Monday, April 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(31-03-13 முதல் 06-04-13வரை)

  • ஃபேஸ்புக்(Facebook) ஆன்ட்ராய்டை அடிப்படையாகக் கொண்டு ஃபேஸ்புக்கின் அம்சங்கள் நிறைந்த ஒரு செல்பேசியை தயாரித்து வெளியிட திட்டமிட்டுள்ளதாக செய்திகள் கசிகின்றன.
  • இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப துறையைச் சார்ந்த இணையதளங்களே, இணையத் திருடர்களின் முக்கிய இலக்காக இருப்பதாக நச்சு நிரல் எதிர் மென்பொருள் தயாரிக்கும் நிறுவனமான சிமேன்டெக்(Symentec) கூறுகிறது.
  • ஏற்கனவே ஸ்கைப்(skype) போன்ற இணையச் சேவைகளை முடக்க முடிவெடுத்திருந்த சவூதிஅரேபியா(அவர்கள் கேட்ட கட்டுப்பாடுகளை, வரம்புகளை நிறைவேற்றாத பட்சத்தில்), தற்போது அரேபியாவில் மிகப்பிரபலமாக இருக்கும் டிவிட்டர் சேவையிலும் சில முக்கிய முடிவுகளாக, டிவிட்டர் பயனர்கள் தங்கள் அடையாளச் சான்றுகளை(இன்னாருடைய டிவிட்டர் கணக்கு இதுதான் என அவர்கள் அறிய) அரசுக்கு அளிக்கவேண்டும் எனக்கூறியுள்ளது.  இந்த முடிவு டிவிட்டர் அனானிகளைத்(anonymous) தவிர்ப்பதற்காக எடுக்கப்பட்டுள்ளது.
  • முட்டாள்கள் தினத்தன்று தேடுபொறி முன்னோடியான கூகுள் பல காமெடி கலாட்டாக்களை ஏப்ரல் 1-ம் தேதி அரங்கேற்றியது.  1. வாசனை அடிப்படையாகக் கொண்ட தேடல் வசதி(Google nose beta), 2. கூகிளின் வரைபடத்தை(map) அடிப்படையாகக் கொண்ட புதையல் வேட்டை 3. கூகுள் பைபர்(fiber) அதி வேக இணைய இணைப்பிற்கான இலவச வசதி என பட்டியல் நீளுகிறது.  பாவம், எத்தனை பேர் ஏமாந்தார்கள் என்று தெரியவில்லை.. ;)
  • ஒரு சாம்பிள் கூகுள் வாசனைத் தேடல்
  • கூகுள் கிளாஸ்(google glass) 8000 தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களால் பரிசோதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது.  இதில்  புகழ்பெற்ற முக்கியப் பிரமுகர்கள், தொழில்நுட்பம் சார்ந்து எழுதும் நபர்கள், தொழில்நுட்ப விமர்சகர்கள் என பலரும் அடக்கம்.
  • புதுதில்லி மற்றும் ஹவுராவுக்கு இடையேயான ராஜ்தானி எக்ஸ்பிரஸில் கம்பியில்லா(wi-fi) இணைய அணுக்கம் வழங்கப்பட்டுள்ளது.  மேலும், இந்த ஆண்டின் இறுதிக்குள் இவ்வசதி ராஜ்தானி, சதாப்தி, தூரந்தோ உள்ளிட்ட 50 இரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக இரயில்வே அமைச்சர் திரு. பவன் குமார் பன்சால் அறிவித்துள்ளார்.
  • சீனாவைச் சேர்ந்த நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனம் ஒன்று 5000 mAh திறனுடைய மின்கலத்துடன்(Battery) கூடிய நுண்ணறிபேசியை அறிமுகப்படுத்தவுள்ளது.  தற்போது மோட்டோரோலாவின் டிராய்டு ரேசர் அதிகபட்சமாக 3300 mAh திறனுடைய மின்கலத்தைக் கொண்டுள்ளது.  5000 என்கிற அளவு இதுவரை குளிகைக் கணினிகளில்தான்(Tablet) பயன்படுத்தப்பட்டு வந்தன.
  • திரு. ரதேஷ் பாலகிருஷ்ணன் ரெட்ஹேட்(Redhat) நிறுவனத்தின் மேகக்கணிமை குழுவிற்கு  தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.  இவர் இதற்கு முன் மைக்ரோசாப்டில்(Microsoft) பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
