Tuesday, November 19, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(17-11-13 முதல் 23-11-13வரை)

பயனர்களின் தகவல்களைத் தரக்கேட்டு 2013-ம் ஆண்டின் முதல் அரையாண்டில் மட்டும் இந்தியாவிடமிருந்து 2691 கோரிக்கைகள் தங்களுக்கு வைத்துள்ளதாக கூகுள் கூறியுள்ளது.  இவ்வித கோரிக்கைகளில் அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.

கேண்டி கிரஷ் சாகா விளையாட்டு 1/2 பில்லியன் (500 மில்லியன் அதாவது 50 கோடி) பயனர்களால் தரவிறக்கி/நிறுவப்பட்டு பயன்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளது.  இவ்விளையாட்டானது ஐஓஎஸ், ஆண்ட்ராய்டு இயங்குதளங்கள் மட்டுமின்றி முகநூல்(facebook)-லும் விளையாட ஏதுவான ஒன்றானதால் இது சாத்தியப்பட்டுள்ளது.

கூகுளின் நெக்சஸ் 5, இந்தியாவில் அடுத்த வாரத்தில் கிடைக்கும்.  இதன் விலை இந்திய ரூபாய் சுமார் 30,000 ஆக இருக்கும் என்றும் அறியப்படுகிறது.

சமூக வலைதளமான டிவிட்டரைப் பயன்படுத்துவதில் சவுதி அரேபியா முதலிடத்தில் உள்ளது.  இந்தியா 21-வது இடத்தில் உள்ளது.

சச்சின் டெண்டுல்கர் அனைத்துவிதமான துடுப்பாட்டங்களிலிருந்தும் கடந்த 16 நவம்பரன்று முடிந்த மேற்கிந்தியத் தீவுகளுக்கெதிரான தேர்வுத் துடுப்பாட்டத்தோடு ஓய்வு பெற்றார்.  இதையொட்டி பிசிசிஐ(BCCI) #ThankYouSachin என்கிற அடையாளச் சொல்லோடு கூடிய டிவிட்டர் பரப்புரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது.  இது 3 மில்லியனுக்கும் அதிகமான கீச்சுகளைப் பெற்றது.

புதிய நுண்ணறி அலைபேசி இயங்குதளங்களில் ஒன்றான டைசன்(Tizen) என்கிற இயங்குதளத்தை சாம்சங் நிறுவனம் பயன்படுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தியான்கே-2 உலகின் மிக வேகமான மீகணினி(Super Computer) என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதன் வேகம் 33.86 பெடாஃபிளாப்/வினாடி ஆகும்.

இந்தியா, உலளவில் முகநூல் பயனர்களின் எண்ணிக்கையில் 2016-ம் ஆண்டு வாக்கில் முதலிடம் பெறும் என தெரிவிதாக கூறப்பட்டுகிறது.

கூகுள் நிறுவனம் தனது அணிகணினியான கூகுள் கிளாஸ்(Google Glass)-க்கான செயலி உருவாக்க கிட் (App Development Kit)-ஐ வெளியிட்டுள்ளது

இந்திய இரயில்வேயின் ஐஆர்சிடிசி, ஈ-வேலட் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.  இதன் மூலம் பயனர்கள் தங்கள் முன்பதிவு சீட்டைப் பெறுவது எளிதாகம் என கூறப்படுகிறது.  இதுவரையில் பயனர் தங்கள் பயணச்சீட்டுக்கான பணத்தை கடன் அட்டை(Credit card)/இணைய வங்கி சேவை(internet banking)/பற்று அட்டை(Debit card) மூலமே செலுத்திவந்தனர்.  இப்புதிய திட்டத்தில் பயனர் ஒரு குறிப்பிட்ட அளவு பணத்தை ஐஆர்சிடிசி-யில் தனது பயனர் கணக்கில்  முன்னரே செலுத்தி அதிலிருந்து பயணச்சீட்டுக்கான பணத்தை கட்டலாம்.

ஆன்ட்ராய்டு, ஆப்பிள், விண்டோஸ் போன்ற நுண்ணிறி பேசிகளில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டு வரும் வாட்ஸ்ஆப் எனும் பேச்சு செயலி தற்போது நோக்கியாவின் ஆஷா 501 அலைபேசிகளிலும் பயன்படுத்தமுடியும்

எச் டி சி நிறுவனம் தனது ஒன் மேக்ஸ் (One Max) வகை நுண்ணறிபேசியை இந்தியரூபாய் சுமார் 61,490 -க்கு வெளியிட்டுள்ளது.

டேனியல் மோரெல் எனும் புகைப்பட பத்திரிக்கையாளர், தனது அனுமதியின்றி தன் புகைப்படங்களைப் பயன்படுத்திய இரண்டு நிறுவனங்களின் மீது வழக்கு தொடர்ந்து சுமார் $1.2 மில்லியன் நஷ்ட ஈடாகப் பெற்றுள்ளார்.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(24-11-13 முதல் 30-11-13வரை)

சோனி நிறுவனம் தனது எக்சுபீரியா(xperia) வகை நுண்ணறிபேசி வகைகளில் புதியதாக இசட்1எஸ்(Z1S) என்கிற பெயரில் புதியதாக ஒரு அலைபேசியை வெளியிடவுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எக்சுபாக்சு ஒன்(Xbox One) விளையாட்டுப் பெட்டியின் அறிமுக நாளன்றே 1 மில்லியன் பெட்டிகளை விற்று சாதனைப் படைத்துள்ளது.

கேரள சுற்றுலாத்துறை, முகநூலுடன் இணைந்து  தனது சுற்றலாதலங்களைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் மேம்படுத்த உள்ளது. Kerala Tourism page in facebook

தனது மின்அஞ்சல் பயனர்களின், மின்னஞ்சல்களை அவர்களில் அனுமதியின்றி படிப்பதாக யாகூ நிறுவனத்தின் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இன்போசிஸ் நிறுவனம், அயல்நாட்டில் பணிபுரியும் தனது மூத்த பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடிவெடுத்துள்ளது.

போர்ப்ஸ்(Forbes) நிறுவனம் உலகின் மிக மதிப்புடைய வணிக நிறுவனமாக ஆப்பிளைத் தேர்ந்தெடுத்துள்ளது.

ஆப்பிள் நிறுவனம் புகைப்படம் எடுத்தப் பிறகு குவிப்பு மையத்தை மாற்றிப் பார்க்கும்(refocusable) ஒரு புதிய தொழில்நுட்படத்தை உருவாக்கியுள்ளது, மேலும் அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளது.

ஐகேன்(ICANN - Internet Corporation for Assigned Names and Numbers) புதியதாக டொமைன் பெயர்களை இணையப் பயன்பாட்டிற்காக சேர்க்கவுள்ளது.  இதில் .clothing, .guru, .bike போன்றவையும் அடக்கம்.

பிளாக்பெரி நிறுவனம் தனது அலைபேசி செயலியான பிபிஎம்(BBM - BlackBerry Messanger)-ஐ இந்தியாவின் சுதேசி அலைபேசி தயாரிப்பு நிறுவனங்களான மைக்ரோமேக்ஸ், ஸ்பைஸ் மற்றும் ஸென் போன்றவற்றின் நுண்ணறிஅலைபேசிகளுடன் இயல்பிருப்பாக(Pre installed) தரவுள்ளது.

மத்திய தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை, சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் திரு. கபில்சிபல் ட்விட்டரில் தனது பயனர் கணக்கைத்(@KapilSibal) தொடங்கியுள்ளார்.


இந்தியாவின் மூன்றாவது மிகப்பெரிய தகவல் தொழில்நுட்ப மற்றும் மென்பொருள் நிறுவனமான விப்ரோவின் மீது சுமாராக 17 கோடி இந்திய ரூபாய் வரி ஏய்ப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

உலகளவில் மிக அதிக பயனர்களை உடைய அலைபேசி சேவை வழங்கு நிறுவனமான சைனா மொபைல் வரும் டிசம்பர் 18 அன்று 4ஜி சேவையை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.

டிசிஎஸ் நிறுவனம் தனது மிகப்பெரிய விநியோக மையத்தை ஹைதராபாத்தில் நிறுவவுள்ளதாக தெரிகிறது.

2013-ம் ஆண்டின் 3-வது காலாண்டின் மொத்த அலைபேசிகளின் விற்பனையில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை மட்டுமே 55% இருப்பதாக காட்னர் நிறுவனம் கூறியுள்ளது.
தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(10-11-13 முதல் 16-11-13வரை)

ஸோலோ தனது Q9000 பேப்லேட்டை இந்திய ரூபாய் 14,999 -க்கு வெளியிடவுள்ளது.  இது 5.5 இன்ச் தொடுதிரை, 13 மெகா பிக்சல் கேமரா மற்றும் 2600 மில்லி ஆம்ப் மின்கலத்துடன் வரவுள்ளது.

ஆப்பிள் நிறுவனம் வளைந்த திரையுடன் கூடிய ஐபோனை உருவாக்கவுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

இளைய தலைமுறையினர் குறிப்பாக பதின்ம வயதினர் (அ) விடலைப் பருவத்தினர்(Teen age) பேஸ்புக்கைக் காட்டிலும் வாட்ஸ்ஆப்(WhatsApp), வீசாட்(WeChat)  போன்ற அலைபேசி செயலிகளை அதிகம் பயன்படுத்துவாக அறியப்படுகிறது.

இந்திய அலைபேசி தயாரிப்பு நிறுவனமான மைக்ரோமேக்ஸ் அடுத்த காலாண்டிலிருந்து, தனது அலைபேசி கட்டமைக்கும் தொழிற்சாலையை இந்தியாவுக்குள்ளேயே நிறுவி கட்டமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.

2019-ம் ஆண்டில் நுண்ணறி அலைபேசிகளின் விற்பனை 3 மடங்காகும் என்று எரிக்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

கூகுள் நிறுவனம் தனது யூடியூப் நிகழ்பட சேவைப் பயன்பாட்டை மக்களிடம் மேலும் பரவலாகச் செய்ய வெளியிட்ட இந்திய-பாகிஸ்தான் பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட விளம்பரப்படம் பயனர்களிடம் பலத்த வரவேற்ப்பைப் பெற்றுள்ளது. 
யூடியூபில் அவ்விளம்பரப்படத்தின் காணொளி காட்சி



கூகுளின் பலூன் மூலம் வை-பை(Wi-Fi) இணையத் தொடர்பை தரும் திட்டத்தின் பலூன் பூமியை மூன்று முறை வலம் வரும் என்று கூறப்பட்டுள்ளது.  இதற்கு "திட்டம் லூன் (Project Loon)" என்று பெயரிட்ப்பட்டுள்ளது. 
செயல்பாட்டை விளக்கும் காணொளி காட்சி

வைபர்(viber) எனும் இணைய இணைப்பின் மூலம் தொலைபேச உதவும்(ஸ்கைப்(Skype) போலபிரிங்(Fring) போல)  அலைபேசி செயலி உலகளவில் 200 மில்லியனுக்கும் மேற்பட்ட பயனர்களைக் கொண்டுருந்தாலும், இந்தியாவில் இச்செயலி பிரபலமாகவில்லை.  இந்தியர்களை இச்செயலியை பரவலாகப் பயன்படுத்த வைக்கவேண்டும் என்பதே என் விருப்பம் என இந்நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரி தெரிவித்துள்ளார்.

வீடியோகான் நிறுவனம் இந்திய ரூபாய் 8999 விலையில் ஒரு 3ஜி மற்றும் அழைப்பு வசதியுடன் கூடிய VT85C என்கிற பலகைக் கணினியை அறிமுகப்படுத்தவுள்ளது.    7 இன்ச் திரை, டூயல் கோர் கார்டெக்ஸ் ஏ9 வகை இயங்க்கியுடன் கூடிய இது ஆன்ட்ராய்டு 4.2.2 (ஜெல்லி பீன்) பதிப்பு இயங்குதளத்துடன் 2013 இறுதியில் வரவுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு


Monday, November 11, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(03-11-13 முதல் 09-11-13வரை)

பயனர்களின் பெரும் வரவேற்பை தொடர்ந்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தனது பாஸ்போர்ட் சேவா அலைபேசி செயலியை ஆன்ட்ராய்டு இயங்குதளத்தை தொடர்ந்து விண்டோஸ் மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.

உணவக வழிகாட்டி இணையதளமான ஸோமாட்டோ(Zomato) ரூ 227 கோடியை இன்போஎட்ஜ்(InfoEdge) மற்றும் Sequoia ஆகிய நிறுவனங்களிடமிருந்து முதலீடாகப் பெற்றுள்ளது.

பாலிவுட்டின் மெகாஸ்டாரான அமிதாப்பச்சன் தனது டிவிட்டர் கணக்கில் 70 லட்சம் பின்பற்றுபவர்களை(followers) அடைந்துள்ளார்.

ஐகேட்(iGATE) நிறுவனம் சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த யுபிஎஸ்(UBS) நிறுவனத்திடமிருந்து தொழில்நுட்ப சேவைக்கான ஆணையைப் பெற்றுள்ளது.

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது எம்எஸ் ஆபிஸ் மென்பொருளுக்காக ஒரு மிக அவசர சீரமைப்பு நிரல் ஒட்டு(patch fix) ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய நகரங்களின் இணையப் பயன்பாட்டில் மும்பை நகரம் முதலிடம் பிடித்துள்ளது.

விக்கிப்பீடியாவின் நிறுவனரான திரு. ஜிம்மிவேல்ஸ் அமெரிக்காவின் இணைய ஒற்றுபார்க்கும் செயல் இணைய சுதந்திரம் மற்றும் மேகக்கணிமையை மிகவும் பாதிக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

பேஸ்புக், மைக்ரோசாப்ட், கூகுள் ஆகிய மூன்று நிறுவனங்களும் இணைந்து, இணையத் தொழில்நுட்பத்திலிருக்கும் ஓட்டைகளை கண்டறியும் கொந்தர்களுக்கு வெகுமதி அளிக்கவுள்ளன.

பாரத்மேட்ரிமோனி நிறுவனம்(Bharat Matrimony), ஆன்ட்ராய்டு அலைபேசிக்கு தனது புதிய செயலியை வெளியிட்டுள்ளது.  இதன்மூலம் அலைபேசி பயனர்கள், இணையப் பயனர்களைப் போன்றே பாரத் மேட்ரிமோனி தளத்தை அணுக முடியும்.

விண்டோஸ் நிறுவனம் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் உலாவியின் புதிய பதிப்பான 11.0 -ஐ வெளியிட்டுள்ளது.


தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு



Friday, November 8, 2013

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை(27-10-13 முதல் 02-11-13வரை)

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி கோல்டன்(Galaxy Golden) வகை அலைபேசிகளை இந்தியாவில் வெளியிடவுள்ளதாக தெரிவித்துள்ளது.  இதன் விலை சுமார் 52,000 இந்திய ரூபாய்களாக இருக்கும்.

விப்ரோ(Wipro) நிறுவனம் தனது அலைபேசி குறித்தான ஆய்வு மற்றும் உருவாக்கத்திற்கான மையத்தை ஹைதராபாத் நகரத்தில் நிறுவவுள்ளது.

கூகுள் நிறுவனத்தின் முக்கிய சேவைகளில் ஒன்றான யூடியூப் விலையுடன் கூடிய ஒர் இசைச்சேவையை அறிமுகப்படுத்த தயாராகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வருட இறுதியில் (2014-டிசம்பர்) மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தனது 4ஜி வசதியுடன் கூடிய அலைபேசிகளை/கருவிகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக கூறியுள்ளது.

அமேசான்(Amazon) நிறுவனம் தற்போது ஒரு லட்சத்திற்கும் அதிகமான பணியாளர்களைக் கொண்டுள்ளது.

உலக அளவில் சமூக வலைதளங்களில் செலவிடப்படும் நேரத்தில் 65% அலைபேசிகளின் வாயிலாகவே நடைபெறுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

30% அமெரிக்க மக்கள், செய்திகளை முகநூலின்(Facebook) வாயிலாகவே பெறுவதாக ஒர் ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.

கனடாவைச் சேர்ந்த பிளாக்பெரி நிறுவனம் தனது புகழ்பெற்ற பிபிஎம்(BBM) பேச்சு செயலியை(Chat Application)  ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற மற்ற இயங்குதளங்களுக்கும் உருவாக்கியுள்ளது.  மேலும் இந்த செயலி 10 மில்லியனுக்கும் மேலான தடவை தரவிறக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளது.

சேப்(SAP) நிறுவனத்தின் முதன்மை நிதி அதிகாரி, தாங்கள் பிளாக்பெரியை வாங்குவதற்கான போட்டியில் (விருப்பம்) இல்லை என ஜெர்மன் பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

ஆப்பிள் தனது ஐஃபோன்6-ஐ 2014 வேனில் காலத்தில் வெளியிடவுள்ளதாக அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது.

கூகுளும் நுண்ணறி கைக்கடிகார தயாரிப்பில் ஈடுபடவுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.

தொழில்நுட்ப உலகம் கடந்த வாரம் ஒரு பார்வை முந்தைய வாரப் பதிவு