அவளுக்கு
அவளோடு பேசிட துடிக்கும் அகம் எனக்கு
  நாட்கள் ஆண்டுகளாய் ஆயின நித்தம்
எனக்குள் பேசா மொழிகள் தான் மிச்சம்

என் பேசா மொழிகளை எல்லாம்
  சேர்த்துக்கொண்டே வருகிறேன்
கோடைகால எறும்பு போல
   வசந்தகால தேனீ போல
பேசித் தீர்க்கும் நாளுக்காகவும், ஆளுக்காகவும் ;)

( பேசித்தீர்க்க ஆள் கிடைச்சாச்சு...... :) :D   பேசிக்கொண்டிருக்கிறேன்,  என்றும் தீராமல் பேசிக்கொண்டேயிருக்க வேண்டும் என்ற  பேராவலுடன்.... )