![]() |
விக்கிப்பீடியாவில் எஸ். ராமகிருஷ்ணன் (நன்றி; புகைப்படம் விக்கிப்பீடியாவிலிருந்து) |
தான் படித்த உலகின் முக்கிய எழுத்தாளுமைகளையும், அவர்களின் எழுத்துகளையும் மற்றவர்களும் படித்தின்புற வேண்டுமென்ற நோக்கத்தோடு அவர் எழுதி உயிர்மை இதழில் தொடராக வெளிவந்த எழுத்தாளுமைகளின் அறிமுகமே இப்புத்தகம். 190 பக்கத்தில் 28 எழுத்தாளர்களையும், அவர்களின் ஆளுமையையும், சிறந்த எழுத்துப் படைப்புகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறார். சுருக்கமான ஆனால் முழுமையான அறிமுகம், எழுத்தாளர்களின் வாழ்க்கையும், அவர்கள் எழுத்தில் புகுத்திய புதுமைகளையும், மாற்றங்கள், அவர்களின் தனித்தன்மை, புதிய நடை என பலவற்றையும் அறிமுகப்படுத்துகிறார். கூடவே அவர்களின் மிகச்சிறந்த படைப்புகளையும் அதன் அறிமுகத்தையும் சிறந்த மேற்கோள்களையும் காட்டுகிறார்.
விளாதிமிர் நபகோவில் ஆரம்பித்து, ஓரான் பாமுக் வரை நோபல் பரிசிலிருந்து புக்கர் பரிசுவரை பல பரிசுகளை வென்ற சிறந்த எழுத்தாளர்களின் அறிமுகம், நமக்கும் அவர்கள் எல்லோரையும் படிக்கவேண்டுமென்ற ஆர்வத்தைத் தருகிறது(ஆனால், எஸ். இராமகிருஷ்ணனின் அறிமுகமே நமக்குப் படித்த திருப்தியைத் தரக்கூடும்).
புயண்டஸ், போர்ஹே, ரிச்சர்ட் பர்ட்டன் போன்றோர் எழுத்தைத் தாண்டி அரசியலிலும் ஈடுபட்டதையும், நாடு அவர்களுக்கு செய்த கௌரவத்தையும், மதிப்பையும் அறியும்போது, நம் நாட்டில் எழுத்தாளர்களின் நிலையும், நாடு அவர்களை நடத்தும் விதத்தையும் எஸ். ரா குமுறலோடு கூறுவது உரைக்கிறது.
பாப்லோ நெருடாவின் எழுத்துக்கு நாட்டுத் தலைவர்களே அஞ்சியதை அறிகையிலே வாள்முனையைவிட பேனாமுனையின் கூர்மை விளங்குகிறது. திரைத்துறையில் கோலோச்சிய எழுத்தாளர்கள் உலகம் முழுவதும் இருந்திருக்கிறார்மகள் (இந்தியாவில் தமிழ்நாட்டில் இன்னும் முகப்பெரிய முன்னேற்றம் இல்லை, ஜெயமோகன், எஸ். ரா போன்று சிலர் வசனம் எழுதவும், திரைக்கதை எழுதவும் செய்கிறார்கள். இதைவிடக் கொடுமை எழுத்தாளர்களின் கதையைத் தழுவியோ அல்லது முழுமையாகவோ காப்பிசெய்து எடுக்கும் எந்த இயக்குனரும் அதற்கான நன்றியை குறிப்பிடுவதோ credit-ஐ தருவதோ கிடையாது. அவலம், கேவலத்திலும் கேவலம் நான் அவர் கதையைப் பயன்படுத்தவே இல்லை என்று சாமி மேல் சத்தியம் செய்து மறுப்பது).
மனச்சிக்கலுக்கு ஆளான எழுத்தாளர்களைப் பற்றியும் அது தற்கொலை வரை போனதையும் அறியும்போது கனக்கிறது மனது. தங்களுக்கு மனச்சிக்கல் இருந்தது என்பதை ஒப்புக் கொண்ட அவர்களின் நேர்மை மெச்சவேண்டியது. சாமுராயாக வாழ்ந்த புகியோ மிஷிமா, காமத்தையும் இலக்கியத்தையும் கொண்டாடிய சர் ரிச்சர்ட் பர்ட்டன், பெண் எழுத்தாளர்களென நீள்கிறது பட்டியல்.
குழந்தை இலக்கியங்களான ஆலிஸின் அற்புத உலகம் (Alice's Adventures in wonderland) எழுதிய லூயி கரோல், நார்னியா(Narnia) எழுதிய சி.எஸ். லூயிஸ், ஹாபிட்(Hobbit), தி லார்ட் ஆஃப்த ரிங்ஸ்(The Lord of the Rings) எழுதிய ஜே. ஆர். டோல்கின் என அறிமுகம் நீண்டு கொண்டே போகிறது. இப்புத்தகங்கள் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியோர்களின் அறிவுத்தேடல், மெய்த்தேடலுக்கும் கூட இப்புத்தகங்களைப் படிக்கலாம் என்கிறார் எஸ். ரா.
உலக எழுத்தாளர்களின், எழுத்தின் அறிமுகம் வேண்டுவோர், செவ்விலக்கியத்தில் எதைப்படிப்பது என தேடுவோர் படிக்கவேண்டிய புத்தகம்.
No comments:
Post a Comment