Monday, September 1, 2014

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்...

எழுத்தாளர்/பத்திரிக்கையாளர் சமஸ்*
greader பயன்படுத்த ஆரம்பித்ததில் இருந்து சில பல தமிழ் எழுத்தாளர்களை விடாமல் தேடிப்பிடித்து படித்து வருகிறேன்.  அப்படித்தான் எப்படியோ சமஸ் அவர்களின் எழுத்து எனக்கு அறிமுகமானது.  அறையில் அமர்ந்து கொண்டு கற்பனையில் கதை, கவிதை படைக்கும் எழுத்தாளர்கள் உண்டு, தன் சொந்த அனுபவங்களை சுவைபட எழுதும் எழுத்தாளர்கள் உண்டு, திரைவிமர்சனங்களும் அரசியல் பகடிகளும் சமூக பகடிகளும் எழுதும் எழுத்தாளர்களும் உண்டு, வேறு பணிகளில் இருந்துகொண்டு பொழுது போக்கிற்காகவும் hobby-யாகவும் எழுதுபவர்களும் உண்டு.  சமஸ் தனது எழுத்துகளுக்காக அந்தந்த களங்களுக்கே செல்லக்கூடியவர்(தன் ஊடகப் பணி சார்ந்து பணி நிறுவனத்தின் மூலம் என்றே நினைக்கிறேன், இவர் தற்போது தமிழ் இந்துவில் பணியாற்றிவருகிறார்).

  பிரச்சனைகளை அதன் இடங்களுக்கே சென்று அறிந்து, அங்குள்ள மக்களை பார்த்து அவர்கள் அனுபவங்களைப் பெற்று எழுதி வருகிறார்.    (இதில் எதிலும் சேராத ஒரு வகையான என்னைப்போன்ற எழுத்தாளர்களும் உண்டு.  எப்புடி...? ;) just for fun.  ஒன்னுமே எழுதாம நான்லாம் எப்புடிங்க எழுத்தாளன் ஆகமுடியும்.  அதான் அப்பப்ப இப்புடி நானா ஜீப்புல ஏறி ரவுடி ஆயிக்கிறது - நன்றி வடிவேல்).

