Sunday, May 25, 2014

தகவல் தொழில்நுட்ப உலகம் கடந்தவாரம் (18-5-14 முதல் 24-5-14 வரை)


மோட்டோரோலா நிறுவனம் மோட்டோ-ஈ  (Moto-E) என்ற பெயரில் ஒரு புதிய பட்ஜெட் ஃபோனை அறிமுகப்படுத்தியுள்ளது. 

கூகுள் நிறுவனம், ஆப்பிள் நிறுவனத்தைப் பின்னுக்குத் தள்ளி முதலிடத்தை பிடித்துள்ளதாக ஒரு கருத்துகணிப்பு ஒன்று தெரிவித்துள்ளது.

வரும் 2015-ம் ஆண்டில் லெனோவா நிறுவனமும் அணிகணினி தொழில்நுட்பத்தில் நுழையவுள்ளதாக தெரிகிறது.

இணையதளம் மூலம் பொருட்களை விற்பனை செய்யும் ஃபிளிப்கார்ட் நிறுவனம், மியன்தாரா(myntra) என்கிற மற்றொரு நிறுவனத்தை கையகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது.

ஈ-பே (ebay) நிறுவனத்தின் தரவுதளம் கொந்தர்களால் சமரசம் (compromised) செயப்பட்டதால் இந்நிறுவனம் தனது பயனர்களை தங்கள் கடவுச்சொற்களை மாற்றுமாறு கூறியுள்ளது.

முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான ஹெச்பி(hp) ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தகவல்களை தெரிவிக்கின்றன.

கூகுள் நிறுவனம் முப்பரிமாண புகைப்படங்களை எடுக்கவல்ல பலகை/சிலேட்டு/குளிகை (Tablet) கணினிகளை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முந்தைய தகவல் தொழில்நுட்ப உலகம் பதிவு

Monday, May 19, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தல்

நடந்து முடிந்த 16-வது நாடாளுமன்றத் தேர்தல் பலருக்கும் பலவிதமான எண்ணங்களை உருவாக்கியிருக்கலாம், நானும் விதிவிலக்கல்லவே.. என் மனதில் சிதறலாகத் தோன்றிய எண்ணங்களை சற்றே சரி செய்து இந்தப் பதிவில் எழுதியிருக்கிறேன், நிச்சயாமக ஒரு கோர்வையாக இருக்காது.  எண்ணங்கள் பெரும்பாலும் கோர்வையாக இருக்காது அல்லவா? அதனால அட்ஜஸ்ட் பண்ணி படிச்சிக்கோங்க... (ஆமா, எத்தன பேரு இந்த பிளாக்க படிக்கறாங்கனுலாம் கேக்கக்கூடாது சரியா...)

இந்தியாவில் மொத்தம் 543 பாராளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.  இதில் ஒரு கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டுமானால் அதற்கு (மொத்த தொகுதிகள்)/2 + 1 இடங்களைப் பெறவேண்டும்.  1984-ல் இராஜீவ் காந்தியின் ஆட்சிக்குப்பிறகு இந்தியாவில் இன்றுவரை தனிப்பெரும்பான்மையுடன் எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்கவில்லை.  (1984-ல் இந்திராகாந்தியின் படுகொலையின் அனுதாப அலையும், இராஜீவ் காந்திக்கு இயல்பாகவே அமைந்திருந்த மக்கள் வசீகர தன்மையும் இணைந்து 414 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.)  இந்த முறை 30 வருடங்களுக்குப் பிறகு அதுபோன்றதொரு தனிப்பெரும்பான்மையுடன் முதல் முறையாக காங்கிரஸ் அல்லாத ஒரு கட்சி (பாஜக) மத்தியில் ஆட்சியமைக்கவுள்ளது.  இதற்கு எந்த அனுதாப அலையும் காரணம் இல்லையென்றாலும், மக்களுக்கு காங்கிரஸின் மீதிருந்த கோபமும், நரேந்திர மோடியின் மக்கள் வசீகரத் தன்மையும் இணைந்து அதை நிறைவேற்றியுள்ளது.  பாஜக சார்பில் அத்வானி பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்தால் இதுபோன்றதொரு வெற்றி சாத்தியமா என்பது கூட கேள்விக்குறிதான். 

