Tuesday, September 17, 2013

வல்லிக்கேணி பார்த்தனும், வழியோரப் புத்தகங்களும்... :)

திருவல்லிக்கேணியில் சில மாதங்கள் தங்கியிருந்த மேன்ஷனைவிட்டு வந்த பிறகு கிட்டத்தட்ட சில வருடங்கள் உருண்டோடிவிட்டன நான் திருவல்லிக்கேணிக்கும், பார்த்தசாரதி கோயிலுக்கும் சென்று.  நேற்று, என் பால்யத்திலிருந்து இன்றுவரை மாறாத அன்புடன் இருக்கும் (என் ரசனையோடும், எண்ணங்களோடும் பெருமளவில் ஒத்துப்போகும்) நண்பன் ஒருவன் தன் சொந்த வேலைக்காக சென்னை வந்திருந்தான்.  அவனுக்கு சில புத்தகம் வாங்க வேண்டி இருந்ததால்(சுஜாதாவின் கடவுளின் பள்ளத்தாக்கு மற்றும் சில போட்டித்தேர்வுக்கான புத்தகங்கள்) திருவல்லிக்கேணிக்குப் போகவேண்டும் என்று அழைத்தான்.  நீண்ட நாட்களுக்குப் பிறகு திருவல்லிக்கேணிக்கு நேற்று பயணப்பட்டேன். 

திருவல்லிக்கேணி என்றதுமே எனக்கு (பலருக்கும் கூட) நினைவுக்கு வருவது வழியோரப் புத்தக(ங்களும்) கடைகளும், வல்லிக்கேணிப் பார்த்தனும்தான்.  இரயில் நிலையத்திலிருந்து வெளியே வந்து கண்ணில் தெரிந்த முதல் கடையில் ஆரம்பித்து எல்லா கடைகளிலும் ஏறி இறங்கி விசாரித்துவிட்டோம் போட்டித்தேர்வுக்கான புத்தங்கள் கிடைத்துவிட்டன(ஆம் வழக்கமான 10% கழிவுடன்(discount), நீங்கள் வாங்கினாலும் மறக்காமல் கேளுங்கள்), ஆனால் கடைசிவரை சுஜாதா மட்டும் கிடைக்கவில்லை :(.  அடுத்த கட்ட நடவடிக்கையாக சாலையோர பழைய(சில சமயம் புதிய புத்தகங்களும் கூட கிடைக்கும்) புத்தகக் கடைகளை ஆராய ஆரம்பித்தோம்.  எங்கள் துரதிஷ்டம் படித்து முடித்த பல சுஜாதா புத்தங்கள் கிடைத்தன ஆனால் "கடவுளின் பள்ளத்தாக்கு" மட்டும் கிடைக்கவில்லை. 

நண்பனுக்கும் எனக்கும் ரசனை ஒற்றுமை உண்டென்று சொன்னேனில்லையா.. இருவருமே பார்த்தசாரதி கோயில் செல்லலாமென்று புறப்பட்டோம்.  நாங்கள் இருவரும் சேர்ந்தோ/தனித்தனியாகவோ கோயிலுக்கு செல்வதற்கு நிறைய காரணங்கள் உண்டென்றாலும் மிக முக்கியமாக மூன்று காரணங்கள்
1. சிற்ப(ங்கள்)க்கலை
2. சராசரியான இறைபக்தி (மூட நம்பிக்கைகள் எல்லாம் கிடையாது)
3. கலாச்சாரத்தின் மேலிருக்கும் விருப்பம்/நம்பிக்கை so & so (இன்ன பிற முக்கிய காரணங்களும் உண்டு ;-))

திவ்ய தரிசனம் என்பார்களே அது கிடைத்தது.  ஆம், நாங்கள் எந்த வித திட்டமும் இல்லாமல் தான் போனோம், நேற்று திருவோணம் என்பதாலும் பெருமாளுக்கு திருவோண நட்சத்திரம் விசேஷம்  (சிவனுக்கு திருவாதிரை நட்சத்திரம் போல) என்பதாலும் ஹோமங்களும், பிரபந்த படித்தலும் நடந்தன.  அலங்காரப் பிரியரான திருமாலை அதுவும் பார்த்தசாரதிப்பெருமாளை அருகில் நின்று பார்க்கும்போது அவ்வளவு அற்புதமான ஒரு தேஜசுடன் பிரும்மாண்டமாக இருக்கிறார்.   எவ்வித தள்ளு முள்ளுகள் இல்லாமலும் பொறுமையாக பெருமாளை தரிசிப்பது என்பதென்பதே மிக அழகானதொரு அனுபவம். 

பெரும்பாலும் கோயிலுக்கு நண்பர்களோடு போனால் கோயில் பிரசாதக் கடையை ஒரு ரவுண்டு வருவோமில்லையா, அதனால் வழக்கம்போல காரதட்டை மற்றும் புளியோதரை வாங்கி சாப்பிட்டுவிட்டு இரயிலேறி கிளம்பினோம். 


குறிப்பு: திருமாலின் 108 திவ்ய தேசக்கோயில்களில் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலும் ஒன்று.   சென்னை மற்றும் சென்னையின் சுற்றுப்புறத்திலிருக்கும் மற்ற திவ்யதேச பெருமாள் கோயில்களாவன பல்லாவரத்திற்கு அருகில் திருநீர்மலையிலுள்ள நீர்வண்ணப்பெருமாள் கோயில், கிழக்குக் கடற்கரை சாலையில் திருவிடந்தையில் உள்ள நித்ய கல்யாணப் பெருமாள் கோயில், மாமல்லபுரத்திலுள்ள தரை கிடந்த பெருமாள்(ஸ்தல சயனப் பெருமாள் கோயில்) ஆகியனவாகும்.

No comments:

Post a Comment