முதலில் (தேர்தலின் போது) இந்தியாவின் வண்ணங்கள் என்று இந்தியா முழுவதும் வெவ்வேறு இடங்களுக்குச் சென்று அம்மக்களின் வாழ்க்கை, பிரச்சினை, அரசியல் நிலைப்பாடு என்பது குறித்து எழுதிவந்தார்.  தற்போது தமிழ்நாட்டு கடற்கரைகளைப் பற்றியும் மீனவ (கடலோடி என்பதுதான் சரியாம்) சமுதாயத்தைப் பற்றியும் அங்குள்ளப் பிரச்சினைகளைப் பற்றியும், அம்மக்களின் வாழ்வையும் பாடுகளையும் எழுதி வருகிறார் (நீர் நிலம் வனம்).  அவரின் எழுத்து ரத்தமும் சதையுமாக இருக்கிறது, சிற்சில கட்டுரைகள் மிகுந்த மன எழுச்சியையும், சமூக கோபத்தையும் நமக்குள் ஏற்படுத்துகிறது.  சில கட்டுரைகள் நமக்கு புதிய அறிவையும், அனுபவத்தையும் பெற்றுதருகிறது.  சில கண்ணீரை வரவழைக்கிறது, நம் அறியாமையை, இயலாமையை இடித்துரைக்கிறது.  எல்லா கட்டுரைகளிலும் மீனவர்களின் தாங்கள் மீனவர் என்பதிலும் தங்கள் வாழ்க்கை குறித்தும், தாம் வாழும் அந்த கடற்கரை குறித்தும் பெருமையும் கர்வமும் இழையோடுகிறது இதுவரை விவசாயிகளைப் பற்றி இருந்த அதே போன்ற ஒரு பெருமித எண்ணம் நமக்கு மீனவர்கள் மீதும் ஏற்படுகிறது.  கனிம மணல் பிரச்சனையிலிருந்து, கடலில் கழிவுகள் கொட்டுவது வரை பல பிரச்சனைகளையும் தன் கட்டுரைகளில் காட்டிச் செல்கிறார்.  தென் மாவட்டங்களில் புற்றுநோய் ஏதோ சாதாரண விஷயம் போல் ஆகிவிட்டிருக்கிறது எலும்பு புற்று, நுரையில் புற்று, இரத்தப்புற்று என்று வகை வகையாக தாக்கப்படுகிறார்கள் என்கிறார்.  படிக்கும்போதே கண்ணீர் வழிய ஆரம்பித்துவிடுகிறது.  நாம் எவ்வளவு விஷயங்கள் தெரியாமல் இருக்கிறோம்... நம் மக்களின் பிரச்சனை தெரியாமலே நாம் ஈரான், இஸ்ரேல்-பாலஸ்தீனம், ISIS என்று முகநூலிலும் டிவிட்டரிலும் பொங்கி வெடிக்கிறோம் (என்னையும் சேர்த்துதான் சொல்கிறேன்).  நம் ஊர் செய்தி ஊடங்களே இதுபோன்ற விஷயங்களை கையில் எடுக்காதபோது வடநாட்டு இந்தி ஆங்கில ஊடங்கள் எங்கிருந்து இதையெல்லாம் பேசப்போகிறது?  இந்தக் கட்டுரையில் படிக்கும் அவலங்கள் ஏதேனும் டில்லியிலோ, மும்பையிலோ நடந்திருந்தால் இந்நேரம் எல்லா செய்தி ஊடங்களும் இதைப் பேசியிருக்கும் (டிஆர்பி ஏற்றதான்), நாமும் ஹேஷ் டேக்களுடன் சமூக வலைதளங்களில் சீறியிருப்போம், முகநூல் cover photo-வை கருப்புக்கு மாற்றியிருப்போம், மெழுகு வர்த்திகளை ஏற்றிய போட்டோக்களைப் பகிர்ந்திருப்போம், அரிதிலும் அரிதாக சென்னையில் மெரினாவில் ஒரு மாலை கூடியிருப்போம் பின்னர் '''மறந்திருப்போம்'''.  விடுங்கள் எதற்கோ இந்தப் பதிவை ஆரம்பித்து எங்கோ வந்துவிட்டேன். 

முடிந்தால் சமஸின் கட்டுரைகளை நேரமிருந்தால் படித்துப் பாருங்கள்.  அவரின் வலைப்பூ சுட்டி http://writersamas.blogspot.in/


*-> புகைப்படம் அவருடைய வலைப்பூவிலிருந்து இணைக்கப்பட்டது.



Sunday, August 31, 2014

இணையத்தில் வாசித்தல் மற்றும் வாசிக்க சில எழுத்தாளுமைகளின் சுட்டிகள்

   வாசிப்பு என்பது ஒருவருக்கொருவர் வேறுபடும் அது ஒருவர் படிக்கும் புத்தகங்களின் வகையில் (Genre) ஆரம்பித்து, அவர் படிப்பதற்கு பயன்படுத்தும் ஊடகம் (medium), படிக்கும் வேகம், மொழி, இடம், காலம் என பலவகையிலும் வேறுபடும்.  தற்காலத்தில் ஒருவர் படிக்க பயன்படுத்தும் ஊடகத்தை 1. காகித அடிப்படிடையில் (hard copy) 2. மென்பொருள் அடிப்படையில் (soft copy) என்று இரண்டு பெரும் பிரிவாகப் வகைப்படுத்தலாம்(3.  இணைய இணைப்பின் உதவியுடன் உலாவியில் படிப்பதும் உள்ளது அது கிட்டத்தட்ட 2வது வகைதான்).  இதிலும் மென்பொருள் அடிப்படையிலான புத்தகம் என்பது கணினியில் படிப்பது தொடங்கி அலைபேசி, பலகைக்கணினி போன்றவற்றையும் தாண்டி புத்தகத்திற்கெனவே பயன்படுத்தும் வகையில் கிண்டில் வரை வேறுபடுகிறது.  இதிலும் புத்தகத்தின் மென்பொருள் கோப்பு வடிவத்தின்(format) அடிப்படையில் epub, pdf, html என்று பலவாறு இருக்கிறது.  இன்றுவரையில் காகிதப் புத்தகங்களையே கொண்டாடும் பலரும் (நானும்) கொஞ்சம் கொஞ்சமாக மென்புத்தகங்களைப் படிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.  கல்லில் வடித்து, செப்புப் பட்டயங்களில் ஏற்றி, ஓலைச்சுவடிகளில் எழுதி அதைப் படியெடுத்து, காகிதத்தில் அச்சடித்து அதை நகலெடுத்து எப்படி எப்படியோ உருமாறிய எழுத்தும், புத்தகங்களும், வாசிப்பும் இந்த 21-ம் நூற்றாண்டில் மிகச் சில வருடங்களுக்கு முன் எடுத்துள்ள அவதாரம் தான் மென் புத்தகம்.  சரி இப்பொது இணைய வாசிப்பைப் பற்றியும், என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம் என்று பார்க்கலாம்.

