Tuesday, June 27, 2017

பொறியியல் தவிர்த்து என்ன படிக்கலாம்?

கடந்த சில வருடங்களாகவே பொறியியல் மீதான மதிப்பும் மோகமும் வெகுவாக குறைந்துவிட்டதென்பது நாம் கண் முன் காணும் நிதர்சனம் (முந்தைய பதிவு -> பொறியியல் மீதான மதிப்பும் மோகமும் குறைந்தது ஏன்? ).  பொறியியல் தவிர்த்து வேறு என்ன படிக்கலாம் என்பது இப்போது பிள்ளையை பெற்ற எல்லோருக்கும் இருக்கும் பெருங்குழப்பம், குறிப்பாக கடந்த/நடக்கும் கல்வியாண்டில் மேல்நிலை கல்வி படித்த/படிக்கும் பிள்ளையை பெற்றோருக்குத்தான் தலைவலி அதிகம்.  அவர்களுக்கு இருக்கும் மனக்குழப்பம் போதாதென்று அக்கம் பக்கத்தினர், சுற்றம், நண்பர்கள் என்று ஆளாளுக்கு அவர்களால் முடிந்த அளவு அழுத்தத்தை கூட்டிக்கொண்டே இருப்பார்கள்.  இப்பொழுதுதான் 'என்னா மார்க்கு பொண்ணு எடுத்திருக்கு?' என்கிற கேள்விக்கு 1042-வது முறையாக பதில் சொல்லி மதிப்பெண் குறைவாயிருந்தால் அதற்கு 1043 காரணங்கள் சொல்லி, 1100-க்கு மேலிருந்தால் நாங்கள் 1190 எதிர்பார்த்தோம் என்று ஒரு பில்டப் எல்லாம் கொடுத்து ஓய்திருப்பார்கள்.  வேதாளம் முருங்கைமரம் ஏறிய கதையாக அடுத்து ஆரம்பித்திருப்பார்கள்,

'என்னப்பா மகனை மேல என்ன படிக்கவைக்கப் போற?'

'அந்த காலேஜ்லயா? அது சரியில்லயாமே... என் சகலப்பாடி பையன் கூட அங்கதான் படிச்சான், இந்தா இப்ப வெட்டி ஆபிசரா சுத்திவந்துட்டுருக்கான்...'

'என்னப்பா எந்த காலத்துல இருக்குற நீ? ம்... கம்ப்யூட்டர்க்கு சேக்கறேங்கற... அங்க ட்ரம்ப் எல்லாரையும் தொறத்திட்ருக்கான்னா, இங்க ப்ரேம்ஜியும் தொறத்திட்டுருக்காறாம்..
என்னாது... யப்பா அந்த ப்ரேம்ஜி இல்ல அசிம் ப்ரேம்ஜிப்பா விப்ரோ கம்பெனி இருக்கு இல்ல அதுக்கு ஓனரு.  ஏதோ ரெசசனாம் ஐடி-ல எல்லாரையும் வேலைய உட்டு எடுக்குறாங்களாம்.  இப்ப போய் கம்ப்யூட்டர் இன்ஞ்சினியரிங் சேக்கற... என்னமோ பாத்து பண்ணுப்பா'

'என்னாது அவ்ளோ தூரத்துல இருக்கற காலேஜ்லயா?  ஏன் இங்கலாம் சீட் கெடைக்கலயா... ஒத்தப் பொண்ண பெத்து வச்சுகிட்டு தூரத்துல ஆஸ்டல்ல சேக்கறேங்கற.  பாத்துக்கப்பா காலம் ரொம்ப கெட்டுக்கெடக்கு...'

'இப்பலாம் இஞ்சினியரிங்கு எங்கப்பா மதிப்பிருக்கு சொல்லு..'

'BA தமிழா? நல்ல ஆளுப்பா நீ'

சரி என்னதான் படிக்கலாம் பொறியியல் தவிர்த்து (பொறியியல் படிக்காதீர்கள் என்று சொல்வதல்ல இப்பதிவின் நோக்கம்).

