Monday, April 28, 2014

Form-16-ம் பள்ளி நண்பனும்..

பல வருடங் கழித்து பள்ளி நண்பன்  ஒருவனை வங்கியொன்றில் சந்தித்தேன்.  கையில் Form-16-ன் நகலொன்றோடு நின்றிருந்தான்.  வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது தொடர்பாக விசாரிக்க வந்திருப்பதாக சொன்னவனிடம்,  "என்னடா Form-16-ல் Gross income-ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.  அதுவா, என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவன், ஒரு நொடி நிறுத்தி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "அது ஒரு கணக்கு உனக்குப் புரியாது..." என்றான்.  (ஐன்ஸ்டீன், "ஒரு விஷயத்தை உன்னால் மிக எளிமையாக மற்றோர்க்கு பரியும் வகையில் சொல்ல முடியவில்லையென்றால், உனக்கு அந்த விஷயம் சரியாக தெரியவில்லை என்று பொருள்" என்பார்)

எனக்கு சுர்ர்ரென்றது, உடனே அவனுக்கு வருமான வரி குறித்தான எல்லா விஷயங்கைளையும், கணக்கிடும் விதங்களையும் விளக்கி, இதெல்லாம் எனக்குப் புரியாதுதான் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றிருந்தது.  ஆனால், என் வழமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன்.  ஒரு மூன்றாம் மனிதன்தான் அவனுக்கு தெரியாத மற்றொரு 3-ம் மனிதனை உருவம் பார்த்து எடைபோடுகிறான் என்றால், உருண்டு புரண்டு ஒன்றாய் அடி வாங்கி கள்ளமின்றி விளையாண்ட 2 நண்பர்களும் கூட நீண்டதொரு இடைவெளியில் பிரிதொரு நாளில் சந்திக்கையில் அடுத்தவனின் உடை, உருவம் பார்த்தேதான் எடை போடுவார்களா...? (நமக்கும் டிரஸ்சிங் சென்ஸ்க்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும்...)

ஆடம்பரமில்லா, மிக எளிமையான காந்தியும், காமராசரும் கூட இவர்களுக்கு அற்பங்கள் தாம்.  10 சுமோ, 15 xylo-வோடு, 400-600 கிராம் தங்க நகைகளோடு வரும் மனிதர்கள்தாம் இவர்களுக்குப் மாமனிதர்கள். 

கொஞ்சமாகிலும் படித்த, வருமான வரியென்றால் என்ன என்று கொஞ்சமேயறிந்த எனக்கே (என்ன பெரிய எனக்கே..?) இந்த வகையான பதில்தான் கிடைக்கிறதென்றால், நான் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் படித்து, 10-வதோடு, 12 வதோடோ படிப்பை நிறுத்திவிட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்கும் ராஜ்குமாரையோ, ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அருணையோ, பெட்டிகடை நடத்தும் சரவணனையோ என்ன மாதிரி இவர்கள் நடத்துவார்கள்?

No comments:

Post a Comment