  நரேந்திர மோடியையும் சாதாரணமாக சொல்வதற்கில்லை, இந்த வெற்றிக்காக உண்மையில் மிகவும் பாடுபட்டிருக்கிறார்.  (மோடி எப்படிப்பட்ட மனிதர், மதவாதியா, என்பற்குள் எல்லாம் நான் வரவில்லை.)  இதுவரை நீங்களும், நானும் அறிந்தவரையில் இந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் சுற்றிச் சுழன்று அதிகமாகப் பிரச்சாரம் செய்தவர் மோடியே என்று செய்தித்தாள்களும், தொலைக்காட்சிகளும் சான்று தருகின்றன.  தமிழ்நாட்டில் பெரிய வாக்கு வங்கி இல்லாத நிலையிலும் கூட பல முறை பிரச்சாரத்திற்காக மோடி வந்துள்ளார் என்றால் பாஜக-வின் வாக்குவங்கிகளாக, கோட்டைகளாக இருக்கும் மற்ற மாநிலங்களில் எத்தனைமுறை சென்றிருப்பார் என்று நீங்களே எண்ணிக் கொள்ளுங்கள்.

சரி நாடுமுழுவதுமான தேர்தல் நிலவரத்திற்கு வருவோம்:
இந்தியாவின் பிரதமரை முடிவுசெய்யும் மாநிலங்கள் என்று 6 மாநிலங்களை சொல்லலாம் [அடைப்புக்குள் (மாநிலத்தின் மொத்த நாடாளுமன்றதொகுதிகள் - பாஜக வெற்றிபெற்ற தொகுதிகள்)] அவை உத்திரப்பிரதேசம்(80-71), மாகாராஷ்டிரா(48-23), ஆந்திரப்பிரதேசம்(42-4), மேற்குவங்காளம்(42-2), பீகார்(40-22), தமிழ்நாடு(39-1) மொத்தம்(291-123).  ஆம், நீங்கள் கிட்டத்தட்ட இந்த 6 மாநிலங்களிலிருந்து மட்டுமே பாஜக அதன் மொத்த இடங்களில் கிட்டத்தட்ட 40% இடங்களைப் பெற்றுள்ளது. 

பாஜக கோவா(2), இமாச்சலப் பிரதேசம்(4), இராஜஸ்தான்(25), குஜராத்(26), உத்ராகண்ட்(5), சண்டிகர்(1), தாத்ரா ஹவேலி(1), டாமன் டையூ(1), டெல்லி(7), அந்தமான் நிக்கோபார்(1)  ஆகிய மாநிலங்களில் மொத்த இடங்களையும் கைப்பற்றியுள்ளது.  கேரளாவில் மட்டும் இன்றுவரை(ஆம், இன்றுவரை கேரளாவிலுள்ள எந்த நாடளுமன்றத் தொகுதியிலும், எப்போது நடந்த தேர்தலிலும்.  இந்தமுறை தொடக்கத்தில் திருவனந்தபுரத்தில் பாஜக வேட்பாளருக்கும் சசிதரூருக்கும் ஆரம்பத்தில் இருந்து இழுபறி இருந்தாலும் கடைசியில் சசிதரூர் வென்றுவிட்டார்) பாஜக தனது கணக்கைத் தொடங்கவில்லை.

டெல்லிக்கு நடந்த மாநிலத்தேர்தலில் சிறப்பாக செயல்பட்டு நல்ல எண்ணிக்கையில் இடங்களைப்பெற்ற பாஜக அதை அப்படியே முன்னேற்றி டெல்லியின் மொத்த 7 இடங்களையும் கைப்பற்றி ஆம் ஆத்மி கட்சிக்கு அதிர்ச்சி வைத்தியம் அளித்தது.  மொத்தம் 4 இடங்களைப் பெற்றுள்ள ஆம் ஆத்மி கட்சி 4-ம் பஞ்சாபிலிருந்தே பெற்றுள்ளது, ஆச்சர்யப்படும் வகையில் டெல்லியில் மாநில ஆட்சியைப் பிடிக்கும் வரை சென்ற ஆம் ஆத்மி அங்கு ஒரு இடத்தைக்கூட பிடிக்கவில்லை.

நம்பினால் நம்புங்கள் இந்தியாவிலேயே தற்போது 3-வது பெரிய கட்சி(எம்பி-களின் எண்ணிக்கை அடிப்படையில்) அதிமுகதான்.  ஆம்,
பாஜக - 283 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
காங் - 44 (கூட்டணி கட்சிகளின் இடங்களில்லாமல்)
அதிமுக - 37
திரிணமுல் காங். - 34

இத்தனைக்கும் அதிமுக தேசிய கட்சி இல்லை ஒரு மாநிலக் கட்சிதான்.  (இந்தியாவின் தேசிய கட்சிகளாக அங்கீகாரம் பெற்றவை காங்கிரஸ், பாஜக, தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை மட்டுமே).  தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ் இந்தமுறை ஒரு இடத்தில் கூட வெற்றிபெறவில்லை.  ஒன்று மட்டும் தெளிவு என்னதான் நாடு முழுவதும் மோடி அலையடித்தாலும்  தமிழ்நாடு, கேரளா போன்ற மாநிலங்களை அது ஒரு சிறிதும் பாதிக்கவில்லை.  பாஜக தென் மாநிலங்களில் தனது இருப்பை இன்னும் நிலைபடுத்திக்கொள்ள வேண்டும்.

தேசிய அளவில் முக்கியத் தலைவர்களான ஜஸ்வந்த்சிங், கபில்சிபல், அருண் ஜேட்லி, அரவிந்த் கேஜ்ரிவால் போன்றோரின் தோல்வி பலருக்கும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

தமிழ்நாடு:
பெரும்பாலான கருத்துக் கணிப்புகளையெல்லாம் தவிடுபொடியாக்கி அதிமுக மொத்தமுள்ள 39 இடங்களில் 37 கைப்பற்றி விஸ்வரூப வெற்றி பெற்றுள்ளது, அதுவும் கூட்டணி ஏதும் இன்றி தனியாகவே.  பெரும்பாலான தொகுதிகளில் திமுகதான் இரண்டாவது இடம் அதுவும் முதல் இடத்தைப்போல 3/4 பங்கு வாக்குகளைப் பெற்றுள்ளது.  இருந்தாலும் எந்தவொரு தொகுதியிலுமே வெற்றி பெறாமல் பூச்சியமாகிப்போனது துரதிஷ்டம் தான்.  தமிழ்நாட்டில் ஆம் ஆத்மி கட்சி ஒரு சிறு சலனத்தையாவது ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தேன் கூடங்குளம் உதயகுமார் கூட ஒன்றும் செய்யமுடியவில்லையே வருத்தமாகத்தான் இருக்கிறது. பதிவான மொத்த வாக்குகளில் 1-4% வாக்குகளையாவது பெறுவார்கள் என்று எதிர்பார்த்தேன் ஆனால் 0.5% உடன் திருப்தி அடைந்துவிட்டது.  பராவாயில்லை கட்சியின் முதல் நாடாளுமன்றத்தேர்தல் தானே. 

கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே திமுக-வையும் விஞ்சி தமிழ்நாட்டில் எதிர்கட்சி என்கிற நிலை வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாக பயன்படுத்தவில்லை.  போதாத குறைக்கு 6 கட்சிகளுடன் பாஜக போன்ற தேசியகட்சிகளுடன் கூட்டணியில் இருந்தாலும் அதன் வாக்கு வங்கி பாதியாக சரிந்துவிட்டது.