  • பயர்பாக்ஸ் உலாவி(Firefox browser) நிறுவனமா மோசில்லா(Mozilla)  15 வருடங்களை நிறைவுசெய்துள்ளது.  15 வருடங்களுக்கு முன் நெட்ஸ்கேப்(Netscape) நிறுவனம் தனது நெட்ஸ்கேப் உலாவியின் மூல நிரலை(Sourcecode) பொதுப்பயன்பாட்டிற்கு வெளியிட்டு மோசில்லா திட்டத்தை உருவாக்கியது.
  • ஆன்ட்ராய்டில் இயங்கும் நோட்புக்(Notebook pc) கணினிகளை இந்த வருட இறுதியில் கூகுள் வெளியிடும் எனத் தெரிகிறது.
  • சாம்சங் தனது கேலக்ஸி ஏஸ் 2-க்கு ஆன்ட்ராய்டு 4.1.2 புதுப்பித்தலை(update) வழங்கியுள்ளது.  எப்படி புதுப்பிப்பது?
    விளக்க காணொளி: நன்றி TechFusions Youtube channel
  • கட்டற்ற மற்றும் திறமூல(Free and open source) தரவுதள மேலாண்மை(Database management) மென்பொருள்களில் ஒன்றான போஸ்கிரெஸ்க்யூல்(PostgreSQL), தரவுகளுக்கு ஊறுவிளைவிக்கும் ஒரு முக்கிய வழு அதன் மென்பொருளில் உள்ளதைக் கண்டறிந்துள்ளது.  தற்போது அதை நிவர்த்தி செய்யும் தீர்வினையும் அதன் மூல நிரலில் சேர்த்துள்ளது.  இவ்வழு அதன் 9.0, 9.1, 9.2 ஆகிய பதிப்புகளில் உள்ளதெனவும், அதனால் தரவுதள மேலாளர்களை(DB Administrators) PostgreSQL 9.2.4, 9.1.9 அல்லது 9.0.13 பதிப்புகளைத் தரவிறக்கி பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.  கண்டறியப்பட்ட வழு வேறெந்த தீகொந்தர்களாளும்(hackers) பயன்படுத்தப்(exploit) பட்டதாகத் தகவலில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • வீடியோகான் நிறுவனம் தனது VT75C குளிகைக்கணினியை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் முக்கிய சிறப்பு இது மற்ற சிம் கார்டுடன் கூடியது, மேலும் சிம் கார்டின் வாயிலாக 2G வழியில் இணைய இணைப்பையும் உபயோகப்படுத்தலாம்.  விலை இந்திய ரூபாய் 6,500-ஆக இருக்கும் எனத்தெரிகிறது.
  • ஆன்ட்ராய்டுக்கான குரோம் உலாவியில் அதன் மேசைக்கணினிக்கான பதிப்பில் இருக்கும் கடவுச்சொல்(Password) ஒருங்கிணைப்பு(sync) வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
  • சாம்சங் நிறுவனமும், மோசில்லாவும் இணைந்து செர்வோ(Servo) என்கிற  நகர்பேசிகளில் பயன்படுத்தப்படும் ஒரு புதிய உலாவி எஞ்சினை(Engine) உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளன.
  • மோசில்லா தனது பயர்பாக்ஸ் உலாவியின் புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது(பதிப்பு எண் 20).  இப்புதிய பதிப்பில் பல புதிய அம்சங்களும்(features) முக்கியமாக ஒவ்வொரு டேபிலும்(Tab) கூட தனிப்பட்ட உலாவல்(Private browsing) மேற்கொள்ளும் படி மாற்றப்பட்டுள்ளது(முந்தைய பதிப்புகளில் மற்ற சாளரங்கள் மூடப்பட்டு தனிஉலாவலுக்காக ஒரு புதிய சாளரம் திறக்கப்படும், அதில் உள்ள அனைத்து டேப்களுமே தனிஉலாவல் முறையிலேயே இருக்கும்), சில முக்கிய வழு நிவர்த்திகளும்(bug fixes) செய்யப்பட்டுள்ளன.
  • சாம்சங்கும், மோசில்லாவும் இணைந்து ரஸ்ட்(Rust) என்கிற ஒரு புதிய நிரல் மொழியை உருவாக்கியுள்ளன.  இது சி++-க்கு மாற்றாக அமையலாம் எனக்கூறப்படுகிறது.

மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->  இங்கே சொடுக்கவும்


No comments:

Post a Comment