இணையத்தில் படித்தல்:
சில வருடங்களுக்கு முன்புவரை கூட இணைய இணைப்பும் அதன் பயன்பாடும் ஒரு சிலரால் மட்டுமே அனுபவிக்கக் கூடியதாக இருந்துவந்தது.  அதற்கான காரணங்கள் இணைய பயன்பாட்டிற்கு செலுத்த வேண்டிய விலை, பயன்பாட்டிற்கு வேண்டிய உபகரணங்களின் விலை மற்றும் அதன் கிடைத்தல், பயன்படுத்துவதற்கான தொழில்நுட்ப அறிவு இன்னும் சில.  இணையம் அலைபேசியின் மூலம் பயன்படுத்தக்கூடிய நிலை வந்ததும், அலைபேசிகளின் சந்தை மற்றும் அலைபேசி இணைப்பு வழங்கும் தொலைதொடர்பு நிறுவனங்களின் போட்டி ஆகியவற்றால் இவற்றின் விலை மட மடவென சரிந்து எல்லோரும் பயன்படுத்தும் நிலை வந்தது.  இது பல சாதக பாதங்களை உள்ளடக்கியிருந்தாலும் வாசிப்பை ஒரு பழக்கமாகக் கொண்டவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை திறந்துவிட்டது அதுதான் இணையத்தில் வாசித்தல்.  இணைய வாசித்தல் பெருக ஆரம்பித்ததும் பல எழுத்தாளர்களும், எழுத்துதொடர்பான நிறுவனங்களும் தங்களுக்கென இணையதளத்தை உருவாக்க ஆரம்பித்தன (Survival of the fittest & Adopt the technology as soon as possible).  வாசிப்பவர்களும் பல விதமான மென்பொருட்களைப் பயன்படுத்தி அவர்கள் இணையதளத்தை அனுக ஆரம்பித்தனர்.  இதனால் எல்லா வாசகர்களையும் சென்றுசேரவும், திருப்திபடுத்தவும் இந்த இணையதளங்கள் பல வித வடிவங்களை எடுக்க ஆரம்பித்தன உதாரணத்திற்கு ஒரே இணையதளம் மேசைக்கணினி, அலைபேசி, பலகைக்கணினி என்று பல வித கருவிகளுக்கே ஏற்ப தன்னுடைய இணைய இடைமுகங்களை (Interface) உருவாக்கின.  அதன்பிறகு படிப்பானைப் ([feed] reader) பயன்படுத்தும் பயனர்களுக்காக RSS, Atom வகையறாக்களிலும் தங்கள் இணைய பக்கங்களை தர ஆரம்பித்தன.  அதற்கு அடுத்து தங்கள் வாசகர்களுடன் எப்போது தொடர்பிலிருக்க வேண்டியும், தம் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டியும் (வணிக நோக்கும் உண்டு), வாசகர்கள் எந்நேரமும் வாசம் செய்யும் சமூக இணையதளங்களான facebook, twitter போன்ற இடங்களிலும் தங்கள் கணக்குகளை ஆரம்பித்தன.  இன்று ஒருவர் தன் வலைப்பூவில் ஒரு பதிவிட்டால் அது rss மற்றும் atom feed-ஆக மாறுகிறது, முகநூல் நிலைதகவலாக (status message) மாறுகிறது, twitter-ல் கீச்சாக மாறுகிறது இப்படி பல வடிவத்தில் வாசகனை சென்றடைகிறது.

