Monday, July 22, 2013

பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா..?


  பாரதம் பாடுதல் கேள்விப்பட்டிருக்கீங்களா... கிராமத்துல(சில நகரங்கள்ளயும்) ஆடிமாசம் ஆயிட்டா எல்லா கோயில்கள்ளயும் (குறிப்பா திரௌபதி அம்மன் கோயில்கள்ல) ராத்திரி மக்கள் எல்லாரும் பாய்,தலைகாணி, தண்ணி குடம், சொம்பு, நொறுக்குத்தீனி எல்லாம் எடுத்துக்குட்டுப்போய் உக்காந்துப்பாங்க.  பாரதம் பாடறவங்க மகாபாரதக் கதைய பாட்டா ராகத்தோட ஆங்.. ஆமா.. அப்புடிலாம் சவுண்டு எபெக்ட்டோட விடிய விடிய பாடுவாங்க.  அப்பலாம் டிவி ஊர்லயே ஒருத்தர் 2 பேர் வீட்லதான் இருக்கும், மக்களுக்கு என்டர்டெயின்மென்ட்னா முக்கியமா இந்த பாரதம் கேக்கறதுதான்.  ஊரே திரண்டு போயிடும், ஒரு 10, 11 மணிக்கெல்லாம் பொடிசுக எல்லாம் தூக்கத்துல சாமியாட ஆரம்பிச்சிடும், இளவட்டங்க தனியா ஒரு டிராக் போட்டு வண்டி ஓட்டிகிட்டு இருக்கும்.  பெரிசுங்க எல்லாம் கதைய காதுல கேட்டு அனிமேஷன் வீடியோவ மனசுல ஓடவிட்டு தருமரு, பீமன், துரியோதன், திரௌபதினு காட்சியா பாத்துகிட்டு இருக்கும்.

 எனக்கு ஏழாவது, எட்டாவது சி. நடராஜன்-னு (C.N வாத்தியார், இந்தப் பேரு அப்பிடியே மாறி சீனு வாத்தியார், சீனி வாத்தியார் அப்டினுலாம் மாறிடுச்சி) ஒரு ஆசிரியர் வகுப்பெடுத்தார், அவர் வகுப்புன்னாலே ஒரு கொலைநடுக்கத்தோட தான் நாங்க வகுப்புக்குப் போவோம், கோவப்பட்டாருனா அடி பின்னி எடுத்துடுவாரு.  ஆனா, அவர் வகுப்புகள்ள அவ்வளவு கத்துக்கலாம் பாடம் தாண்டி நிறைய சொல்லுவாரு.. அது திருப்பாவை, திருவெம்பாவை, திருக்குறளாவும் இருக்கும் வாய்ப்பாடு, பொதுஅறிவு, கணக்குப் புதிராவும் இருக்கும், விளையாட்டு, விஞ்ஞானம், நகைச்சுவையாவும் இருக்கும்.

  அவரு ஒரு தடவை பாரதம் பாடுறதப்பத்தி நகைச்சுவையா சொன்ன விஷயம்.
பாரதம் பாடும்போது விடிஞ்சுடிச்சினா உடனே என்ன சொல்லிக்கிட்டிருந்தாலும்/பாடிகிட்டிருந்தாலும் அப்படியே அந்த இடத்துல விட்டுட்டு மறுபடி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிப்பாங்களாம்.  அப்படி ஒரு முறை பாரதம் படிக்கும்போது "பீமன் மரத்தைப் பிடுங்கினானே" அப்டினு சொல்லவேண்டிய வசனம் வந்துச்சு.  "பீமன் மரத்தைப் பி" அப்டினும்போது விடிஞ்சிடுச்சாம், உடனே பாரதம் பாடுறத நிப்பாட்டிட்டாங்க.. மறுபடி அன்னைக்கு ராத்திரி ஆரம்பிக்கும்போது விட்ட இடத்திலிருந்து ஆரம்பிக்கனுமில்லையா... அதனால எப்புடி ஆரம்பிச்சாங்க தெரியுமா..?

 "டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.. டுங்கினானே.." அப்புடினு ஆரம்பிச்சாங்களாம்.. இதை கேட்டதுதான் தாமதம் கிளாஸுல சேக்காளிப் பயளுக எல்லாம் அப்புடி சிரிக்கிறானுவ..

  இதெல்லாம் இப்ப எதுக்கு சொல்றேனு கேக்கறிங்களா?  ஓண்ணுமில்லிங்க இந்த வாரம் ஊருக்குப் போயிருந்தேன், பாரதம் படிக்கிற சத்தம் கேட்டதும் சரி சும்மா ஒரு விசிட் விட்டுட்டு வரலாமேனு போனேன்.  சத்தியமா மனசு கனமாயிடுச்சிங்க... பாரதம் படிக்கிற நாலுபேர தவிர வேற யாருமே இல்லிங்க.. ராத்திரி சாமி ஊர்வலம் இருந்ததால நாயனக்கார கோஷ்டி மட்டும் ஒரு ஓரமா உற்சவர் பல்லக்குப் பக்கத்துல ஓக்காந்திருந்ததுங்க.  இப்ப புள்ளைங்களுக்கு ஆங்கிரி பேர்ட்ஸ் தெரியுது, அனிமேஷன் நாடகம் தெரியுது ஆனா மகாபாரதம் தெரியல.. அப்பா அம்மாவும் அததான் பெருமையா நினைக்கிறாங்க.  "மெல்லத் தமிழ் இனி சாகும்"னு சொன்னாங்க, தமிழ் சாகுறதுக்கு முன்னாடியே இந்த கலையெல்லாம் அழிஞ்சிபோயிடுமோனு பயமாயிருக்கு.  இந்த நெலம பாரதம் படிக்கிறவங்களுக்கு மட்டுமில்ல தோல்பாவைக் கூத்து, பொம்மலாட்டம், பொய்க்கால் குதுர, கரகாட்டம், வில்லுப்பாட்டுனு லிஸ்ட் முடியல நீண்டுகிட்டே இருக்கு.  இந்த கலையெல்லாம் இப்ப வரைக்கும் செஞ்சிகிட்டு இருக்கவங்க வாரிசுகளும் இப்ப இந்த கலைல இல்ல (ஆதரவு இல்லாததுதான் காரணம்) இந்த கலைகளோட அழிவுக்கு ஒருவகைல நாமளும் காரணம் அப்டின்றது மறுக்க மறைக்க முடியாத கசப்பான உண்மை.  அதான் உங்ககிட்டலாம் பகிர்ந்துக்கலாம்னு தோணிச்சு, பகிர்ந்துகிட்டேன்.



No comments:

Post a Comment