நானறிந்த வரையில் ராமசுப்பு  நல்ல மனிதர்.  சில மாதங்களுக்கு முன்பு கூட செய்திதாள்களில் எல்லாம் பாராளுமன்றத்தில் மிகச் சிறப்பாக செயல்பட்டோருக்கு விருது வழங்கப்பட்டதைக் குறித்தான செய்திகள் வந்திருந்தன.  அதில் ராமசுப்பு அவர்கள் 1000 மேற்பட்ட கேள்விகள் கேட்டதற்காகவும் பாராளுமன்ற வருகை அதிகம் இருந்ததற்காகவும் விருதுகூட வாங்கினார் என்று குறிப்பிட்டிருந்தது..  ஆனால் இதே நெல்லையில் 2009 தேர்தலில் 2,74,000+ வாக்குகள் பெற்றவருக்கு இந்தத் தேர்தலில்   நாம் தந்திருப்பது வெறும் 64,000+ வாக்குகள், 4ல் ஒரு பங்கு கூட கிடையாது.  என்ன சொல்வது?
என்று நம் மக்கள் தங்கள் கட்சி அடையாளலங்களைத் தாண்டி நல்ல மனிதரை ஆதரிக்கத் தொடங்குகிறார்களோ அன்று தான் விடியும். 
நோட்டா:
இந்தமுறை தமிழகத்தின் பல தொகுதிகளிலும் 3-வது இடத்தைப் நோட்டா பிடத்துவிட்டது.   நீலகிரியில் நோட்டா மட்டும் 40,000+ வாக்குகளை அள்ளிக் குவித்துள்ளது.  மக்களிடம் நல்ல விழிப்புணர்வு வந்தவிட்டதைத்தான் இது காட்டுகிறது. ஆனாலும் நோட்டா முதல் இடத்தைப் பிடித்தாலும் இரண்டாவதாக வரும் வேட்பாளர் நாடளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப் படுவார் என்கிற தேர்தல் ஆணையத்தின் முடிவுதான் குழப்பமாகவே இருக்கிறது.  பாதிபேர் இதனாலே "யாரையும் புடிக்கிலனு நோட்டாவுல போட்டு என்னா புண்ணியம், எப்படியும் திரும்பவும் ஒரு ஃப்ராடுதான் வருவான்னா நான் வோட்டு போடாமலே இருப்பனே" என்கிறார்கள் அவர்கள் சொல்வதும் சரியாகத்தான் படுகிறது.

30 வருடங்களுக்கு பிறகு எதிர்கட்சி இல்லாத( = சக்திவாய்ந்த - ஒரு தனியான) ஒரு பாராளுமன்ற அமைச்சரவை இதுதான்.  ஆளும் கட்சி நினைத்ததை செய்யலாம், அவர்கள் நல்லதே நினைக்கவேண்டும் என்பதே நம் பிராரத்தனை. 

எண்ணிய முடிதல் வேண்டும்; நல்லவே எண்ணல் வேண்டும் - பாரதி

Monday, April 28, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-04-14 முதல் 26-04-14வரை)

ஆப்பிளின் சிரி(siri), கூகுளின் கூகுள் நவ்(Google Now) போன்ற பேச்சை கேட்டு இயங்கும் செயலிகளைத் தொடர்ந்து தற்போது வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் அலைபேசிகளுக்காக கோர்டானா(Cortana) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




டெக் மஹிந்திரா நிறுவனம் பெருந்தகவல்(Big Data) துவக்க நிறுவனமான(Start-up) ஃபிக்ஸ்டீரிம் நெட்வொர்க்ஸ்(FixStream Networks) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஃஎச்டிசி(HTC) சென்னையில் அமைந்திருக்கும் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கவிருப்பதாகத் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் கேப்ட்சா(CAPTCHA) [ ஒரு இணையதளத்தில் பயனர் கணக்கை உருவாக்கும் போதோ அதுபோன்ற மற்ற இடங்களிலோ மனிதர்களையும், கணினி பாட்(Bot)களையும் வித்தியாசப்படுத்தி Bot-களிலின் தாக்குதலில் இருந்து இணையதளத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு நுட்பம்]  புதிர்களை விடுவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் இது 99% துல்லியத்தன்மை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோட்டரோலாவின் இந்தியக் கிளைக்கு அமித் போனியை தலைவராக அறிவித்துள்ளது மோட்டரோலா நிறுவனம்.

மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் அமெரிக்காவைச் சேர்ந்த காணொளி/நிகழ்பட(video) நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் உலகின் முதல் 10 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவை தரும் நிறுவனங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது.

வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் 8 இயங்குதளத்திற்கு அதன் XP இயங்குதளத்தின் start menu போன்ற ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனாவை சேர்ந்த நுண்ணறிபேசி நிறுவனம் க்ஸியோமி(Xiaomi) என்கிற தனது அலைபேசியை இவ்வாண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் டிராய்(TRAI - Telecom Regulatory Authority of India) அலைபேசிகளில் இணைய இணைப்பின் குறைந்தபட்ச வேகத்தின் அளவை நிர்ணயிக்கவுள்ளது.  இது நிர்ணயிக்கப்பட்டபின் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரங்களில் ஒரு வேகத்தையும் உண்மையில் ஒரு வேகத்தையும் தந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது.

ஐபிஎம் நிறுவனம் 50 மடங்கு வேகமான வழங்கி கணினிகளை உருவாக்கியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் வகையிலான மகிழ்வுந்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Form-16-ம் பள்ளி நண்பனும்..

பல வருடங் கழித்து பள்ளி நண்பன்  ஒருவனை வங்கியொன்றில் சந்தித்தேன்.  கையில் Form-16-ன் நகலொன்றோடு நின்றிருந்தான்.  வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது தொடர்பாக விசாரிக்க வந்திருப்பதாக சொன்னவனிடம்,  "என்னடா Form-16-ல் Gross income-ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.  அதுவா, என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவன், ஒரு நொடி நிறுத்தி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "அது ஒரு கணக்கு உனக்குப் புரியாது..." என்றான்.  (ஐன்ஸ்டீன், "ஒரு விஷயத்தை உன்னால் மிக எளிமையாக மற்றோர்க்கு பரியும் வகையில் சொல்ல முடியவில்லையென்றால், உனக்கு அந்த விஷயம் சரியாக தெரியவில்லை என்று பொருள்" என்பார்)

எனக்கு சுர்ர்ரென்றது, உடனே அவனுக்கு வருமான வரி குறித்தான எல்லா விஷயங்கைளையும், கணக்கிடும் விதங்களையும் விளக்கி, இதெல்லாம் எனக்குப் புரியாதுதான் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றிருந்தது.  ஆனால், என் வழமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன்.  ஒரு மூன்றாம் மனிதன்தான் அவனுக்கு தெரியாத மற்றொரு 3-ம் மனிதனை உருவம் பார்த்து எடைபோடுகிறான் என்றால், உருண்டு புரண்டு ஒன்றாய் அடி வாங்கி கள்ளமின்றி விளையாண்ட 2 நண்பர்களும் கூட நீண்டதொரு இடைவெளியில் பிரிதொரு நாளில் சந்திக்கையில் அடுத்தவனின் உடை, உருவம் பார்த்தேதான் எடை போடுவார்களா...? (நமக்கும் டிரஸ்சிங் சென்ஸ்க்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும்...)

ஆடம்பரமில்லா, மிக எளிமையான காந்தியும், காமராசரும் கூட இவர்களுக்கு அற்பங்கள் தாம்.  10 சுமோ, 15 xylo-வோடு, 400-600 கிராம் தங்க நகைகளோடு வரும் மனிதர்கள்தாம் இவர்களுக்குப் மாமனிதர்கள். 

கொஞ்சமாகிலும் படித்த, வருமான வரியென்றால் என்ன என்று கொஞ்சமேயறிந்த எனக்கே (என்ன பெரிய எனக்கே..?) இந்த வகையான பதில்தான் கிடைக்கிறதென்றால், நான் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் படித்து, 10-வதோடு, 12 வதோடோ படிப்பை நிறுத்திவிட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்கும் ராஜ்குமாரையோ, ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அருணையோ, பெட்டிகடை நடத்தும் சரவணனையோ என்ன மாதிரி இவர்கள் நடத்துவார்கள்?

Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.