மிக மேலோட்டமா சொல்வதானால் இப்படி சொல்லலாம்

1. அடிப்படை அறிவியல் ( இயற்பியல், வேதியியல், கணிதம், விலங்கியல் போன்று)
2. அடிப்படை அறிவியல் சார்ந்த சிறப்புப் பிரிவுகள் ( உயிர்வேதியியல், உயிரிதொழில்நுட்பவியில் போன்று)
3. கலைப் பிரிவுகள் (தமிழிலக்கியம், ஆங்கிலம், வரலாறு போன்று)
4. கணினி மற்றும் அது சார்ந்த பிரிவுகள் (கணிப்பொறியில், கணினி பயன்பாட்டியில் போன்று)
5. வேளாண் அறிவியல்
6. துணை மருத்துவப் படிப்புகள் (செவிலியர், மருந்தாளுணர், மருத்துவ ஆய்வுக்கூடப் படிப்புகள்)
7. மாற்று மருத்துவப்படிப்புகள் (சித்தா, ஆயுர்வேதா, யுனானி - தற்போதுள்ள நடுவண் அரசு இப்பாரம்பரிய மருத்துவ முறை குறித்த விழிப்புணர்வையும் பல சலுகைகளையும் கொடுத்துவருகிறது)
8. வணிகவியல், நிர்வாகவியல்
9. உளவியல்
10. திரைப்படம் மற்றும் கிராபிக்கஸ், அனிமேஷன் சம்பந்தப்பட்ட படிப்புகள்
11. நுண்கலை பாடப்பிரிவுகள்
12. தொலைக்காட்சி மற்றும் ஊடகம் தொடர்பான பாடங்கள்
தொல்லியல், கல்வெட்டியல், சைபர் செக்யூரிட்டி, நூலக அறிவியல் ....

இப்படிப்புகளை எங்கு படிக்கலாம் -> ஆண்டு வாரியாக இந்தியா டுடே நீல்சன் சர்வே.


முடிந்தால் இதன் கூடவே தட்ட்ச்சு, கணினியில் அடிப்படை டிப்ளமோ, பிரெஞ்ச் போன்ற அயல் நாட்டு மொழி பயிலல் என பன்முக திறமையை வளர்த்துக்கொண்டால் பணிவாய்ப்பின் போது முன்னுரிமை கிடைக்கும்.

இன்னும் எவ்வளவோ இருக்கிறது.  மேற்சொல்லப்பட்ட பாடப்பிரிவுகள் எதுவும் எந்த தரவரிசை அடிப்படையிலும் சொல்லப்படவில்லை.

நினைவில் கொள்ளுங்கள்
1. எல்லா காலத்திலும் எல்லா துறையிலுமே திறமைசாலிகளுக்கு எப்போதும் தேவை இருந்துகொண்டுதான் இருக்கும்
2. அவர்களுக்கு அடுத்தப்படியாக திறமையை வளர்த்துக்கொள்ள தயாராய் இருப்பவர்களுக்கும் வேலை இருந்துகொண்டு தான் இருக்கும்
3. எது ஒன்றையும் புதுவிதமாய் அணுகுபவர்களுக்கும் , புதியதாக ஒன்றை முயற்ச்சி செய்வோருக்கும் வரவேற்பு குறையாமல் இருந்துகொண்டேதான் இருக்கும்
4. படித்தது வேறு, பார்த்த வேலை வேறு என்று இருப்பவர்கள் பலரும் மிகப்பெரும் சாதனையாளர்களாக இருக்கிறார்கள் என்பதும் கண்கூடு.  (நண்பன் திரைப்படம் நினைவிருக்கிறதா?)

மனதிற்க்குப் பிடித்த ஒன்றையே உங்கள் வேலையாக மாற்றிக்கொண்டால் உங்கள் வாழ்நாளில் நீங்கள் வேலையாக ஒன்றைப் பார்க்க வேண்டாம் என்பார்கள்.  அப்படி ஒன்றை உருவாக்கிக்கொள்ளுகள்.


குறிப்பு;
நீங்கள் அறிந்த பிற பாடப்பிரிவுகளை பின்னூட்டமிட்டால் மற்றோருக்கும் பயன்படும்.

1 comment: