Monday, April 28, 2014

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(20-04-14 முதல் 26-04-14வரை)

ஆப்பிளின் சிரி(siri), கூகுளின் கூகுள் நவ்(Google Now) போன்ற பேச்சை கேட்டு இயங்கும் செயலிகளைத் தொடர்ந்து தற்போது வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் அலைபேசிகளுக்காக கோர்டானா(Cortana) எனும் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.




டெக் மஹிந்திரா நிறுவனம் பெருந்தகவல்(Big Data) துவக்க நிறுவனமான(Start-up) ஃபிக்ஸ்டீரிம் நெட்வொர்க்ஸ்(FixStream Networks) எனும் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது.

அலைபேசி தயாரிப்பு நிறுவனமான ஃஎச்டிசி(HTC) சென்னையில் அமைந்திருக்கும் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்கவிருப்பதாகத் தெரிகிறது.

கூகுள் நிறுவனம் கேப்ட்சா(CAPTCHA) [ ஒரு இணையதளத்தில் பயனர் கணக்கை உருவாக்கும் போதோ அதுபோன்ற மற்ற இடங்களிலோ மனிதர்களையும், கணினி பாட்(Bot)களையும் வித்தியாசப்படுத்தி Bot-களிலின் தாக்குதலில் இருந்து இணையதளத்தைப் பாதுகாக்க உதவும் ஒரு நுட்பம்]  புதிர்களை விடுவிக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளது.  மேலும் இது 99% துல்லியத்தன்மை கொண்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

மோட்டரோலாவின் இந்தியக் கிளைக்கு அமித் போனியை தலைவராக அறிவித்துள்ளது மோட்டரோலா நிறுவனம்.

மென்பொருள் நிறுவனமான காக்னிசென்ட் அமெரிக்காவைச் சேர்ந்த காணொளி/நிகழ்பட(video) நிறுவனம் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் உலகின் முதல் 10 மென்பொருள், தகவல் தொழில்நுட்ப சேவை தரும் நிறுவனங்களில் ஒன்றாக முன்னேறியுள்ளது.

வின்டோஸ் நிறுவனம் தனது வின்டோஸ் 8 இயங்குதளத்திற்கு அதன் XP இயங்குதளத்தின் start menu போன்ற ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தவுள்ளது.

சீனாவை சேர்ந்த நுண்ணறிபேசி நிறுவனம் க்ஸியோமி(Xiaomi) என்கிற தனது அலைபேசியை இவ்வாண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

இந்தியாவின் டிராய்(TRAI - Telecom Regulatory Authority of India) அலைபேசிகளில் இணைய இணைப்பின் குறைந்தபட்ச வேகத்தின் அளவை நிர்ணயிக்கவுள்ளது.  இது நிர்ணயிக்கப்பட்டபின் அலைபேசி சேவை வழங்கும் நிறுவனங்கள் விளம்பரங்களில் ஒரு வேகத்தையும் உண்மையில் ஒரு வேகத்தையும் தந்து வாடிக்கையாளர்களை ஏமாற்ற முடியாது.

ஐபிஎம் நிறுவனம் 50 மடங்கு வேகமான வழங்கி கணினிகளை உருவாக்கியுள்ளது.

நிஸ்ஸான் நிறுவனம் தன்னைத்தானே சுத்தம் செய்துகொள்ளும் வகையிலான மகிழ்வுந்தை அறிமுகப்படுத்தவுள்ளது.

Form-16-ம் பள்ளி நண்பனும்..

பல வருடங் கழித்து பள்ளி நண்பன்  ஒருவனை வங்கியொன்றில் சந்தித்தேன்.  கையில் Form-16-ன் நகலொன்றோடு நின்றிருந்தான்.  வங்கியில் வீட்டுக்கடன் பெறுவது தொடர்பாக விசாரிக்க வந்திருப்பதாக சொன்னவனிடம்,  "என்னடா Form-16-ல் Gross income-ல் இப்படி குறிப்பிட்டிருக்கிறார்கள்?" என்று கேட்டேன்.  அதுவா, என விளக்கம் சொல்ல ஆரம்பித்தவன், ஒரு நொடி நிறுத்தி என்னை மேலிருந்து கீழ்வரை பார்த்தான். "அது ஒரு கணக்கு உனக்குப் புரியாது..." என்றான்.  (ஐன்ஸ்டீன், "ஒரு விஷயத்தை உன்னால் மிக எளிமையாக மற்றோர்க்கு பரியும் வகையில் சொல்ல முடியவில்லையென்றால், உனக்கு அந்த விஷயம் சரியாக தெரியவில்லை என்று பொருள்" என்பார்)

எனக்கு சுர்ர்ரென்றது, உடனே அவனுக்கு வருமான வரி குறித்தான எல்லா விஷயங்கைளையும், கணக்கிடும் விதங்களையும் விளக்கி, இதெல்லாம் எனக்குப் புரியாதுதான் என்று சொல்லிவிட்டு வரவேண்டும் என்றிருந்தது.  ஆனால், என் வழமையான சிரிப்பை உதிர்த்துவிட்டு வந்தேன்.  ஒரு மூன்றாம் மனிதன்தான் அவனுக்கு தெரியாத மற்றொரு 3-ம் மனிதனை உருவம் பார்த்து எடைபோடுகிறான் என்றால், உருண்டு புரண்டு ஒன்றாய் அடி வாங்கி கள்ளமின்றி விளையாண்ட 2 நண்பர்களும் கூட நீண்டதொரு இடைவெளியில் பிரிதொரு நாளில் சந்திக்கையில் அடுத்தவனின் உடை, உருவம் பார்த்தேதான் எடை போடுவார்களா...? (நமக்கும் டிரஸ்சிங் சென்ஸ்க்கும் கொஞ்சம் தூரம் தான் இருந்தாலும்...)

ஆடம்பரமில்லா, மிக எளிமையான காந்தியும், காமராசரும் கூட இவர்களுக்கு அற்பங்கள் தாம்.  10 சுமோ, 15 xylo-வோடு, 400-600 கிராம் தங்க நகைகளோடு வரும் மனிதர்கள்தாம் இவர்களுக்குப் மாமனிதர்கள். 

கொஞ்சமாகிலும் படித்த, வருமான வரியென்றால் என்ன என்று கொஞ்சமேயறிந்த எனக்கே (என்ன பெரிய எனக்கே..?) இந்த வகையான பதில்தான் கிடைக்கிறதென்றால், நான் படித்த அதே பள்ளியில், அதே வகுப்பில் படித்து, 10-வதோடு, 12 வதோடோ படிப்பை நிறுத்திவிட்டு தள்ளுவண்டியில் சாப்பாடு விற்கும் ராஜ்குமாரையோ, ஸ்டுடியோவில் வேலை பார்க்கும் அருணையோ, பெட்டிகடை நடத்தும் சரவணனையோ என்ன மாதிரி இவர்கள் நடத்துவார்கள்?

Thursday, April 24, 2014

16-வது நாடாளுமன்றத் தேர்தலில் கடலூர் நாடாளுமன்றத் தொகுதி யாருக்கு?


கடலூர் மாவட்டத்தின் அரசியலில் எனக்கு விபரம் தெரிந்த நாளில் இருந்து பாமக-வும் திமுக-வும் தான் பெரும்பாலும் ஆதிக்கம் செலுத்திவந்துள்ளது. இதற்கு பாமக கட்சியை ஆதரிக்கும் வன்னியர் இப்பகுதிகளில் அதிகம் இருப்பதுதான் முக்கிய காரணம்.  கடலூர் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் பாமக, திமுக கோட்டை என்று கூட சொல்லலாம்.  சட்டமன்ற தொகுதிகளில் விருத்தாசலம், பண்ருட்டி, கடலூர் போன்ற பலவும் அவர்கள் கையிலேதான் இருந்து வந்தன.  இந்த நிலை தேமுதிக-வின் கன்னித் தேர்தலில் விருத்தாசலம் சட்டமன்றத் தொகுதியில் அதன் கட்சித்தலைவர் விஜயகாந்தின் வெற்றியின் மூலம் மாறியது.  அதன் பிறகான சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-வுடன் கூட்டணி அமைத்து களம் கண்ட தேமுதிக-வின் எழுச்சி நாம் அறிந்ததே.  விருத்தாசலம் தொகுதியை தக்கவைத்துக் கொண்ட தேமுதிக, பண்ருட்டியையும் கைப்பற்றியது.  சரி பாராளுமன்ற தேர்தலிலும் இது தொடருமா என்றால், மிகச் சரியாக ஆம்/இல்லை என்று சொல்லமுடியாது.

சட்ட மன்றத்தேர்தலில் அதிமுக கூட்டணியுடன் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்கட்சி அந்தஸ்து வரை உயர்ந்த தேமுதிக அதை சரியாகப் பயன்படுத்தியதாக தெரியவில்லை.  காலம் மாறியதோடு காட்சியும் மாறி கூட்டணி உடைந்து கந்தறகோலமாகி, பாராளுமன்றத்தேர்தலில் அதிமுக தனியாகவும், தேமுதிக சீட் பேரத்தில் கடைசியாக பாஜக கூட்டணியில் சேர்ந்து இந்த பாராளுமன்ற தேர்தலில் களம் காணுகிறது.  உண்மையில் பாஜக-வுக்கோ அதன் கூட்டணி கட்சிகளுக்கோ கடலூர் மாவட்டத்தில்(கடலூர், சிதம்பரம் பாராளுமன்றத் தொகுதிகள்) பெரிய பெரும்பான்மையோ, வாக்கு வங்கியோ கிடையாது(பாமக, தேமுதிக நீங்களாக).  ஆனால், காலம் செய்த கோலத்தில் எந்த கட்சியின் கோட்டையை நொறுக்கி தன்வசம் ஆக்கியதோ அந்த பாமக-வும் பாஜக கூட்டணியில் இருப்பதால் தேமுதிக-வின் கடலூர் தொகுதி வெற்றி வாய்ப்பு சற்றே கூடியுள்ளது என கொள்ளலாம்.  ஆனால், கள விபரங்களைப் பார்க்கும்போது தேமுதிக-வும் பாமக-வும் தங்களுக்குள் பரஸ்பரம் இணைந்து செயல்படுவதாக தெரியவில்லை.  இது கண்டிப்பாக ஒரு பின்னடைவு தான்.

எனக்குப் பரந்துபட்ட அரசியல் ஞானமோ, நேரடியாக அரசியலில் உள்ள கட்சி நண்பர்களோ இல்லை.  ஆனால், நாட்டு நலனில் அக்கறையுள்ள, கட்சி சார்பில்லாத நண்பர்கள் இருக்கிறார்கள்.  மேலே குறிப்பிட்ட இந்த நண்பர்களிடம் விவாதித்து மற்றும் என் வரையில் அறிந்த கடலூர் பாராளுமன்றத் தொகுதி கள நிலவரங்களாக நான் அறிந்துகொண்ட சில விஷயங்களாவன

1.  அதிமுக, தேமுதிக இரண்டிற்கும் வெற்றி வாய்ப்பு உள்ளது.  யார் வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெருமளவில் இருக்காது.

2.  மோடி அலை கடலூர் மாவட்டத்தில் பெரிதாக பாதிக்கவில்லை, ஆனால் காங்கிரஸ் மேல் பெரும்பாலானோர்க்கு பெரிய வெறுப்பு உள்ளது.

3.
 அ) 22-லிருந்து 30 வயதுவரை இருக்கும் வாக்காளர்களில் பெரும்பான்மையோர்(முக்கியமாக படித்த இளைஞ(ஞிகள்)ர்கள்) மாற்றத்தை விரும்புகிறார்கள்.  அவர்கள்தான் பாஜக கூட்டணி, ஆம் ஆத்மி கட்சி போன்றவற்றிற்கு ஒரு வாய்ப்புதரலாம் என நினைக்கிறார்கள். இவர்கள் தங்களை எந்தக் கட்சியோடும் அடையாளப்படுத்திக்கொள்ள விரும்பவில்லை.  

 ஆ) முதல் முதலாக வாக்களிக்கும் 18-21 வயதுவரை இருப்பவர்கள் தங்கள் நண்பர்கள், வீட்டுப் பெரியோர் சொல்லும் கட்சிகளுக்கே வாக்களிக்க விரும்புகிறார்கள்.

 இ) 30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர் தங்களை ஏதாவது ஒரு கட்சியுடன் முன்னரே அடையாளப்படுத்திக் கொண்டுள்ளனர்.  கட்சியைத் தாண்டி மாற்றத்தை வரவேற்கும், நல்ல மனிதரைத் தேர்ந்தெடுக்கும் மனப்போக்கு இவர்களிடம் குறைவாகவே உள்ளது.

 ஈ) இளைஞர்களில் பெரும்பாலானோர் தேர்வு பாஜக கூட்டணி அதனால் கடலூரில் தேமுதிக வரலாம்.  30 வயதுக்கு மேற்பட்டவர்களில் பெரும்பாலானோர்களின் தேர்வு அதிமுக.

4. பணம் பெற்றுக்கொள்வதும், அதற்கு 'துரோகம்' செய்யாமல் ஒட்டளிக்கும் போக்கும் மிகச் சிறிய அளவில் குறைந்துள்ளது(மிகப் பெரிய அளவில் மகிழ்ச்சிக்குரிய விஷயம்).

5. ஆம் ஆத்மி கட்சிக்காரர்கள் பணத்தின் மூலம் வாக்குப் பெறுவதில்லை என்றாலும், குறைந்தபட்சம் ஒரு பரப்புரையோ, வீடுதேடி வந்து வாக்காளர்களை சந்திப்பதோ, கூட்டமோ, தங்கள் கொள்கைகள், வாக்குறுதிகளை சொல்வதோ வேண்டும்.  ஆனால் இந்த குறைந்த பட்ச செயல்களில் கூட அவர்கள் ஈடுபடவில்லை, டெபாசிட் கண்டிப்பாக வாங்க முடியாது.  பதியப்பட்ட ஒட்டுமொத்த ஓட்டுகளில் 2 முதல் 5% வரை பெற்றாலே பெரிய விஷயம்.

 ஆம் ஆத்மி கட்சி பற்றி பேசும் போது நண்பன் ஒருவன் 'டேய், உனக்கு தெரியும், எனக்கு தெரியும்.  எங்க சித்தப்பாவுக்கு ஆம் ஆத்மி பத்தி தெரியுமா? எங்க ஆயாவுக்கு தெரியுமா? அவங்களுக்கு தெரிஞ்சது ரெட்டல, உதயசூரியன் தான்.  ஆம் ஆத்மி கட்சில யார் நிக்கறா? அவங்க சின்னம் என்னனு தெரியனும்னா கூட நம்ம ஊர்பக்கம், தெருபக்கம் ஆம் ஆத்மி சார்பா யாராவது வந்திருக்கனுமே.. அதுக்கு கூட யாருமே வரலியே' என்றான்.  சரியென்பது போலதான் எனக்கும் படுகிறது.

சரி இப்ப conclusion என்னனா? கடலூர் தொகுதி அதிமுகவுக்கு இல்லனா தேமுதிகவுக்கு போகும்னு தெரியுது.  மே 16-ந்தேதி சாயங்காலமா கேட்டீங்கனா correct-ஆ யாருக்குனு சொல்லிடுவேன்.

Tuesday, April 22, 2014

தொழில்நுட்ப உலகம் ஒரு பார்வை

முகநூல் நிறுவனம் ஹேக் (Hack) என்கிற புதிய நிரல் மொழியை அறிமுகப்படுத்தவுள்ளது.

டிவிட்டர், தனது இசைக்கான செயலியை நிறுத்தவுள்ளது.

ஆங்கிரி பேர்ட்ஸ் விளையாட்டின் செல்வாக்கு குறைந்து அதன்பிறகு கேன்டி கிரஷ்-ன் சகாப்தம் ஆரம்பித்தது.  தற்போது இவ்விரண்டையும் தாண்டி ஃபிளேப்பி பேர்ட்-ம் 2048 என்கிற எண் விளையாட்டும் மிக வேகமாக தனது பயனர் அளவினை சேர்த்துவருகின்றன.

சாம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி 5 வகை நுண்ணறிபேசிகளை மார்ச் 27 அன்று இந்தியாவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

அமேசான், மைக்ரோசாஃப்ட் போன்ற தொழில்நுட்ப ஜாம்பவான்களைத் தொடர்ந்து தற்போது சிஸ்கோ நிறுவனமும் மேகக் கணிமையில் களமிறங்கவுள்ளதாக அறியப்படுகிறது.


அலைபேசி தயாரிப்பு நிறுவனமான லாவா 2015 மார்ச் வாக்கில் தங்கள் நிறுவனத்தினை பில்லியன் டாலர் மதிப்புடையதாக மாற்ற வேண்டும் என திட்டம் வகுத்துள்ளது.

கூகுள் நிறுவனம் ஒரு நுண்ணறி contact lens -ஐ உருவாக்கி வருவதாக தகவல்கள் கசிந்துள்ளது.  இது, மனிதனின் இரத்த குளுக்கோஸ் அளவை தானாகவே குறிப்பிட்ட இடைவெளிகளில் பதிவுசெய்துகொள்ளும் என்று கூறப்படுகிறது.  இது மட்டும் சாத்தியப்பட்டால் சர்க்கரை வியாதியஸ்தர்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

2014-ம் ஆண்டில் உலகளவில் நுண்ணறி அலைபேசி பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 1.75 பில்லியன் அளவிற்கு அதிகரிக்கும் என்று eMarketer எனும் நிறுவனம் தெரிவித்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(28-04-13 முதல் 04-05-13வரை)

மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட, எதிர்பார்க்கப்பட்ட ஃபேஸ்புக்கின் ஃபேஸ்புக் ஹோம்(Facebook Home) ஆண்ட்ராய்டு ஆப்(App) வெளியிடப்பட்ட 3 மூன்று வாரங்களில் பயனர்களிடமிருந்து எதிர்மறையான பின்னூட்டங்களையேப் பெற்றுள்ளது.  கூகிளின் பிளே ஸ்டோரில் சுமார் 15,000-க்கும் மேற்பட்ட பயனர்கள் இதற்கு 1 நட்சத்திர (மொத்தம் 5 நட்சத்திரம், அதாவது 1/5 மதிப்பீடு) மதிப்பையே வழங்கியுள்ளனர்.

வாட்ஸ்ஆப் போன்ற நுண்ணறிபேசி குறுந்தகவல் பரிமாற்றிகளால் பரிமாறப்படும் குறுஞ்செய்திகளின் எண்ணிக்கை வழமையான குறுஞ்செய்தி அனுப்பும் எண்ணிக்கையைவிடக் கூடியுள்ளதாக புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் தனது கூகுள் நவ்(Google Now) எனும் பேச்சு சார்ந்த நுண்ணறி தேடல் மற்றும் இன்ன பிற காரியங்களைச் செய்யும் ஆண்ட்ராய்டு அப்ளிகே ஷனை முன்னரே அறிமுகப்படுத்தியிறுந்தது.  தற்போது இதை ஆப்பிளின் ஐபோனுக்கும் இலவச ஆப்(App) ஆக தரவுள்ளது.  ஆப்பிளும் கூகுள் நவ் போல சீரி(Siri) என்ற பெயரில் பேச்சு சார்ந்த ஒரு தேடலை அறிமுகப்படுத்தியிருந்தது ஆனால் அது கூகுள் நவ் போல் சிறப்பானதாக இல்லை.

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் 1 மேசைக் கரண்டி தண்ணீர் மூலம் மொபைல், கேமரா போன்ற மின் சாதனங்களுக்கு மின்னேற்றம் அளிக்கும் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளனர்.  பவர்டெரெக்(PowerTrek) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தக் கருவி மூலம் 3 வாட் வரை மின்சாரம் தரமுடியும் எனக் கூறப்பட்டள்ளது.

இந்திய நுண்ணறிபேசி(SmartPhone) தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ்(Micromax) தனது முதல் முப்பரிமாண(3D display) திரையுடன் கூடிய நுண்ணறிபேசியை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.  கேன்வாஸ் 3D(Canvas 3D) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த நுண்ணறிபேசியின் முப்பரிமாண அனுபவத்தைப் பெற தனியா கண்ணாடி எதுவம் தேவையில்லை.  இதன் விலை இந்திய ரூபாய் 9,999 ஆக இருக்கும் போலத் தெரிகிறது.



மேலும் படிக்க:
இதற்கு முந்தைய வார தொழில்நுட்ப செய்திகளைப் படிக்க -> இங்கே சொடுக்கவும்
இதற்கு அடுத்த வார தொழில்நுட்ப செய்திகளை படிக்க ->