Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-10-13 முதல் 26-10-13வரை)

இணையவழி வணிகச்சேவை அளித்துவரும் ஸ்னாப்டீல்(snapdeal), 30% பொருள் கேட்பு ஆணைகள் (orders) அலைபேசி வாயிலாக நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

மைக்ரோசாப்ட்(Microsoft) நிறுவனம் ஆன்ட்ராய்டு போலவே தனது விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய அலைபேசிகளை உருவாக்க எச்டிசி(HTC)  போன்ற அலைபேசி உற்பத்தியாளர்களிடம் கேட்டுவருவதாக அறியப்படுகிறது.

விண்டோஸ் மொபைல் இயங்குதளத்துடன் கூடிய நுண்ணறி அலைபேசிகள் விற்பனையில் 90% சதவீதம் நோக்கியாவின்(Nokia) தயாரிப்புகள் மட்டுமே என அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

மைக்ரோமேக்ஸ்(Micromax) நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி திரு. தீபக் மல்ஹோத்ரா தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இந்தியாவின் மிகப்பெரிய மென்பொருள் சேவை ஏற்றுமதி நிறுவனமான டிசிஎஸ்(TCS) புதிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களான பெருந்தகவல்(big data), மேகக்கணிமை(Cloud Computing), அலைபேசி தொழில்நுட்பங்கள் போன்றவற்றில் மிகப்பெரிய அளவில் முதலீடு செய்யவுள்ளதாக அந்நிறுவனத்தின் முதன்மைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக மேலாளர் திரு. என். சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

இன்போசிஸ் நிறுவனம் தனது பணியாளர்களில் நட்சத்திர திறமையாளர்களுக்கு(Star Performers) போனஸ் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.

நுண்ணறி கைக்கடிகார(Smart Watch) தயாரிப்புப் போட்டியில் ஈடுபட்டுள்ள பல்வேறு பெருநிறுவனங்களைத் தொடர்ந்து தற்போது எச்டிசி நிறுவனம் இப்போட்டியில் இணைந்துள்ளது.  இதன் நுண்ணறி கைகடிகாரம் மற்ற நிறுவனங்களைப் போன்றே ஆன்ட்ராய்டு இயங்குதளத்துடன் இருந்தாலும், கூடவே கேமராவையும் உள்ளிணைத்து வரவிருக்கிறது.

நச்செதிர்நிரல்(Anti-Virus) தயாரிப்பு நிறுவனமான சிமேன்டெக்(symantec), இந்தியா 2013-ம் ஆண்டில் மட்டும் இணைய வழி ஏமாற்றாளர்களால் சுமார் 4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (கிட்டத்தட்ட இந்திய ரூபாய் 24,630 கோடிகள்) இழந்திருப்பதாக தெரிவிக்கிறது.

ஆப்பிளின் ஆப் ஸ்டோர்(App Store) 1 மில்லியன் (10 லட்சம்) செயலிகளுடன் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

(தொழில்முறை) சமூக வலைதளமான லின்க்டுஇன்(LinkedIn), இந்தியாவில் மிகுதியாக விரும்பப்படும் தொழில்நிறுவனங்களாக அக்சென்சர்(Accenture), விப்ரோ(Wipro), இன்போசிஸ்(Infosys) ஆகிய நிறுவனங்களைக் குறிப்பிட்டுள்ளது.

யாஹூ நிறுவனம் புகைப்படங்களை அடையாளம் (Image recognition) காணும் தொழில்நுட்ப நிறுவனமான லுக்ஃபுளோ(LookFlow) என்கிற புதிய நிறுவனத்தை(startup) தனது புகைப்பட சேவையான ஃபிளிக்கருக்காக(Flickr) கையகப்படுத்தியுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



No comments:

Post a Comment