என்ன/யாரை/எந்த சுட்டியில் வாசிக்கலாம்:

விருது வென்ற, நன்கு பரிச்சயமான எழுத்தாளர்கள் தொடங்கி, விருதை நோக்கி சென்றுகொண்டிருக்கும், விருது பற்றி கவலைப்படாத, மனதிருப்திக்காக, வணிக நோக்கில் என பல காரணங்களுக்க எழுதும் பலரும் தங்களுக்கென ஒரு இணையதள பக்கமோ, ஒரு வலைபூவோ குறைந்த பட்சம் ஒரு முகநூல் பயனர்கணக்கிலோ தொடர்ந்து எழுதி இணையத்தில் இட்டு வருகிறார்கள்.  அப்படி எழுதும் ஒரு சிலரின் இணையபக்கம், வலைப்பூ, முகநூல் பக்கங்களை உங்களுக்காக கீழே பட்டியலிடுகிறேன். 

குறிப்பு: இது ஒரு சிறு பட்டியல் மட்டுமே முழுமையான பட்டியல் அல்ல(தர வரிசைப் பட்டியலும் அல்ல) எனவே, உங்களுக்குப் பிடித்தமான எழுத்தாளர்களைப் பற்றி குறிப்பிடாமல் விட்டிருந்தால் கோபப்படவேண்டாம்.  பின்னூட்டதில் அவர்களை பற்றி நீங்களே அறிமுகப்படுத்திவிடுங்கள்.  நான் புதிதாக அறியும் எழுத்தாளர் விவரங்களை நானும் அவ்வப்போது இதே பதிவில் சேர்த்து விடுகிறேன்.


1எழுத்தாளர்website
2ஜெயமோகன் www.jeyamohan.in
3சாரு நிவேதிதாwww.charuonline.com/
4எஸ். ராமகிருஷ்ணன்www.sramakrishnan.com/
5பத்ரி சேஷாத்ரிwww.badriseshadri.in/
6வா. மணிகண்டன்www.nisaptham.com
7சமஸ்www.writersamas.blogspot.in/
8அருண் நரசிம்மன்www.ommachi.net/
9வெ. ராமசாமிothisaivu.wordpress.com/
10விமலாதித்த மாமல்லன்www.maamallan.com/
11
12சுகா (சுரேஷ் கண்ணன்)http://venuvanam.com/
13
14கடற்கரய்http://thesanthri.blogspot.com/
15சி. சரவணகார்த்திகேயன்www.writercsk.com/
16என். சொக்கன்http://nchokkan.wordpress.com/
17பா. ராகவன்www.writerpara.com/
18மரபின் மைந்தன் முத்தையாhttp://marabinmaindanmuthiah.blogspot.in/
19பெருமாள் முருகன்http://www.perumalmurugan.com/
20அ. முத்துலிங்கம்amuttu.net/
21ருத்ரன்rudhrantamil.blogspot.com/
22தேவதேவன்http://poetdevadevan.blogspot.in/
23நெல்லைக் கண்ணன்thamizhkadal.blogspot.com/
24அறிவுமதிhttp://arivumathi.wordpress.com/
25வண்ணநிலவன்http://wannanilavan.wordpress.com/
26வண்ணதாசன்http://vannathasan.wordpress.com/
27அழகிய சிங்கர்http://www.navinavirutcham.in & http://azhagiyasingar.blogspot.in/
28பாலகுமாரன்http://balakumaranpesukirar.blogspot.in/
29என். இராமதுரைhttp://www.ariviyal.in/
30நாஞ்சில் நாடன்http://nanjilnadan.com/
31மாலன்http://maalan.co.in/
32கண்மனி குணசேகரன்http://kanmanigunasekaran.blogspot.in/

Saturday, July 12, 2014

பட்ஜெட் - 2014


   மோடி தலைமையிலான பாஜக அரசின் முதலாவது நிதிநிலை அறிக்கை நேற்று இனிதே நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.  இரண்டு நாட்களுக்கு முன்னதாக தான் இரயில்வே பட்ஜெட் பாராளுமன்றத்தில் திரு. சதானந்த கவுடாவால்  தாக்கல் செய்யப்பட்டது, மிகப்பெரிய எதிர்ப்புகள் ஏதும் இல்லாமல் ஏற்றுக்கொள்ளப்பட்ட (எங்கே எதிர்ப்பது? ஆளும் கட்சிக்கு மட்டுமே பெரும்பான்மை பலம் இல்லாமல் இருந்த ஒரு நாட்டில், முதல் முறையாக எதிர்கட்சிக்குப் பெரும்பான்மை இல்லாமல் போனது துரதிருஷ்டம்தான், தங்களுக்கு எதிர்கட்சி அந்தஸ்தை தர வேண்டும் என்று முறையிடும் அளவிற்கு ஆகிவிட்டதே.. பாவம்!) இது மிக சிறிய அளவிலான சலசலப்பை மட்டுமே ஏற்படுத்தியது(கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே தூரலோ, சிறு மழையோ...).  முந்தைய ஆட்சியில் பல புதிய இரயில்கள் தமிழகத்திற்கு கிடைத்தபோதும் சிறு சிறு சஞ்சலப்பு இருந்த தமிழகத்தில், இந்தமுறை மொத்தமாக வெறும் 4 இரயில்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும்(அதிலும் ஓன்றைத்தவிர மற்ற இரயில்கள் அனைத்தும் சென்னையிலிருந்து அப்படியே... அப்படியே வடக்கு நோக்கி சென்றுவிடுகிறது.. Actual-ஆ இந்த டிரெயின்லாம் வடநாட்டுக்காரன் மெட்ராசுக்கு சுலுவா வந்து போகதான்.  மின்சாரம், மருத்துவம், கல்வி போன்றே சென்னையில் இருப்பவர்கள் மட்டுமே மக்கள், மற்றோரெல்லாம் மாக்கள்)திமுக, அதிமுக இரண்டுமே நல்ல கருத்துகளையே உதிர்த்துள்ளது.  போதும் பாஸு, பொது பட்ஜெட்னு சொல்லிட்டு இரயில்கதைய சொல்லிட்டு இருக்கீங்க.... ம்.. வண்டிய நகத்துங்க...

   திரு அருண்ஜேட்லி அவர்கள் தயாரித்த இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய சீர்திருத்தங்கள் என்று எதும் இல்லை என்றாலும் மிகப் பாதகமான அம்சங்களும் எதுவும் இல்லை என்பதால், மிகப்பெரிய வரவேற்பு இல்லை என்றாலும் மிகப்பெரிய எதிர்ப்பும் இல்லை (அம்மாடி, எவ்ளோ மிகப்பெரிய).  பட்ஜெட்டுக்குப் பின்னால் அரசின் பொருளாதார சீர்திருத்தங்கள், கொள்கைகள் எப்படி அமையுமோ? நாட்டின் முன்னேற்றத்திற்காக கசப்பு மருந்தைக் கொடுத்துவிடுவார்களோ என்று அஞ்சி சில மாதங்களாக வானம் தொட்டு வளர்ந்துகொண்டிருந்த பங்குச்சந்தைக்கூட ஒரே நாளில் 500த்தி சொச்சம் புள்ளிகள் இறங்கி தரையைத் தடவிக் கொண்டிருந்த்து.  ஊடகங்கள், ஒரே நாளில் இந்திய முதலீட்டார்களின் சொத்து சில ஆயிரம்/லட்சம் கோடிகள் காணாமல் போய்விட்டது என்று பிளிரிக்கொண்டிருந்தன.  ஆனால், நிதிநிலை அறிக்கை நாளான நேற்று(10-7-14) பங்குச்சந்தை அருண்ஜேட்லி அவர்களின் பேச்சைக் கேட்டுக் கேட்டு மெல்ல மேலெழுந்து வந்தது, திறந்த வீட்டிற்குள் வர எட்டிப்பார்க்கும் குட்டிப்பூனை போல.

   Salaried community எனப்படும் சம்பளக்காரர்களுக்கு ரசகுலா இல்லாவிட்டாலும் ரஸ்தாலி வாழைப்பழம் கொடுத்துள்ளார்.  ஆமாம், ஒட்டு மொத்தமாக இதுவரை இருக்கும் வரிச்சலுகைக்கு மேல் இன்னும் ஒரு லட்ச ரூபாய் வரிச்சலுகைக்குள் வந்திருக்கிறது.  வருமான வரிக்கான பிரிவுகளில்(Slab)-ல் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை என்றாலும் 5 லட்சம் வருமானம் இருப்பவர் 10,000 ருபாயும், 5-க்கு மேல் 10 லட்சம் வரை வருமானம் உள்ளவர் 20,000 ருபாயும், அதற்குமேல் உள்ளவர்கள் 30,000 ரூபாயும் வரி செலுத்துதலில் இருந்து மிச்சம் பிடிக்கலாம்.

                                                                       நடப்பிலிருப்பது        நடைமுறைக்கு வரவிருப்பது
வரி செலுத்துதலில் இருந்து விலக்கு :              2 லட்சம் வரை                    2.5 லட்சம் வரை
                                                                  (முதியோர் ; 2.5 லட்சம்)         (முதியோர் 3 லட்சம்)

80C பிரிவின் கீழான விலக்கு :                        1 லட்சம்                              1.5 லட்சம்
வீட்டுக்கடன் மீதான வரி விலக்கு ;                 1.5 லட்சம்                           2 லட்சம்

நிதிநிலை அறிக்கையில் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது, என் கவனத்தை ஈர்த்த(ஆமா, பெரிய இவரு...  உண்மைய சொல்லு மத்த விஷயலாம் ஒனக்கு தெரியாது தானே..) சில புதிய (அ) பழைய திட்டங்கள்/துறைவாரியான நிதி ஒதுக்கீடுகள்/ புதிய அறிவிப்புகளை கீழே தந்துள்ளேன்.

* வளர்ச்சி 5.4 -லிருந்து 5.9 ஆக இருக்கும், நிதிப் பற்றாக்குறை 4.1 ஆக இருக்கும் இரு ஆண்டுகளில் 3 ஆக குறைக்கப்படும்.
* புதியதாக 5 IIT களும், 5 IIM களும் மேலும் 4 AIIMS மருத்துவமனைகளும் திறக்கப்பட உள்ளது
* அந்தமான் & நிக்கோபார் பகுதியில் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த 150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
*  பார்வைச் சவால் உடையோருக்கான புத்தகங்கள் அச்சிடும் பிரையல்(Brail) அச்சகங்கள் 15 புதியதாக மற்றும் இயங்கிவரும் 10 அச்சகங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.
* 200 கோடி ருபாய் செலவில் சர்தார் வல்லபாய் படேலுக்கு சிலை அமைத்தல். (குஜராத்காரர் அப்டின்றதனாலேயே காங்கிரஸ் இவருக்கு தர வேண்டிய மரியாதய கொடுக்கல, நான் ஆட்சிக்கு வந்தும் இவருக்கு பெரிய செல வப்பேனு மோடி எலக்சனப்ப சொன்னாருள்ள...)
* 2-ம் நிலை மற்றும் 3-ம் நிலை நகரங்களில் தனியாருடன் கூட்டு வைத்து(PPP - Private Public Partnership) விமான நிலையங்கள் அமைத்தல்.  (கொஞ்ச மாசத்துக்கு முன்னாடி கஸ்டமர் கம்மினு பாண்டிச்சேரிக்கு சர்வீஸ் இருந்த கடைசி ஏர்லைன்ஸ் நிறுவனமும் கடைய சாத்துனது ஞாபகம் இருக்கா?  டிரெயின் விலை ஏறுனதுனால இனி கொஞ்சம்பேரு ஃபிளைட் யூஸ் பண்ணா நல்ல சக்ஸஸ் ஆக சான்ஸ் இருக்குற ஒரு திட்டம்)
* காப்பீட்டுதுறை மற்றும் பாதுகாப்புத்துறையில் 26% லிருந்து 49% வரை அன்னிய நேரடி முதலீடு அனுமதிப்பு.  (அப்பாடா, 51%ஆக்கபோறாங்க அவ்ளோதான் நாம, வெளிநாட்டுக்காரன் கையில நம்மள அடகு வச்சிடுவாங்கனு பயமூர்த்திகிட்டே இருந்தாங்க நல்ல வேள..)
* புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல்(New and Renewable Energy) துறையில் முதலீடு 500 கோடி.  (தமிழ்நாடு இந்த லிஸ்ட்ல முக்கியமா சேர்க்கப்பட்டிருக்கு... நாம மின் மிகை மாநிலமா ஆயிடுவோமா... இல்ல சில பல வருஷங்களுக்குப் பிறகு 'அதுவே, பழகிடுமா' பாப்போம்.)
* ஆதி திராவிட நலன் மற்றும் முன்னேற்றத்திற்கு 50548 கோடி ஒதுக்கீடு.
* நீர்வழிப் போக்கு வரத்து (Jal Mark Vikas) மேம்பாட்டுக்கு 4200 கோடி.  (சென்னையில கூவத்துலயும் கால்வாய்லயும் மதராசப்பட்டினம் மாதிரி போட் போகும்னுலாம் எதிர்பாக்காதீங்க... )
* விவசா(யம்)யிகளுக்கான தொலைக்காட்சி சேவை 100 கோடி.
* புதிய விவசாயப் பல்கலைக்கழகங்கள் அமைக்க 200 கோடி.
* 4 AIIMS மருத்துவமனைகள் உருவாக்க 500 கோடி.
* மெட்ரோ இரயில் திட்டத்திற்கு 100 கோடி.
* கிராமப்புறங்களுக்கு இணையம் மற்றும் தொழில்நுட்பத்தை கொண்டு சேர்க்க 500 கோடி.
* பாதுகாப்புத்துறையில் பணியாற்றி ஒய்வு பெற்றவர்களுக்கு ஒரு-தகுதி-ஒரு-ஓய்வூதியம் (One rank - one pension) 1000 கோடி.  (இப்ப புரியுதுங்களா ஏன் கவர்மென்ட்டு பென்சன்லாம் இனிமே புச்சா வேலைக்கு(பாதுகாப்புத் துறை தவிர்த்து, இப்பொழுதும் இவர்களுக்கு மட்டும் ஓய்வூதியத்திலிருந்து, மானியம் வரை எல்லா சலுகையும் உண்டு) சேர்ரவங்களுக்கு கெடையாதுனு ஏன் சொல்லிச்சுனு? 1000 கோடி ரூவா... )
* பொதுச் சேம நல நிதியில் முதலீடு செய்யும் தொகைக்கான உச்சவரம்பு 1 லிருந்து 1.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

Sunday, June 8, 2014

தகவல் தொழில் நுட்ப உலகம் கடந்த வாரம் (01-06-14 முதல் 07-06-14 வரை)

ஐபிஎம் நிறுவனம் இணைய உலாவி மூலம் நடைபெறும் தவறுகளைத் தடுக்கும் ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி காப்புரிமை பெற்றுள்ளது.

கூகுளின் பிளேஸ்டோர் பேபால் ஆதரவு மற்றும் எளிமையாக்கப்பட்ட செயலி அனுமதிகளுடன் நடைமுறைக்கு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் 7 இன்ச் திரையுடன் கூடிய சாம்சங் கேலக்ஸி டபுள்யு(Galaxy W) என்கிற அதன் (பெரிய) நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.

மொத்தமுள்ள டிவிட்டர் பயனர்களில் 44% பேர் ஒரு முறைகூட எந்த டிவிட்டும் செய்ததில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன.

அலைபேசி விளையாட்டான டெம்பிள்ரன் இதுவரை 100கோடி முறை தரவிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அலைபேசி புகைப்பட திருத்தி செயலியான இன்ஸ்டாகிராம் மேலும் பல புதிய கருவிகளை அதன் செயலியில் சேர்த்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் ஸ்விஃப்ட்(swift) என்கிற பெயரில் புதிய கணினி மொழியை உருவாக்கியுள்ளது.

ஐஐடி-கான்பூர் தனது இரண்டாவது மீகணினி(Super Computer)யை அறிமுகப்படுத்தியுள்ளது.

விண்டோஸ் அலைபேசிகளுக்கான வாட்ஸ்ஆப் செயலி புதிய பிழை திருத்தங்கள் மற்றும் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் (25-5-14 முதல் 31-5-14)


வருங்காலத்தில் நுண்ணறிபேசிகளில் தரவிறக்கிப் பயன்படுத்தப்படும் வங்கி சம்பந்தப்பட்ட செயலிகள் கொந்தர்களால்(hacker) அதிகம் பாதிக்கப்படும் ஒன்றாக இருக்கும் துறை நிபுணர்கள் கருதுகிறார்கள்.

நுண்ணறிபேசி புகைப்படச் செயலியான இன்ஸ்டாகிராம் ஈரான் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனம் சேல்ஸ்ஃபோர்ஸ்1 என்கிற பெயரில் ஒரு புதிய நுண்ணறிபேசி செயலியை அறிமுகப்படுத்தவுள்ளது.

கூகுள் நிறுவனமானது ஸ்கைபாக்ஸ் இமேஜிங் என்கிற செயற்கைகோள் உருவாக்கம் மற்றும் தரவுமைய நிறுவுதல் துறையில் ஈடுபட்டுள்ள நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக அறியப்படுகிறது.

பிலிப்ஸ் நிறுவனம் இந்தியாவில் மீண்டும் தனது நுண்ணறி அலைபேசிகளை அறிமுகப்படுத்தி இந்தியச் சந்தையில் நுழையவுள்ளது.

ஃபிளிப்கார்ட் நிறுவனம் $210 மில்லியனை 4 முதலீட்டார்களிடம் பெற்றுள்ளது.

இந்தியாவில் மின்-வணிகம் (E-Commerce) வரும் வருடத்தில் சுமார் 50,000 பணிகளை உருவாக்கும் என கருதப்படுகிறது.

இன்போசிஸ் நிறுவனம் அதன் அடுத்த முதன்மைச் செயலதிகாரிப் பதவிக்கு சரியான நபரை தேர்ந்தெடுக்கவுள்ளது.  முக்கியமான விஷயம் என்னவென்றால் முதன்முறையாக இன்போசிஸ் நிறுவனர்கள் 7 பேர் அல்லாத ஒருவரை அப்பதவிக்கு தேர்ந்தெடுக்கவுள்ளனர்.

ஸ்னாப்டீல் நிறுவனம் தனது தரவுதளத்தை மாங்கோடிபி-க்கு மாற்றவுள்ளது.  இதன்முலம் தனது பயனர்களுக்கு வேகமான, மிகச் சிறப்பான பயன்பாட்டு அனுபவத்தைக் கொடுக்கவுள்ளதாகவும் கூறியுள்ளது.

சீன அரசு, தனது அரசு அலுவலகப் பயன்பாட்டிற்காக வாங்கும் கணினிகளில் இனி விண்டோஸை நிறுவப்போவதில்லை என அறிவித்துள்ளது.

இதுவரை கருத்தளவில் இருந்து வந்த கூகுள் (நுண்ணறி) தானியங்கு மகிழ்வுந்து வெளியீட்டுக்கு தயாராகிவிட்டது.  கூடுதல் தகவல் இந்த மகிழ்வுந்தில் திருப்புவதற்கான சுக்கானோ(steering), வேகம் முடுக்கியோ(accelerator) கிடையாது.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் தனது மேகக் கணிமை தொழில்நுட்பத்தினை பரவலாக்குவதற்காக சேல்ஸ்ஃபோர்ஸ் நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகச் செய்திகள் பதிவு